'எங்கேயோ
ஏதோ தவறென்று புரிகிறது
வடக்கத்தி சேனல்களில்
அனல் பறக்கிறது
லஞ்சலாவண்யக்கொடிகள்
மூவர்ணக்கொடியை விட
உயரேதான் பறக்கிறது
சாலையில்
தினம் யாராவது சாகிறார்கள்
எங்காவது குண்டு வெடிக்கிறது
புதுப்பட விளம்பரங்கள்
டிவிக்களில்
வந்து வந்து போகின்றன
என்ன விலைக்கு
தங்கம் விற்றாலும்
எல்லா கல்யாண மண்டபங்களும்
அட்வான்சாக நிரம்பி விடுகின்றன
நகருக்கு அருகே
வீட்டடி மனை என்றே
பச்சை வயல்களை
காயடித்து விடுகிறார்கள்தான்
எவர் முகத்திலும்
நட்பில்லை
ஓடு..வேலை செய்..பணத்தை வாங்கு
வீடோ நகையோ
வீட்டு உபயோகப் பொருளோ
எதையாவது
வாங்கிக்கொண்டே இரு
என்கின்றன விளம்பரங்கள்
இப்படியேதான்
ஒவ்வொரு பொழுதும் போகிறது
ஆனாலும்
இந்த தேசத்தை
வெறுக்க முடியவில்லை
இங்கே பிறந்து விட்டதாலா
இல்லை
வேறு தேசங்கள் பற்றி தெரியாததாலா
தெரியவில்லை'
Previous
Next Post »