அதென்னவோ தெரியவில்லை...



  நேற்று நாள் முழுக்க முகப்புத்தகத்தில் சுஜாதாக்கிழமை என்று சொல்லும் அளவிற்கு எல்லாரும் எழுதித் தள்ளிவிட்டார்கள்.நாமும் அது போல ஏதாவது எழுதவில்லை என்றால் வஸந்துக்கு முன்னால் பனியன் வாசகத்துடன் வரும் டிஷர்ட் பெண்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று இந்த சின்னப் பதிவூ.
 கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.அப்போதெல்லாம் சென்னை சென்றால் பாரிஸ்கார்னரில் இறங்கி அங்கிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு செல்வது வழக்கம்.வேற்றுகிரக ஆசாமிகள் மாதிரி பத்திரிகை அலுவலகங்களில் உ.ஆ.க்கள் அமர்ந்திருப்பார்கள். வா என்றௌ போ என்றௌ சொல்ல மாட்டார்கள்.எப்போதும் நியூஸ்பிரின்ட்டுகளின் உபசேர்க்கை மாதிரி ஒரு வித மத்தியான நேரத்து நாட்டுக் கோழி மாதிரி தலையை திருகிக் கொண்டு விட்டத்தைப் பார்ப்பார்கள்.சரி கிளம்பு என்று அர்த்தம்.
 அது போன்ற சமயங்களில் என்ன ஆனாலும் சரி என்று குமுதம்மையூம் சாவியையூம் பார்த்து நேர்ந்து கொள்வது வழக்கம்.
 சாவி ஒரு தம்மாத்துரண்டு அலுவலகம்.கார்ஷெட்டில் இருப்பார்கள்.அங்கேயூம் நாட்டுக் கோழிகள்தான்.ஆனால் அவை வேறு தினுசாக இருப்பார்கள்.வருபவர்களை உற்சாகமாக பேசியனுப்புவார்கள்.ஆனால் குமுதம் மட்டும் இரும்புக்கோட்டை.ஆனால் உள்ளே முரட்டு சிங்கம் ஏதும் கிடையாது.
 குமுதத்தில் எப்போது போனாலும் துரைராமச்சந்திரனோ அல்லது ப்ரியாகல்யாணராமனோ அல்லது அது போன்ற இளம் உ.ஆ.க்கள் வெளியே வராந்தாவில் காணாமல் போன மாதிரி நிற்கும் நம்மிடம் வந்து சன்னமாக ரெண்டு வார்த்தை பேசி விட்டு எதுவாக இருந்தாலும் தபால்ல அனுப்புங்க என்று மறைந்து விடுவார்கள்.
 கொட்டாம்பட்டி மேலுரர் போன்ற ஏரியாக்களில் திருவிழா சமயங்களில் பீமபுஷ்டி அல்வா எம்ஜிஆர் ரஜினியூடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது போன்ற திடீர் ஸ்டுடியோக்களின் அருகே கலர் கலராக கோடு போட்டு பூப்போட்ட (வெள்ளை பேக்ரவூன்ட் முக்கியம்) சட்டைத் துணியை பேல் பேலாக வைத்திருப்பார்களல்லவா அதில் எடுத்துப் போட்ட மாதிரி ஜிங்கிச்சா சட்டையணிந்திருக்கும் ஒரு நபர் கருப்புக் கண்ணாடியை (அப்போதெல்லாம் எம்ஜிஆர் கலைஞரிசம்.க.க.போட்டுக் கொண்டு இமேஜ் மெயின்டயின் பண்ணுவது) கழற்றாமல் வந்து உட்காரும் லேனா தமிழ்வாணன் சரியாகப் புரியூம்படி குமுதம் என்றால் என்ன என்று ஒரு முறை சொன்னார்.
'தபாருங்க விஜயநிலா.குமுதத்துல உங்க கதை வரனும்னா நீங்க குமுதத்துக்கு கதை கொடுக்கக் கூடாது.மத்த எல்லா பத்திரிகையிலயூம் உங்க கதை பப்ளிஷ் ஆகி நீங்க பிரபலமாக இருக்கனும்.இல்லைன்னா பத்திரிகைகளை விட பெரிய மீடியமான சினிமால நீங்க இருக்கனும்.சினிமால நீங்க வந்துட்டா எது எழுதினாலும் போடுவோம்"
 புரிந்தது.
 குமுதத்தில் வெளி ஆட்களுக்கு கதை எழுத சந்தர்ப்பம் தர மாட்டார்கள்.அப்படியே தருவதென்றாலும் கிருஷ்ணாயில் வண்டியில் மண்ணெண்ணை அளந்து ஊற்றுவது மாதிரி ஒரு பக்கக் கதை தருவார்கள்.ஆனால் பெரிய கதை எழுதனும் என்றால் என்னவாக ஆகியிருக்க வேண்டுமென்று கலர் பூ சட்டைக்காரர் சொல்லியிருப்பது புரிந்தாலும் குமுதத்துல எழுதிரனுமேன்னு மனசில அரிப்பு.
 அப்ப திருச்சியில் குமுதத்துல இருந்து சிறுகதைப் போட்டி பிஷப்ஹீபர் கல்லுரியில் பரிட்சை ஹால்ல உட்கார வைச்சி எழுத வைச்சாங்க.அங்க வந்திருந்த பால்யூவைப் பார்த்ததும் எனது குமுதம் அர்ஜ் பற்றி அவர்கிட்ட சொன்னபோது கதை கொடுங்க சார்கிட்ட குடுத்துப் பார்க்கறேன் என்றார்.
 இங்க அவர் சார்னு சொன்னது அப்போது குமுதத்தில் ஆசிரியராக இருந்த சுஜாதா!
 அதற்கு இரண்டு வாரம் கழித்து குமுதம்மில் "இயந்திர மனைவி" என்ற எனது பெரிய சிறுகதை குமுதத்தில் வந்திருந்தது.
 அது ஒரு சைஃபை (scifi) சிறுகதை.
 சுஜாதாவூக்கும் பால்யூவிற்கும் டன் டன்னாக மானசீக நன்றிகள் பல.

keywords; kumudam weekly,writer sujatha,cinema,story writing,tamil weeklies
Previous
Next Post »