வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்


 வீட்டில் சாம்பிராணி தீர்ந்து போய் விட்டது.எப்போதும் ரிசர்வ்வில் ஸ்டாக் இருக்கும்.காரணம் அத்தனை சாமிகள் பூஜையறைக்குள் கூட்டணி வைத்திருப்பதால் பூஜை சாமான்களை மட்டும் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.

 சரி சாயந்தரம் வெளியே சென்று வரும்போது சாம்பிராணியை வரலாம் என்று கிளம்பினேன்.மழை வந்தாலும் வருவேன் என்று எச்சரித்தது.நேற்றைய மழையில் அடுத்த வீட்டு டிவி பணால்.எதனால் இதனை கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை.காலம் மாறி விட்டதால் இப்போது டாப்லட் சாம்பிராணி லாப்டாப் சாம்பிராணி என்றெல்லாம் கிடைக்குமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு கிளம்பினேன்.

 ஒரு சாம்பிராணி டப்பா வாங்கி வருவதாகத்தான் திட்டம்.அப்படியே இதை வாங்கலாமே.இதில் ஏதோ ஆஃபர்னு போட்டிருக்கானே.அதை வாங்கிடலாமா என்று அடுக்கியதில் பில் தொகை எகிறியது.

 அப்போதுதான் கவனித்தேன்.

 மக்கள் படு ரோபோத்தனமாக எதை எதையோ வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.வாங்குவதற்கு சளைத்த மாதிரி தெரியவில்லை.இத்தனைக்கும் பாதி பேர் பாலச்சந்தர் படங்களில் எல்லாம் வருகிற ஆசாமிகள் மாதிரி நடுத்தர வர்க்கத்தனமாக இருந்தார்கள்.

 வாங்கித் தள்ளுவதற்கு ஒரு போட்டி வைத்தால் அத்தனை ஆளும் முதல் இடத்தில் வந்து நிற்பார்கள் போலிருந்தது.காஸ்மெடிக் அயிட்டங்கள் எல்லாம் மிளகாய் பஜ்ஜி போல பறந்து கொண்டிருந்தன.இது மட்டுமா என்றால் வெளியே நின்று கொண்டே காளான் சூப் காளான் குருமா சில்லி ப்ரெட் இட்லி மாவூ தோசை மாவூ பனியாரம் (பனியாரங்கள் கோலி குண்டு சைசுக்குதான் இருந்தது.பத்து ரூபாய்க்கு மூன்று) விற்றுக்கொண்டிருக்கும் கேட்டரிங் பையன்களிடமும் சகட்டு மேனிக்கு வாங்கித் தள்ளிக் கொண்டே இருந்தார்கள்.இன்னொரு புறம் பழங்கள் ஜூஸ் என்று அந்த இடமே மக்களால் விருட் விருட் என்று வாங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

 1992ல்தான் இதற்கு முதலில் முருகனுக்கு அண்ணன் சுழி போடப்பட்டது.காட் ஒப்பந்தம்.இதைப் பற்றி அப்போதே அச்சத்துடன் பேசியிருக்கிறார்கள்.பன்னாட்டு கம்பெனிகள் உள்ளே வருவதற்கான அச்சாரம்.மெல்ல மெல்ல பன்னாட்டுக் கம்பெனிகள் உள்ளே வந்தார்கள்.அவர்கள் முதலில் காலடி எடுத்து வைத்தது ஹோம் அப்ளையன்ஸ் என்கிற டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்றவைகளில்தான்.அப்போது விற்பனையில் சக்கை போடு போட்ட வாஷோடெக்ஸ் பிராண்டு எல்லாம் காணாமல் போய் விட்டன.

 இங்கே யோசிக்க வேண்டிய ஒரு உப விஷயம் பன்னாட்டு நிறுவனங்கள் கை வைக்காத ஒரே ஒரு செக்மன்ட் 'வெட் கிரைண்டர்' மட்டும்தான்.இன்னமும் சௌபாக்யாவூம் ப்ரீத்தியூம்தான் முன்னே நிற்கிறார்கள்.ஏன் வெட் கிரைண்டர் பக்கம் பன்னாட்டு கம்பெனிகள் வரவில்லை என்று யாராவது எம்பிஏ ஆசாமிகளைத்தான் கேட்க வேண்டும்.

 பிசினஸை பொறுத்தவரை இரண்டு நிகழ்வூகள்தான்.
 ஒன்று விற்பது.
 இன்னொன்று வாங்குவது.

 மக்கள் தங்களது கிடுக்கிப்பிடியில் வந்து மாட்டிக் கொள்ளாதவரை பன்னாட்டுக் கம்பெனிகள் 'விற்பதை' தங்களது ஆட்டமாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.இருபது ஆண்டுகளில் இந்த ஆட்டம் நன்றாக நடந்தது.இப்போது விற்பது மறைந்து போய் "வாங்குவது" சீன் ஆஃப் அடிக்ஷனில் வந்து விட்டது.

 மக்கள் மாய்ந்து மாய்ந்து வாங்குகிறார்கள்.அந்த அளவிற்கு சம்பாதிக்கிறார்களா என்று தெரியவில்லை.

 இன்றைக்கு நீங்கள் என்ன வாங்கினீர்கள்.தேவைப்படும் பொருளைத்தான் வாங்கினீர்களா இல்லை எதற்கும் இருக்கட்டும் என்று வாங்கினீர்களா?
Previous
Next Post »