'கிராமம்..."



'வந்த வேகத்திலேயே
திரும்பிவிடலாமா
என்றது மனது
ஆசை ஆசையாய் வந்திறங்கினேன்
எப்போதோ
துறந்து சென்ற கிராமம்தான்
பச்சை வயல்கள் வெள்ளை நாரைகள்
பருத்த மரங்கள் கருத்த மங்கைகள்
என்று
சோளச்சோறும் கருவாட்டுக்குழம்பும்
பித்தளைத்துரக்கு வாளியில்
மணத்துக் கொண்டிருந்த
ஊர்தான்
நெடுஞ்சாலையை அடைகாத்துக் கொண்டிருந்த
மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன
பச்சை வயல்கள்
வீடு கட்ட கூறுபோடப்பட்டன
குருவிகள் நாரைகள்
எதையூம் காணவில்லை
கம்மாயில் மீன்களின்றி
வெடித்துக் கிடந்தது
மண்
தோட்டக்காரனுக்கு தெரியாமல்
ஏறிப்பறித்த மாங்காய்கள்
இப்போது
அண்ணாச்சி கடைகளில்
எடைபோட்டு விற்கப்படுகின்றன
ரீசார்ஜ் கடைகளும்
ப்ளக்ஸ் பேனர்களும்
ப்ளாஸ்டிக் குப்பைகளும்
ஊரை விழுங்கிக் கொண்டிருந்தன
ஓசியில் பறித்துத் தின்ன
வெள்ளரிக்காய் கொடுக்காப்புளி கூட
ஆனை விலை விற்கிறது
விவசாயம் செய்து கொண்டிருந்த
எம்மக்கள்
ப்ளாட் விற்றுக் கொடுத்தால்
காசு கிடைக்குமென்று
செல்போன் சகிதம்
ஆங்காங்கே
வெள்ளையூம் சொள்ளையூமாய்
காத்துக் கிடந்தார்கள்
விற்கிற விலைவாசி
அத்தனை பேர் முகத்திலும்
அறைந்திருப்பதை
உணர முடிகிறது
கிளம்பிவிடலாம்
பாரதிராஜாவோ பாலாவோ
சினிமாவில் கிராமத்தைக் காண்பித்தால்
பார்த்துக் கொள்வோம்
திரும்பிவிட்டேன்
நெஞ்சு கனக்க'
Previous
Next Post »