சிறுகதை: "சென்னையில் இன்னொரு நாள்......" -விஜயநிலா


முன்குறிப்பு:இந்த கதையை "முரண்-2 " என்ற தலைப்பிட்டும் வாசிக்கலாம். இந்த கதையை படமாக எடுத்தால் கேரக்டர்களுக்கான என்னுடைய சாய்ஸ் அருண்விஜய் மற்றும் மாதவன்.

  என்னுடைய கம்பார்ட்மென்ட்டுக்கு வந்து லக்கேஜை கழற்றி விட்டு அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.இன்ஹேலர் எடுத்து நிதானமாய் ஒரு இழுப்பு இழுத்தேன்.எப்போதும் உடன் வைத்திருப்பேன்.எப்போதாவது தேவைப்படும்.காலை நீட்டி அமர்ந்து கொண்டு ஐபேடில் கேம் விளையாடலாம் என்று திரையை தொட்டபோது அவன் எனக்கு எதிரே வந்து அமர்ந்தான்.
 இந்த கால இளைஞர்கள் போல ஒரு காதில் கடுக்கனும் கலைந்த தலையூம் மீசையை மோவாயில் வளர்ப்பதுமாக இல்லாமல் வெள்ளை சட்டை நேரோ பான்ட்டில் சற்று லேட்கம்மராக இருந்தான்.என்னைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தான்.
 அவன் அடுத்து என்னிடம் ஏதாவது பேசுவதற்குள் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன்.நான் ஷங்கர்நாத்.அந்த காலத்து எம்பிஏ.அதனால் ஒரு எம்என்சி கம்பெனியில் மார்க்கெட்டிங் வைஸ் பிரசிடன்ட்டாக பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறேன்.ஒரே மனைவி.ஒன்றுக்கு மேற்பட்ட பெண்நண்பிகள்.குழந்தைகள் இரண்டு பேரும் ஊட்டியில் ரெஸிடென்ஷியல் பள்ளியில் இருக்கிறார்கள்.இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடிகிறது.அவர்களது படிப்பு சமாச்சாரம் பற்றி எனக்கேதும் தெரியாது.அதெல்லாம் அவளது டிபார்ட்மன்ட்.எனக்கு கம்பெனியின் பாலன்ஸ் ஷீட்டும், விற்பனை கிராஃபும்தான் தெரியூம்.
இந்த கதை என்னைப் பற்றியதல்ல.எனவே அவனை முதலில் கவனிப்போம்.அவன் எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டான்.முதல்வகுப்பு பெட்டி.வேறு யாரும் ஏறவில்லை.கல்கத்தாவிற்கு என் பிசினஸ் விஷயமாக சென்று கொண்டிருக்கிறேன்.
 அவன்?
 தெரியவில்லை.என்னிடம் ஏதாவது கேட்கவேண்டும் போல பார்த்தான்.வாட்டர் பாட்டில் எடுத்து மடக்மடக்கினான்.கொஞ்சம் பதட்டத்தில் இருக்கிறானோ.
"ஹல்லோ சார் ஐம் நரசிம்மன்.இன்டர்வ்யூவூக்காக போயிட்டிருக்கறேன்.நீங்க?"
"பிசினஸ் ட்ரிப்"என்றேன்.
"நான் திருச்சி பக்கம்.தாத்தயங்கார்பேட்டை.படிச்சதெல்லாம் செயின்ட் ஜோசப்.இன்னும் சரியா வேலை கிடைக்கலை.இதுவரை பத்து இடத்துல வேலை பார்த்து பாதியில நின்னுட்டேன்"
"ஏன்..ஏதாவது ஒரு இடத்துல நிரந்தரமா அட்லீஸ்ட் ஒரு மூணுவருஷம் இருக்கலாமே.."என்றேன் பொதுவாக ஏதாவது சொல்ல வேண்டுமே என்று.ஆனால் அடுத்து அவன் சொன்ன விஷயம் கொஞம் பயமூட்டியது.
"நான் ஆள்தான் தயிர்சாதம் சார்.ஆனா கை நீட்டிடுவேன் யாராவது தப்பா ஏதாவது செஞ்சா.நான் வேலை பார்த்த அத்தினி இடத்திலயூம் ஹிப்பாக்ரசி.கரப்ஷன்.ஒழுங்கீனம்.யாருமே இந்த லோகத்துல யோக்கியமா இல்லை சார்.."
"அதனால என்னப்பா.நீ உன் கேரியரைப் பார்த்துட்டு போயிட்டிருக்கலாமில்ல.."
"முடியலை சார்..நல்லவனா இருக்கறது தப்பா"
சினிமா கதாநாயகன் போல அவன் அந்த கேள்வியைக் கேட்டதும் என்னைப் பற்றி எனக்கே சிரிப்பு வந்தது.இதே கேள்வியை முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் எனக்கு மாரல் இன்ஸ்ட்ரக்ஷன் வகுப்பு எடுக்க வந்திருந்த ஃபாதர் ராயப்பரிடம் கேட்டிருந்திருக்கிறேன்.
 காரணம் அப்போது நான் இவனை விட பழமாக இருந்தவன்.காலையில் விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லி பூஜை அறையில் பழியாக கிடந்து நாளைக்கு பள்ளிக்கூடத்தில் நடத்தப் போகும் பாடங்களை இன்றைக்கே நெட்ரு போட்டுக்கொண்டு சாதா இந்தியனாக இருந்திருக்கிறேன்.ஆனால் மற்ற பசங்க பிட் அடித்து என்னை விட மார்க் வாங்குவார்கள்.பிடி மாஸ்டரை கரெக்ட் செய்து டிஸ்ட்ரிக்ட் டீமிற்கு கிரிக்கெட் ஆடப் போவார்கள்.அப்புறம் எப்போது நான் மாறினேன் என்று தெரியாது.ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலைக்கு அப்ளை செய்த போது என்னை இன்டர்வ்யூ செய்த பெண்மணி என் எம்பிஏவைப் பார்த்து ஆபீசர் போஸ்ட்டிங்கில் நியமித்தாள்.அப்புறம் எனக்கு அவ்வப்போது கீதாஉபதேசம் எல்லாம் செய்வாள்.மெல்ல மெல்ல நிஜமான உலகம் எப்படி இருக்கிறது.பணமும் பதவியூம் வேண்டுமென்றால் பணத்தை துரத்து என்று கற்றுக் கொடுத்தாள்.ஒரு நாள் அவள் என்னை கெஸ்ட ஹவூசிற்கு வரச் சொல்லி சட்டென்று தன் உடைகளைக் கழற்ற முற்பட்டாள்.
"மேடம்.. வாட்ஸ் ஆல் திஸ்.."
"தபாரு.என்ன இருக்கு பாரு.ஒண்ணுமே இல்லை.எல்லாம் அழியக் கூடியது.ஆனா அழியாதது பணம்தான்.பணத்தை எவ்வளவூக்கு எவ்வளவூ சேர்க்கறியோ அத்தனை சுகங்கள் திகட்டத் திகட்ட கிடைக்கும்.நாளைக்கு நீயே இந்த கம்பெனியன் மேல் மட்டத்திற்கு வரலாம்.வா லெட்ஸ் ஹவ் எ நைஸ் டைம்"என்று அருகில் வந்தாள்.
நான் விலகினேன்.
"யாரையூம் லவ் பண்றியா"
"இல்லை"
"தப்பு தண்டா ஏதும் கிடையாதா.சிகரெட், தண்ணி, பொண்ணுங்க.."
"இல்லை"
"அப்புறம் என்னத்துக்குடா மார்க்கெட்டிங் வேலைக்கு வந்தே.போய் எங்கேயாவது மணியாட்டறதுதான கோவில்ல"என்று என்னை எட்டி உதைத்தாள் பாருங்கள் அங்கேதான் எனக்கான கீதாஉபதேசம் ஏற்பட்டது.
சட்டென்று மாறினேன்.அவளை அள்ளி எடுத்துக் கொண்டு போய் மூர்க்கத்தனமாக இயங்கினேன்.எனக்கு போட்டியாக ஆபீசில் இருந்த அத்தனை பேரையூம் டார்கெட் முடிக்க விடாமல் செய்து வெட்டி வீழ்த்தினேன்.பிசினசில் எதையூம் செய்.அது ஒரு போர்.
தாமஸ் வாட்ஸனோ யாரோ சொல்லியிருந்தான்.இதயத்தில் பிசினசையூம் பிசினசில் இதயத்தையூம் வைத்துக் கொள் என்று.ஆனால் நான் இதயத்திலும் பிசினசிலும் போட்டியின்றி ஜெயிப்பது என்பதை வைத்துக் கொண்டிருந்தேன்.எல்லா இடங்களிலும் வென்றேன்.இது வரை நாலைந்து முறைதான் கம்பெனி மாறியிருக்கிறேன்.இப்போதும் எம்அன்ட் எம்மிலும், டொயோட்டாவிலும் என்னை வந்து விடுமாறு டிமான்ட் செய்கிறார்கள்.போய் விடலாம்தான்.ஆனால் என்னை வேறொரு இட்ச் அறுத்துக் கொண்டிருக்கிறது.
இட்ச்?
ஆம்.இந்த நரசிம்மன் தன் கதையை என்னிடம் அவிழ்ந்து விடுவதற்குள் நான் என் அவஸ்தையை சொல்லி விடுகிறேன்.சின்ன வயதிலிருந்தே எனக்கு அப்படித்தான் நேர்ந்து கொண்டிருக்கிறது.என் தோற்றமோ அல்லது ஸாப்ட்ஸ்போக்கன் நேச்சரோ தெரியவில்லை.என்னை யாரும் கெட்டவன் என்று நம்புவதே இல்லை.
 பள்ளிக்கூடத்தில் என் எதிரே தான் செட் செய்த நாளைய கொஸ்டின் பேப்பரை வைத்து விட்டு வெற்றிலை போட்டுக் கொண்டு வெளியே போய் விடுவார் நாராயணன் வாத்தியார்.நான் பேப்பரை பார்க்க மாட்டேனாம்.நாலு வீடு தள்ளி இருக்கும் உமா வீட்டுக்கு போய் சில வேளைகளில் அம்மா காபிப்பொடி வாங்கி வரச்சொல்வார்.உமாவின் வீட்டில் காப்பிக்கொட்டை வாங்கி, கை மெஷினில் கசப்பு வாசனையாக அரைப்பார்கள்.பொடி வாங்க நான் போய் நின்று கொண்டிருந்தால் நான் இருப்பதையே இலட்சியம் செய்யாமல் உமா புடவை முந்தானை நன்றாக ஆனால் மெதுவாக உதறி உதறி மாற்றுவாள்.நான் அந்த க்ளிவேஜ்களை பார்க்க மாட்டேனாம்.அத்தனை நல்லப்பிள்ளை நான்!
 என்னை கெஸ்ட் ஹவூசில் வைத்து 'மாற்றிய' தாமினி கூட என்னிடம் சொன்னாள்.
"உன் முகத்துல ஒரு இன்னொசன்ஸ் ஒட்டிட்டு இருக்கு.கம்பெனியில நீ கோடி ரூபா திருடிட்டாலும் அதை இன்வெஸ்டிகேட் பண்ண உன்னைத்தான் நியமிப்பார்கள்.இன்ஃபாக்ட் உன்னை மேத்ஸ் பண்ண முடியூமான்னு நானே நாலு மாசமா குழம்பிட்டிருந்தேன்.இந்த இமேஜை அப்படியே பெவிக்கால் போட்டு ஒட்டிக்க.எந்த காலத்துலயூம் உதவூம்"
என் அவஸ்தை இதுதான்.என்னை யாரும் கெட்டவன் என்று நம்ப மாட்டேன் என்கிறார்கள்.அதனால்தான் சென்ற முறை மும்பைக்கு ரயிலில் போனபோது-நான் விமான பயணத்தை விரும்பமாட்டேன்.மல்லையாவின் பாங்க்கரப்டசிக்கு பிறகு எந்த விமான கம்பெனிக்காரனாவது பைலட்டிற்கு சம்பள பாக்கி வைத்திருந்திருந்து அவன்பாட்டுக்கு நடுவானில் ப்ளைட்டை பணால் ஆக்கி விடுவானோ என்ற அற்ப பயம்தான் காரணம்.
என்ன சொல்ல வந்தேன்?
போன ரயில் பயணத்தில்தான் அப்படி ஒரு காரியத்தை செய்தேன்.
அதை சொல்வதற்குள் அந்த எதிர்சீட் இளைஞன் என்னவோ சொல்ல வருகிறான்.அதை முதலில் கேட்போம்.
நரசிம்மன் கையில் அறுபட்ட தழும்பு இருந்தது.அதைப் பற்றி நான் கேட்பதற்குள் அவனே சொன்னான்.
"இது நான் கையை அறுத்துக் கிட்டு தற்கொலைக்கு முயற்சி பண்ண காரியம்.நாலு வருஷம் முந்தி நடந்தது."
"வொய்"
"எனக்கு நடந்த விஷயங்களை கேள்விப்பட்டா உங்களுக்கும் அந்த ஆத்திரம் வரும் சார்"
"கஷ்டமில்லாத ஆட்கள் யாரு இருக்கா.சொல்லு என்ன உன் பிரச்சனை.நிலையான வேலை இல்லதா?"
"இல்லே"
"பின்னே"
"நல்லதுக்கு காலம் இல்லே சார்.கஷ்டப்படறவன் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கான்.ஃப்ராடு பண்றவன் மேலே மேலே போயிட்டே இருக்கான்.தப்பு செய்யறவா யாருக்கும் தண்டனை இல்லாமப் போச்சு"
"தபாரு நரசிம்மன்.உன் பேருதான் கம்பீரமா இருக்கு.ஆள் இத்தனை கோழையா இருக்கக் கூடாது.தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கனும்தான்.ஆனால் திறமையா தப்பு பண்ணினா தண்டனை கிடைக்க வேண்டியதில்லை"
"புரியலை சார்"
"திறமையா தப்பு பண்றதுங்கறதுலயே ஒரு புரொபசனலிசம் இருக்கு.அதை ஒரு கலை நேர்த்தியோட ஒருத்தன் பண்றான்னா அவனுக்கு எதுக்கு தண்டனை கொடுத்து உட்கார வைக்கனும்.சும்மா தத்தியா இருக்கறவன் தப்பு பண்ணாதான் அவனுக்கு தண்டனை கொடுத்து திருத்தனும்"
"என்ன சார் புதுசா சொல்றிங்க.குழப்பமா இருக்கு"
"முதல்ல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க நரசிம்மன்.ஒரு கம்பெனியில நீ வொர்க் பண்றேன்னா அந்த கம்பெனிக்குன்னு ஒரு சிஸ்டம் இருக்கும்.வொர்க் கல்ச்சர் இருக்கும்.ஒரு பாலிசி இருக்கும்.அதை மீறி நடக்கக் கூடாது.அதை புரிஞ்சிக்கிட்டு நடந்தா மேலே மேலே வரலாம்.அதே போலத்தான் தற்போதைய சொசைட்டிக்குன்னு ஒரு சிஸ்டம், கல்ச்சர் இருக்கு.தப்பு பண்ண வாய்ப்பு இருக்கா.திறமையா தப்பு பண்ணு.நீதி போதiனையை எல்லாம் கக்கூஸ் சுவத்துலதான் எழுத முடியூம்.நீ மேல வரனும்னா எதுவூம் செய்யலாம்."
"நீங்க என்னை ப்ரீச் பண்ணறிங்க.தப்பு பண்ணினா தண்டனை கிடைக்குமா கிடைக்காதா?"
"திறமையா தப்பு பண்ணினா தண்டனை கிடைக்காது"
"கொலை பண்ணினா கூடவா"என்றான் நரசிம்மன் எழுந்தவாறு.
"ஆமா.இப்ப நீ என்னை கொலை செய்தா கூட கேட்க ஆளில்லை.கம்பார்ட்மன்ட்ல வேற யாருமில்லை.டிடிஇ இன்னும் வரலை.உன்னை யாரும் பார்க்கலை.அதுக்காக நீ என்னை கொல்லவா போற.."
"யெஸ்"என்றான் பெரிதாக.
"பார்டன்"
"கொலை செய்யப் போறேன்.முத தடவையா.நான் நிறைய பார்த்துட்டேன்.தப்பு பண்ற எவனும் மாட்றதில்லை.தப்பே பண்ணாத எல்லா பேப்பரும் வைச்சிருந்த நான்தான் முக்குக்கு முக்கு டிராஃபிக் சார்ஜன்ட் கிட்ட ஃபைன் கட்டியிருந்திருக்கேன்.நல்லா வேலை பார்த்தும் எந்த இடத்துலயூம் இன்க்ரிமன்ட் கிடைக்காம வெளியில வீசப்பட்டிருக்கேன்.இப்ப புரிஞ்சாச்சு ராசா"
"எ.என்ன"
"தப்பு பண்ணா தண்டனை கிடையாது.இதான் உலக லாஜிக்.சாமி கூட இதில குறுக்க வர முடியாது.அதனால"
என்று அருகே வந்து என் மடியில் கால்களை போட்டு அமர்ந்து கொண்டு என் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான்.
"டேய்.கொஞ்சம் கேளு.உன் தியரி தப்பு.என் தியரியூம் தப்பு."
"என்ன?"என்று கைகளை சற்று தளர்த்தினான்.
"தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கும்"
"எப்படி"
"நீ என்னை உன் விருப்பப்படி கொலை செய்யலாம.அதுக்கு முன்ன ஒரு சின்ன விஷயம் சொல்லிர்றேன்.கேளு"
சொல்ல துவங்கினேன்.நான் சொன்னது இதுதான்.நான்தான சொல்லியிருக்கிறேனே நானொரு கெட்டவன் என்று யாரும் நம்புவதில்லை என்று.அதற்கொரு வாய்ப்பு சென்ற முறை வந்தது.
மும்பைக்கு ரயிலில் பயணம்.இதே போன்ற இரவூ.முதல்வகுப்பு ஏசி கூபேயில் தனி ஆளாக பயணம்.அப்போது அறைக்கதவருகில் வெடவெடவென்று நடுங்கியபடி ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.அவளது உடல் வனப்பைப் பார்த்தால் பிச்சையெடுக்க வந்தவளாக தெரியவில்லை.லாப்டாப் செல்போன் எதையாவது திருடிச் செல்ல வந்திருக்க வேண்டும்.உள்ளே வரச் சொன்னேன்.
தயக்கமாய் அமர்ந்தாள்.அவளை அநேகமாக என் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வேன் என்று எதிர்பார்த்திருந்தாள் போலிருக்கிறது.அவள் கண்களில் விருப்பமாகவூம் உடல்மொழியில் எதிர்ப்பாகவூம் இருந்தாள்.
"கிட்ட வா.."என்றேன்.
"எதுக்கு.."
"ரொம்பநாள் ஆசை.ஒரு கெட்ட காரியம்.அதுவூம் பெரிசா ஒரு கெட்ட காரியம் பண்ணனும்னு.."என்று அவளை இழுத்து அவள் கழுத்தை இதோ இப்போது இந்த நரசிம்மன் நெறிக்க ஆரம்பித்தானே அது போல நெறித்தேன்.அவள் திணறினாள்.கால்களை உதைத்துக்கொண்டாள்.காற்றுக்கு திண்டாடினாள்.துவண்டாள்.
 அவள் உடலை எழுத்து ரயிலுக்கு வெளியே இருட்டில் வீசினேன்.முழுதாய் ஒரு கொலை.நான் கெட்டவன் என்று என் மனதில் உள்ள ஏதோ ஒரு உணர்வை திருப்தி செய்த மகிழ்ச்சியில் இன்ஹேலரை இழுத்துக் கொண்டேன்.
இப்போது சொன்னே;.
"பார்த்தாயா.உன் தியரி தப்பு.நீ என்ன சொன்னே தப்பு செய்தா தண்டனை கிடைக்காதுன்னு.எனக்கு தண்டனை உன் மூலமா கிடைக்குது பாரு.போன தடவை ரயில்லதான் நான் கழுத்து நெறிச்சி கொலை செஞ்சேன்.இந்த தடவை நீ என்னை கொலை செய்யற கழுத்து நெறிச்சி.தப்புக்கு தண்டனை கண்ணெதிர்ல கிடைக்கப் போகுது பாரு"
"அதாவது இப்ப நான் உங்களை கொலை செய்தா தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்னு ஆகுது.இல்லையா.."
"ஆமா.."
"ந்நோ.நான் உங்களை கொல்ல மாட்டேன்.தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கக் கூடாது.அதான் இந்த சொசைட்டியோட சிஸ்டம்.கல்ச்சர்.பிழைச்சிப்போ"என்று நகர்ந்து உட்கார்ந்தான்.
இன்ஹேலர் எடுத்து இழுத்துக்கொண்டேன்.ஆஸ்த்மா.அவன் நெறித்த இடங்களில் கழுத்து நரம்புகள் வலித்தன.
"குட்பை மிஸ்டர்"என்றான் நரசிம்மன்.
"என்னப்பா எதுக்கு வெளியில போற.."
"இந்த சொசைட்டியோட சிஸ்டம் எனக்கு ஒத்து வரலை சார்.வரேன்"என்று அவன் வெளியே குதித்தபோது ரயில் ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்தது.இருட்டில் அவன் எங்கே குதித்தான் என்று தெரியவில்லை.
அப்புறம் நான் கல்கத்தா ட்ரிப் முடித்து சென்னை திரும்பி விட்டேன்.அலுப்பாக இருந்தது.சென்னை வெய்யில் ஏசியையூம் காரில் துளைத்தது.கீழே இறங்கி நடக்க வேண்டும் போலிருந்தது.மீனம்பாக்கம் சிக்னல் தாண்டி ஒரு இடத்தில் பான்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு நான் நடந்தபோதுதான் அந்த சம்பவம்.
ஒரு கொசு மருந்து அடிக்கிற லாரி மஞ்சளோ வேறு என்னமோ ஒரு நிறத்தில் ர்ர்ர்ரென்று வந்து கொண்டிருக்க கருப்பாக அடர்த்தியான புகை என் முகத்தில் மோதியதில் எனக்கு நினைவூ தப்பியது.பாக்கெட்டில் கை விட்டு இன்ஹேலரை மறுபடி தேடினேன்.காரிலேயே விட்டு விட்டு வந்திருந்தேன்.
 மூச்சு விட முடியாமல் சுவர் ஓரமாக நான் விழுந்தபோது என் கடைசி மூச்சி பிரிந்தபோதுதான் அந்த சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரை பார்த்தேன்.
 சுவரிலிருந்த போஸ்டரில்-
சரத்குமார் முறைத்தவாறு நின்று கொண்டிருக்க-
 நரசிம்மன் ஐபிஎஸ் என்று அவர் காலருகே எழுதியிருந்தது.

                                                -----------------------
Previous
Next Post »