"ஞாபகம்..." -விஜயநிலா

  

  எப்போதாவது வீட்டை ஒழுங்குபடுத்துகிறேன் என்று குடைவது வழக்கம்.பெரும்பாலும் நேரமில்லை என்று குப்பைகளாகவே போட்டு வைத்திருக்கிற அறையைக் குடையூம்போது அதிசயமாய் ஏதாவது கையில் மாட்டும்.பழைய ஆல்பம் முன்னெப்போதோ எழுதிய மளிகை சாமான் லிஸ்ட் கசங்கிய ரோஜா இதழ்கள் என்று.இப்போது கிடைத்தது ஒரு பழைய செல்போன்.கருப்பாக செங்கல்கட்டியில் பாதி சைசுக்கு ஏரியலுடன் இருந்த எரிக்சன் மாடல் செல்போன்.
  நான் முதன்முதலில் வாங்கிய செல்போன் அது.அதை சட்டைப்பையில் வைத்திருந்தால் பாதி வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.நல்ல அந்தஸ்தான செட் அது.சினிமா தியேட்டருக்கோ தாலுகா ஆபீஸ் பக்கமோ அந்த செல்போனை சட்டையில் வைத்துக் கொண்டு சென்றால் அங்கிருக்கும் கடைநிலை ஊழியர்கள் விறைப்பாக சல்யூட் அடிப்பார்கள்.யாரோ பெரிய இடத்து ஆசாமி என்று விரைவாக வேலையூம் முடியூம்.ஆனால் அந்த செல்போனில் அப்போது ப்ரீபெய்டு கிடையாது.போஸ்ட்பெய்டு வைத்திருந்தாலும் அதை பேசுவதற்கு உபயோகப்படுத்த மாட்டேன்.இன்கமிங் கால் வந்தால்தான் செல்போனுக்கு வேலை உண்டு.மற்ற நேரம் கம்பீரமாக அது சட்டைப்பையில் அமர்ந்திருக்கும்.
 இந்த கதை செல்போன் பற்றியதல்ல.
 தொலைபேசி என்றதும் என் அப்பா பற்றிய ஞாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மரத்திலிருந்து விழும் காய்ந்த பழுப்புநிற இலைகள் போல உதிர ஆரம்பித்து விட்டன.அப்போதெல்லாம் லான்ட் லைன் போனும் இளம் பச்சை நிற பஜாஜ் நிற ஸ்கூட்டரும் ரேடியோவூம் வீட்டில் இருந்தால் அது பசை உள்ள வீடு என்று அர்த்தம்.ஊருக்கு யாராவது ஒன்றிரண்டு பேர் வீட்டில் மட்டும் கருப்பு நிறத்தில் கன்று போட்ட எருமை மாடு மாதிரி அம்பாசிடர் காரும் மப்ளர் கட்டிய பூனை மாதிரி டுஇன்ஒன் ரிக்கார்டரும் இருக்கும்.எங்கள் வீட்டில் எல்பி ரெக்கார்டு சுழலும் எச்எம்வியின் ரிக்கார்டு ப்ளேயர்தான் இருக்கும்.அதில் பாதிநேரம் போனிஎம்மும்,அபாவூம் ஓடி தேய்ந்து கொண்டிருக்கும்.
    தொலைபேசி மீது என்அப்பாவூக்கு அபார காதல் என்றே சொல்லலாம்.அவர் வேலை பார்க்க ஆரம்பித்தபோது ஏதோ ஒரு ரேடியோ கடையில் இருந்தாராம்.அப்புறம் கவர்மன்ட் வேலை கிடைத்து விட்டது.ரேடியோ கடையில் இருந்தபோது ஒரே ஒரு கருப்பு தொலைபேசி ஓனரின் அறையில் இருக்குமாம்.அந்த தொலைபேசிக்கு டயல் செய்யூம் வசதி எல்லாம் கிடையாது.அதில் ரிசீவரை மட்டும் பொருத்துவதற்கு இடம் இருக்கும்.அந்த ரிசீவரை எடுத்தால் மறுமுனையில் ஒரு யூவதி இனிப்பான குரலில்-"நம்பர் ப்ளீஸ்"என்பாளாம்.அதாவது நாம் யாருக்கு டயல் செய்து பேச வேண்டுமோ அந்த நம்பரைக் சொன்னால் அவளே எக்சேஞ்சிலிருந்து டயல் செய்து இணைப்பை வாங்கித் தருவாள்.நாம் உடனே பேசி விட்டு வைத்து விட வேண்டுமாம்.இது லோக்கல் காலுக்கு தொலைபேசி செய்யூம் முறை.ட்ரங்கால் பற்றி அநேகம் பேர் ஏற்கனவே எல்லார் வீட்டிலும் அலுப்பாக பெருமையாக சொல்லியிருப்பார்கள்.அந்த தொலைபேசியை ஒரு பட்டுத்துணியில் சுற்றி அதற்கு சந்தனப்பொட்டு எல்லாம் வைத்திருப்பது மட்டுமல்லாமல் அந்த ரிசீவரை எடுக்க முடியாமல் ஒரு திண்டுக்கல் பூட்டு போட்டு வைத்திருப்பாராம் அந்த ஓனர்.அவர் மட்டுமல்ல.அநேகம் பேர் வீடுகளிலும் தொலைபேசிக்கு இதே மரியாதைதான் அந்தக் காலத்தில் இருக்குமாம்.அதன் பின் சிவாஜி படங்களில் எல்லாம் வருகிற மாதிரி நம்பரை ர்ர்ர்ரென்று சுழற்றுகிற மாதிரி கருப்பு டெலிபோன் வந்தது.நான் பார்த்த பெரும்பாலான படங்களில் டிபார்ட்மன்ட் டிபார்ட்மன்ட் என்று விரைப்பாக பேசிக்கொண்டு நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்தான் கருப்பு டெலிபோனை சுழற்றிக்கொண்டிருப்பார்.
 எல்லாருக்கும்சொந்த வீடு கட்டும் ஆசை வருவது போலவே ஒருநாள் என் அப்பாவூக்கும் அந்த பேய் பிடித்தது.அவர் சொந்த வீட்டுக்கு இடம் வாங்கிய இடம் ஒரு அனாமத்தான அத்துவான இடம்.திருச்சியில் எங்கோ தெற்குபகுதியில் மூங்கில்காட்டிற்கு பின்புறமாக உள்ளே ஏரியா.அங்கே எப்போதும் விர்ரென்று காற்று வீசிக்கொண்டிருக்கும்.அந்த மூங்கில்காட்டை அழித்துதான் அந்த இடத்தில் கருணாநிதிநகர் வந்தது என்று பேசிக்கொள்வார்கள்.அவர் அந்த இடத்தில் வீடு கட்ட இடம் வாங்கியதற்கு உண்மையான காரணம் டெலிபோன்தான்.அந்த இடத்தில் ஒரு சொசைட்டி மாதிரி ஏற்படுத்தி வீடு கட்ட இடம் பிரித்துக் கொடுத்தார்கள்.வீடு கட்ட சொசைட்டி ஏற்படுத்திக்கொண்டவர்கள் திருச்சியில் தொலைபேசித் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் என்பதுதான் அந்த இடத்தின் மீது என் அப்பாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு காரணம்.அங்கே வீடு கட்டினால் எப்படியூம் தொலைபேசி இணைப்பும் கருப்புப்பூனை மாதிரி டெலிபோனும் கிடைத்து விடும் என்று விறுவிறு என்று வீட்டிலிருந்த அம்மாவின் நகைகளை விற்று இடத்தை வாங்கிப் போட்டு விட்டு வீட்டை கட்டிவிட்டு நிமிர்ந்தால் தொலைபேசித் துறையிலுள்ளவர்கள் சொசைட்டி ஆரம்பித்து வீடு கட்ட இடம் பிரித்துக்கொடுத்ததற்கும் தொலைபேசி இணைப்பிற்கும் எவ்வித சம்பந்தம் கிடையாது என்று கருணாநிதி நகரில் வீடு கட்டிக்கொண்டிருந்த கம்பவூன்டர் வந்து சொன்னபோது என் அப்பாவின் முகத்தில் ஒரு வித பயம் வந்து உட்கார்ந்து கொண்டதைப் பார்த்தேன்.

அப்புறம் அந்த ஏரியாவில் யார் வீட்டுக்கும் தொலைபேசி வரவே இல்லை.கருணாநிதி நகரில் ஒன்றிரண்டு பேர் வீட்டுக்கும் உடையான்பட்டியில் யாரோ பிரசிடன்ட் அய்யா வீட்டிற்கும் தொலைபேசி வந்து விட்டது தெரிந்ததும் தன் சைக்கிளை எண்ணைய் போட்டு துடைத்து எடுத்து ஓட்டிக்கொண்டு போய் டெலிபோன் டிபார்ட்மன்ட்டில் விண்ணப்பபாரம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து ஈசிசேரில் உட்கார்ந்து கொண்டு அதிகாரமாய் காபி கொண்டு வா என்று சொன்னபோது என் அப்பாவின் முகத்தில் ஒரு கதாநாயகத்தனத்தை என்னால் பார்க்க முடிந்தது.

   அதற்கு பிறகும் அந்த ஏரியாவில் யார் வீட்டிற்கும் தொலைபேசி வரவில்லை.வீட்டில் யாராவது இதயநோயாளிகள் இருந்தால் தொலைபேசிக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று தெரிந்ததும் தானே ஒரு இதயநோயாளியாகி விடலாமா என்றெல்லாம் யோசித்து தன் அம்மாவை இதயநோயாளி என்று டெலிபோன் டிபார்மன்ட் ஏஇக்கு கடிதம் எழுதுவார்.அப்போதெல்லாம் அந்த கடிதத்தை பதிவூ செய்து அதற்கு ரெடிமேடாக பதில் அனுப்புவார்கள்.இது போல கடிதம் நாலைந்து முறை எழுதி விட்டால் எப்படியூம் முன்னுரிமை கொடுத்து டெலிபோன் இணைப்பு கொடுத்து விடுவார்கள் என்பது அவரே கண்டு பிடித்த ஐடியா.


 மாதம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஏஇ ஒரு முறை வீட்டுக்கே வந்து விட்டார்.வீட்டின் முன்னாலுள்ள வேப்பமரத்தடியில் வயர்கூடை நாற்காலியில் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டே டெலிபோன் இணைப்பு கொடுக்க இயலவே இயலாது என்றும் அதன் சாத்தியமற்ற தன்மையையூம் விளக்கி பேசி விட்டு போனார்.அதன்பின்னும் விடவில்லை.யாராவது ஜோசியரைப் பார்க்கலாமா.வீட்டில் ஏதும் தோஷம் உள்ளதா என்பது வரை யோசிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில்தான் ஒருநாள் சைக்கிளில் டெலிபோன் டிபார்மன்ட் வயர்மேன் தேவதுரதன் போல வந்து நின்றான்.யாரிடமும் எதுவூம் பேசாமல் வீட்டின் எதிரே மூங்கில் ப்ளாட்ச் வைத்த வேலியின்அருகே எந்த இடத்தில் டெலிபோனுக்கான  போஸ்ட் ஊன்ற வேண்டும் என்று உட்கார்ந்து அளவூ எடுத்துக் கொண்டு போனான்.

அன்று நான் பள்ளியிலிருந்து திரும்பியபோது வீட்டில் வடை சுட்டிருந்தார்கள்.என்னைப் பரவசமாகப் பார்த்தபடி அப்பா சொன்னார்
"போன் வரப்போவூதுடா.ஒரு வாரத்துல போஸ்ட் கொண்டாந்து ஊன்றிடுவானாம்.நம்ம வீட்லயூம் போனு"என்றார் மகிழ்ச்சி கொப்பளிக்க.பொதுவாக என் அப்பா எப்போதும் சிடுசிடுவென்றுதான் இருப்பார்.அன்றைக்கு சந்தோஷமாக வீட்டை ஒழுங்கு படுத்தினார்.போஸ்ட் ஊன்றப்போகும் இடத்தைச் சுற்றி வளர்ந்திருந்த கருவேலமரங்களை வெட்டி ஒழுங்குபடுத்தினார்.போஸ்ட் ஊன்றப்போகும் இடத்தை நன்றாக தோண்டுவதற்கு ஏதுவாக அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி மண்ணைப் பதப்படுத்தினார்.
 
 சொன்ன மாதிரியே ஒரு வாரம் கழித்து போஸ்ட் கொண்டு வந்து ஊன்றினார்கள்.எப்ப போன் வரும் என்ற அப்பாவின் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமலேயே போய் விட்டதுதான் பெரும்குறை.
"போறானுங்க.பேப்பயலுக.காசு எதிர்பார்க்கானுங்க போல..நானா கொடுப்பேன்.அடுத்த வாரம் போனு வந்துதானே ஆகனும்"என்று முணுத்த அப்பாவின் முகம் சுண்டிப்போனது.போஸ்ட் ஊன்றி விட்டு நான்கு மாதம் வரை டெலிபோன் இணைப்பு ஏதும் வருகிற மாதிரி இல்லை.தினம் பகலிலும் சமயங்களில் இரவிலும் அவர் தானாக எழுந்து போய் அந்த போஸ்ட் அருகே போய் நின்றுகொண்டிருப்பார்.யாரும் பார்க்கவில்லையென்றால் போஸ்ட்டை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை.
அப்புறம் ஒருநாள் வந்து வயர்மேன் போஸ்டிலிருந்து மெயின் ரோட்டிலிலுள்ள போஸ்ட்டிற்கு வயர் இணைப்பு கொடுத்தான்.இப்போதாவது அவன் அவரிடம் பேசியிருக்கலாம்.இவரும் வலியப்போய் பேச கௌரவம் தடுத்தது.அதனால் வழக்கம் போல ஒரு வெள்ளைத்தாளை கிழித்து ஏஇக்கு மென்மையாக ஒரு புகார் எழுதினார்.நாளது தேதி வரை போன் கிடைக்காததால் இதயநோயாளியாக இருக்கும் தன் அம்மா மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாகவூம் விரைவில் 'ஆவன' செய்யமாறும் பணிவூடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொருநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வயர்மேனுடன் இன்னொருத்தன் வந்து பச்சை நிறத்தில் ஏ4 தாள் அளவூக்கு பெரிய தொலைபேசி சாதனத்தை வைத்து விட்டுச் சென்றான்.பொதுவாக டெலிபோனை வைத்து விட்டுச் சென்று விட்டால் உடனே எக்சேஞ்சிலிருந்து யாராவது ஒரு பெண் அழைத்து இதுதான் உங்களது நம்பர் என்று கொடுப்பார் என்று அப்பாவின் நண்பர் தேவசகாயம் சொன்னவூடன் ஆபீசில் அனைவருக்கும் காபி வடை வாங்கிக் கொடுத்து விட்டு இரண்டுநாள் ஆபீசிற்கு போகாமல் லீவூ வேறு போட்டிருந்தார்.வீட்டில் யாருக்கும் அம்மை ஏதும் போட்டு விடாமல் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.அம்மை போன்ற தொத்து வியாதி போட்டிருந்தால் அந்த வீட்டுக்கு டெலிபோன்காரன் புதுஇணைப்புக்கு வரமாட்டான் என்று யாரோ பிள்ளையார்கோவிலில் வைத்து மிரட்டியிருந்தார்கள்.உடனே அரைடஜன் பச்சநாடான் பழத்தை வாங்கிக் கொண்டு வந்து தின்னுமாறு எங்களை வற்புறுத்தினார்.

 டெலிபோன் இன்ஸ்ட்ருமன்ட் வந்து ஒரு மாதமாகியூம் தொலைபேசி இணைப்பும் வரவில்லை.தொலைபேசிக்கான நம்பரும் வரவில்லை.இதற்கிடையே நாலைந்து புகார்கடிதங்களை அனுப்பி வைத்து விட்டு பொறுமையாகக் காத்திருந்தார் அப்பா.

அவர் கன்டோன்மன்ட்டில் இருக்கிற அவரது மாமாவீட்டிற்குப் போயிருந்தபோது இங்கே தொலைபேசி இணைப்பு வந்து விட்டது.என் அம்மாவிற்கு அவ்வளவூ விபரம் பத்தாது.எக்சேஞ்சிலிருந்து ஒரு பெண் அழைத்து நம்பர் சொன்னபோது-
"அவரு வெளில போயிருக்காருங்களே.நீங்க வேணா நாளைக்கு பேசுங்க"என்று பயந்து போன் ரிசீவரை வைத்து விட்டார் அம்மா.வீட்டுக்கு அன்று மதியம் வந்த அப்பா கேட்டிருக்கிறார்.
"என்ன டெலிபோன் கடங்காரங்க யாராச்சும் பேசினானுங்களா.."
"அது..வந்து நாளைக்குப் பேசுவாங்க"என்றிருக்கிறார் அம்மா.
"என்னடி சொல்ற.நாளைக்கா.இன்னிக்கி என்ன அஷ்டமி நவமியாமா?"
  
 விஷயம் தெரிந்ததும் சாமியாடி விட்டார்.இதுக்குத்தான் படிச்சவளைக் கல்யாணம் பண்ணியிருக்கனும்.தஞ்சாவூருக்குப் போய் தடிச்ச கட்டையை கல்யாணம் பண்ணி தன் வாழ்க்கையே போச்சு.வீட்ல ஆள் இல்லைன்னா அந்த நம்பரை அவன் வெயிட்டிங் லிஸ்ட் இருக்கற அடுத்த ஆளுக்குக் கொடுத்து விடுவான்.அடுத்து அவர் முறை வருவதற்கு நாலைந்து வருடங்களாவது ஆகும் என்று எதிர்வீட்டு சேவியர் வேறு குழப்பி விட்டிருந்ததில் அப்பா படு அப்சட்.சாயந்தரம் நான் வீட்டுக்கு வந்தபோது கர்ஜித்தார்.
"எதுக்குடா இன்னிக்கி ஸ்கூலுக்குப் போன.இன்னிக்கி வீட்ல இருந்திருக்கலாம்ல"
"மன்த்லி டெஸ்ட்பா"
"கிழிச்ச.உன்னைய எல்லாம் படிக்க அனுப்பினதுக்கு பதிலா பிளாசா தியேட்டர்ல டிக்கெட் கிழிக்க விட்டிருக்கனும்"

நான் எதுவூம் பேசாமல் என் வயது பசங்களுடன் கிரிக்கெட் விளையாடப் போய் விட்டேன்.அன்று இரவூ அப்பாவூக்கு காய்ச்சல் கொதித்தது.டெலிபோன் ஜூரம்.

மறுநாள் பல்கூட விளக்காமல் பச்சை டெலிபோன் அருகிலேயே அமர்ந்திருந்தார் அப்பா.அன்றைக்கு பார்த்து எந்த அழைப்பும் வராமல் கண்ணாமூச்சி காட்டி விட்டு அடுத்தநாள் அந்த எக்சேஞ்ச் யூவதி அழைத்ததும் அப்பா முகம் கொள்ளாமல் ஈஈஈஈ என்றார்.
 நம்பரை குறித்து வைத்துக் கொண்டார்.சந்தேகத்துடன் மறுபடி போன் செய்து நம்பரை உறுதி செய்து கொண்டார்.முதல் டெலிபோனை யாருக்கு டயல் செய்வதெற்று தெரியவில்லை.
"தஞ்சாவூருக்கு வேணும்னா மங்களம் பாட்டிக்கு போடுங்க.சிகரட் மொத்த கம்பெனியில போன் இருக்கு"என்றார் அம்மா.
"அவளே ஒரு ராசிகெட்டவ.உன் சனமே வேண்டாம்"என்றவர் பிளாசா தியேட்டருக்கு போன் செய்து இன்றைக்கு என்ன படம் என்றார்.நேற்றுதான் அந்த கன்ஸ்ஆஃப் நவ்ரோன் படத்தை இரண்டாம் தடவையாக பார்த்திருந்தார்.

  அப்புறம் டெலிபோன் எங்களது வீட்டில் சகஜமாகிப் போனாலும் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயத்தை செய்தார் அப்பா.ஒரு நல்ல பூட்டு வாங்கி டெலிபோனை பூட்டினார்.அது மட்டுமல்லாமல் எஸ்டிடி பேசுவதற்கும் சீக்ரட் பாஸ்வர்ட் வைத்துக் கொண்டார்.அதாவது அவர் இல்லாமல் யாரும் போன் பேச முடியாது.இன்கமிங் வந்தாலும் அவரேதான் ரிசீவரை எடுத்துக்கொடுப்பார்.பேசியது எதிர்முனையில் டயல் செய்த ஆளாக இருந்தாலும் நாங்கள் ரெண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது.ஏனென்றால் அந்த நேரத்தில் இன்னொரு கால் வந்து வேஸ்ட் ஆகி விடக் கூடாதாம்.வீட்டில் இருப்பது நாலே பேர்தான்.இதில் யார் அவருக்கு தெரியாமல் டயல் செய்து பேசப் போகிறார்கள்.இத்தனைக்கும் அவருக்கு இன்கமிங் கால் கூட வருவது கிடையாது.எஸ்டிடி தேவையே இல்லை.

இந்த பூட்டு பாஸ்வர்டு சமாச்சாரங்களால் நான் மிக அவமானமாக உணர்ந்தேன்.வீட்டில் டெலிபோன் இருப்பதை யாரிடமும் சொல்லவே மாட்டேன்.இந்த கருப்புற செங்கல் சைஸ் செல்போனைக் கூட என் அப்பாவூக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றுதான் வாங்கினேன்.

 இத்தனை கறாராக இருந்த அப்பா அதன்பின் பலவருடங்கள் லான்ட்லைன் டெலிபோனை தன் இரண்டாவது மனைவி போல பார்த்துக் கொண்டார்.அப்புறம் ஒருநாள் அவர் செத்துப் போனார்.

 அவர் சாவதற்கு முன்னாக நான் அந்த லான்ட்லைனுக்குதான் டயல் செய்து அவருடன் பேசியிருந்தேன்.ஊருக்கு வந்திருந்த நான் அவரிடம் பேசிய இரண்டு மணிநேரத்தில் பக்கத்து வீட்டிலிருந்து யாரோ பேசினார்கள்.
  
"அப்பா போயிட்டாருப்பா.அழாதிங்க.நாங்க எல்லாம் இருக்கம்.கவலைப்படாதிங்க..."என்றார்கள்.
  
   உடனே அரக்க பரக்க கிளம்பிப் போய் பார்த்தால் அந்த டெலிபோன் இருந்த மேசை அருகிலேயே அப்பாவை தரையில் படுக்க வைத்திருந்தார்கள்.அப்பா கண்களை மூடியபடி படுத்திருந்தார்.அப்புறம் கூடிய உறவினர்கள் அவர் இறந்து போனதை தெரியப்படுத்தலாம் என்று டெலிபோன் சாவி கிடைக்காமல் பூட்டை உடைத்தார்கள்.லோக்கல் கால்கள் சென்றன.எஸ்டிடிக்கு பாஸ்வர்டு தெரியாமல் அவர்கள் திகைத்தபோது நான் என் கருப்பு செல்போனை கொடுத்து விட்டு அந்த டெலிபோனை தடவிக்கொடுக்க ஆரம்பித்தேன்.
  
 அந்த கருப்பு செல்போனை எறிய மனமில்லாமல் தட்டு முட்டு சாமான்களை போட்டு வைக்கும் அறைக்கு சென்றபோது உடைந்த மூங்கில் நாற்காலிக்கு அடியில் அந்த பச்சை நிற லான்ட்லைன் போன் கீழே கிடந்தது.அந்த போனை அருகே போய் தொட்டுப் பார்த்தேன்.அதில் அப்பா வாசம் அடித்துக் கொண்டிருந்தது.

                                                          ------------------------------
Previous
Next Post »

2 comments

Click here for comments
Unknown
admin
September 19, 2015 at 6:58 AM ×

திருச்சி மணம் வீசும் அழகான கதை...

Reply
avatar
SAT
admin
October 8, 2015 at 6:20 PM ×

Fantastic👌👌

Reply
avatar