தொடர்கதை: "அவள்-இவள்..." -விஜயநிலா

                                                                              (3)

  வெளியே யாரோ ஓடின மாதிரி இருந்தது.வெளியே ஓடிப்போய் பார்த்து விட்டு வந்தான் வருண்.யாரோ வந்து எட்டிப் பார்த்து விட்டு ஓடியிருக்கிறார்கள்.திரும்ப வந்தபோது அஞ்சலி இயல்பாக சோபாவில் அமர்ந்து டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அஞ்சலி.ஆர் யூ ஆல்ரைட்?"
"எனக்கென்னங்க.நான் நல்லாத்தான் இருக்கேன்.திடீர்னு ஒரு பயம்.டிப்ரஷன் வந்த மாதிரி ஃபீலிங்.இப்ப நல்லாத்தான் இருக்கேன்.உங்க ஆபீஸ் ஸ்டாஃப் தாமரையைப் பார்த்து நான்தான் கன்ப்ஃயூஸ் ஆகிட்டேன்.அவங்க என்னொட படிச்ச வினோதினி மாதிரியே இருந்தாங்க"
"சரி அந்த மேட்டரை விடு.உனக்கு ஒண்ணுமில்லையே.அப்புறம் உன்கிட்ட ஒண்ணு கேட்கனும் அஞ்சலி.இந்த சந்தர்ப்பத்துல கேட்கலாமான்னு தெரியலை"
"என்னங்க.ஏதாவது சந்தேகமா என் மேல"
"சேசே.நாட் அட் ஆல்.உனக்கு ராக்கின்னு யாரையூம் தெரியூமா"
 அதைக் கேட்டதும் அவள் முகம் மாறுமோ என்ற எதிர்பார்ப்பில் அவள் முகத்தையே உன்னிப்பாக கவனித்தான்.அஞ்சலியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.இயல்பாக திரும்பி அவனைப் பார்த்தாள்.டிவியில் ஓடும் கார்ட்டூன் பிம்பங்களைப் பார்த்தாள்.புடவையை சரி செய்து கொண்டாள்.கூந்தலை இரு கைகளாலும் பின்னுக்கு தள்ளி சரி செய்தாள்.நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.கால்களில் இருந்த கொலுசு லேசாக ஆடியது.
"என்ன சொல்றிங்க.யாரு ராக்கி.இதுவூம் உங்க ஆபீஸ் ஸ்டாஃபா?"
"முழுப்பேரு ராதாகிருஷ்ணன்.ராக்கின்னு கூப்பிடுவாங்க.உனக்கு தெரியூமா.இல்லே இந்த பேரை நீ எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கியா"
அவள் தலையசைத்து மறுத்தாள்.
"அப்படி யாரையூம் எனக்கு தெரியாதுங்க.ஏன் அப்படி கேட்கறிங்க"என்றாள்.
இவள் பொய் சொல்வது போல தெரியவில்லை.டிடெக்டிவ் ஏஜென்சியில் உறுதியாகச் சொன்னார்களே.இவளுக்கு முன்பே திருமணம் ஆகி விட்டதென்று.இவளிடம் எப்படி கேட்பது.வருண் யோசித்துக் கொண்டிருக்கும்போதே எழுந்து அருகே வந்தாள்.அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
"என்னங்க.ஏதாவது பிரச்சனையா.என்னால ஏதாவது பிரச்சனையா.ஏன் அப்படி கேட்கறிங்க"
"இல்லே.லீவிட்.சும்மாதான் கேட்டேன்.எதாவது பேசி உன்னை சகஜ நிலைமைக்கு திரும்ப கொண்டு வரலாம்னு பார்த்தேன்.சரி ஒரு கப் காபி கிடைக்குமா.நீதான் இன்னிக்கி வெளியில போக வேண்டாம்னுட்டியே"
"ஆமாங்க.எனக்கு வீட்லயே இருக்கனும் போலருக்கு.இருங்க.ஸ்ட்ராங்கா காபி போட்டு கொண்டு வர்றேன்"என்று எழுந்து உள்ளே போனாள் அஞ்சலி.இவள் தப்பு செய்த சுவடு ஏதும் கண்களில் தெரியவில்லை.அரக்கோணத்திற்கு சென்று அந்த பதிவாளர் அலுவலகத்தில் போய் பார்த்தால் தகவல் கிடைத்து விட வாய்ப்பிருக்கிறதே.வேண்டாம்.இப்போதைக்கு இந்த விவகாரத்தை கிளற வேண்டாம்.இவளை கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று முடிவூ செய்தான்.
காபி கப்புடன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள் அஞ்சலி.
"ராதாகிருஷ்ணன்னா யாருங்க.அதென்ன பேரு ராக்கின்னு.இந்திப்பட ஆட்களோட பேரு மாதிரி இருக்கு"என்றாள்.
"சரி அதை விடு.உனக்கு ஏன் யோகா தெரியாதுன்னுட்டே"
"எனக்கு நிஜமாகவே யோகா தெரியாதுங்க.சும்மா படிக்கற காலத்துல விளையாட்டு பீரியடுல யோகான்னு என்னமோ சொன்னாங்க.அதையெல்லாம் கவனிச்சிக் கேட்கலை.ஏங்க.தாமரை ஏதாவது தப்பா நினைச்சிட்டாங்களா.நான் அவங்களை வினோதினி மாதிரி இருக்காங்கன்னு சொன்னது தப்புதானே"
"சேசே.தாமரை ரொம்ப எக்ஸ்ப்பீரியன்ஸ் உள்ளவ.அவ எதையூம் தப்பா எடுத்துக்கற டைப் கிடையாது.ரிலாக்ஸ்டா இரு"
மறுநாள்-
கம்பெனியில் உற்சாகமாக இருந்தான் வருண்.புதிதாய் சில ஆர்டர்கள் கிடைத்திருந்தன.அது குறித்து சம்பந்தப்பட்ட டிபார்ட்மென்ட் ஆட்களோடு கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் முடித்து விட்டு தன் அறைக்கு வந்தபோது தாமரை அவனுக்காக காத்திருந்தாள்.
"என்ன தாமரை.எனிதிங் இம்பார்ட்டன்ட்?"
"எனக்கே ஆச்சர்யமா இருக்கு.என்னை மாதிரியே இருப்பாளா அந்த வினோதினி"
"யார் வினோதினி"
"உங்க வொய்ஃபோட காலேஜ்ல படிச்சதா சொன்னாங்களே அந்த வினோதினி"
"ஓதட்..அதை விடு தாமரை.அஞ்சலியே அதை மறந்துட்டா.உன்கிட்ட அந்த மாதிரி நடந்துகிட்டதுக்கு பலமுறை என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டா"
"தட்ஸ் வெரி நைஸ்.உங்க மனைவி உண்மையிலேயே ஒரு நல்ல பொண்ணு.உங்களுக்கு சரியான மாட்சிங் ஜோடி அவங்க"
"வேற ஏதாவது சொல்லனுமா தாமரை"
"என்னை வெளிய தள்ளறதிலயே குறியா இருக்கிங்களே.அஞ்சலிகிட்ட ஏதும் தனியா ஃபோன்ல பேசனுமா"
"இல்லை"
"பின்ன என்ன.நான் இங்க உட்கார்ந்திருக்கலாமில்ல"
"நான் கொஞ்சம் தனியா இருக்க விரும்பறேன் தாமரை"
"என்ன விஷயம்.நான் தெரிஞ்சிக்கலாமா"
"என்னவோ தெரியலை.தனியா இருக்கனும் போல இருக்கு.புதுசா வந்த ஆர்டர்ஸ் பத்தி கொஞ்சம் லாட்டரலா யோசிச்சிப் பார்க்கனும்.ஆர்டர்களுக்கு எதிரான வரப்போற தொகைக்கு ஃபாரக்ஸ் மார்க்கெட்ல லாட்ஸ் எடுத்து மெயின்டைன் பண்ணனும்"
"அதுக்குத்தான் நம்மளோட ஷேர்ஸ் கன்சல்டிங் ஆட்கள் இருக்காங்களே"
"இருக்காங்க.திரும்பவூம் க்ளோபல் மெல்ட் டவூன் வரும் போல தெரியூது.ஹெட்ஜிங் கொஞ்சம் புத்திசாலித்தனமா பண்ணனும்.இல்லைன்னா கையை சுட்டுக்கறாப்ல வந்திரும்."
"ஏன் அப்படி சொல்றிங்க"
"வழக்கமா நம்ம கூட போட்டி போடற பெரிய நிறுவனம் இந்த ஆர்டர்ஸ் சிலதை வேண்டாம்னு நமக்கு விட்டுக் கொடுத்துட்டாங்ளோன்னு ஒரு டவூட்"
"ஓ"என்று எழுந்து கொண்டாள்.
வெளியே வந்தாள்.
ரெஸ்ட்ரூமிற்கு வந்தாள் தாமரை.செல்பேசி எடுத்தாள்.மறுமுனையிலிருந்து வந்த குரலில் கேலி இருந்தது.
"எப்படி இருக்கான் வருண்?"
"ஒரு வித்தியாசமும் இல்லே.ஆனா கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கு"
"எதில?"
"ஆர்டர்ஸ் பத்தி காலைல ஒரு மீட்டிங் அரேன்ஞ் பண்ணியிருந்தார்.இப்ப தனியா உட்கார்ந்து யோசிக்கிறார்.ஆர்டருக்கு எதிரா டாலர்களை ஹெட்ஜிங் பண்ணனும்னு"
"இது வழக்கமா எல்லா கம்பெனியிலயூம் உள்ள நடைமுறைதான.அதைத்தான வருண் செய்யறான்.இதில என்ன சந்தேகம்"
"வருண் செய்யறது வரிக்கு வரி அச்சு அசலா சரியா இருக்கு.அதான் டவூட் வருது.சின்ன இடறல் கூட இல்லை"
"சரி வருணை உன் கண்பார்வையிலயே வைச்சிக்க.முடிஞ்சா இசிஆர் ரோட்டுப் பக்கமா அழைச்சிட்டுப் போய் அவனுக்கு ஒத்தடம் கொடு மெத்து மெத்துன்னு பய கிறங்கிடுவான்"
"ச்சீய்..இதெல்லாமா என் அசைன்மன்ட்ல வருது.நான் என் பில்லை இன்னும் ஜாஸ்தி போடப்போறேன்"என்று சிரித்தபடி செல்லை அணைத்த தாமரை அதிர்ந்து போனாள்.அவளையே உற்று பார்த்தபடி அங்கே வருண் நின்றிருந்தான்.
"எ..என்ன இங்கேயே வந்திட்டிங்க.நான் சும்மா ஃப்ரஷ்அப் பண்ணிக்கலாம்னு வந்தேன்"
"உன்கிட்ட ஒரு டவூட் கேட்கனும்னு வந்தேன் தாமரை.உன்னை உன் சீட்ல தேடினேன்.இன்டர்காம்ல கூட கூப்பிட்டேன்.வியட்நாம்ல ஏதோ எகானமிக் மீட்டிங் இருக்காமே.குரூடாயில் பேரல் 40 டாலருக்கும் கீழ சரியூதாம்.உடனடியா நாம எக்ஸ்பர்ட்டை வரவழைச்சிப் பேசனும்"
"பண்ணலாம்.வெளியில ஒரு அவூட்டிங் போலாமா"
"வெளியிலயா.இப்பவா.மணி என்ன தெரியூமா.லன்ச் டைம் வரப்போகுது"
"ஸோ வாட்.கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்குப் போய் யோசிச்சா நீங்க நினைக்கற மாதிரி ஐடியாக்கள் வந்து விழுமே.என்ன நான் சொல்றது"
"அஞ்சலி கேட்டாள்னா"
"ஆபீஸ் வேலையாகத்தான போறம்.அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க"
"சரி வா போலாம்"
"நம்ம ஆபீஸ் கார் வேண்டாம்.ஏதாவது கேப்ல வரச்சொல்லலாம்.நான் ஏற்பாடு பண்ணிடறேன்.லிப்ட்ல இறங்கி கீழே பார்க்கிங் செக்ஷனுக்கு போறதுக்குள்ள கார் வந்து நிற்கும்.நான் கேரன்டி"என்ற சிரித்தாள்.
இப்போது அவள் சிரிப்பு வேறு மாதிரியாக இருந்தது.
வருணுக்கு ஃபோன் செய்த அஞ்சலி ஆர்வமாகக் கேட்டாள்.
"என்னங்க எப்படி இருக்கிங்க.நான் என்ன சாப்பாடு அனுப்பட்டும்"
"சாப்பாடெல்லாம் இன்னிக்கி வேண்டாம் அஞ்சலி.இன்னிக்கி இங்க இன்னொரு மீட்டிங் இருக்கு.நாளைக்கு உன் கையால சாப்பிட்டுக்கறேன்.இன்னிக்கி விட்ரு"
"சரி எப்படி இருக்கிங்க"
"நினைச்சிட்டே இருக்கேன்"
"என்ன நினைச்சிட்டே இருங்கிங்க"
'நேற்றய அனுபவத்தை நினைச்சிட்டே இருக்கேன்"
"நேற்றய அனுபவமா.நான் மயக்கம் போட்டு விழுந்ததா.அதை அப்பவே மறந்துட்டேன்னிங்களே"
"அதை இல்லை.நேத்துன்னா நேத்து நைட் நடந்ததை நினைச்சி மனசில ரீவைன்ட் பண்ணி பார்த்துட்டு இருக்கறேன்"
"ச்சீய்.சாயந்தரம் சீக்கிரம் வந்துருங்க"
"அட..அப்படியா.சாயந்தரமேவா"
"ச்சீய்..புத்தி போவூது பாரு உடனே.நேரத்துக்கு வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேன்"
அஞ்சலி தொலைபேசியை வைத்த அதே நேரத்தில் லிப்டில் இறங்கிக் கொண்டிருந்தான் வருண்.உடன் அவனை உரசியபடி நின்றிருந்தாள் தாமரை.இப்போது மிகவூம் புதிதாக இருந்த மாதிரி தோன்றினாள்.
"என்னவோ சேஞ்ச் தெரியூது தாமரை உன்கிட்ட.நான் ரெஸ்ட்ரூம்ல பார்த்த போது வேற மாதிரி இருந்தே"
"உங்க கூட வெளியில போகனுமேன்னு லேசா மேக்அப் போட்டுக்கிட்டேன்.அதான்"
"அஞ்சே நிமிஷத்துல மேக்அப் போட்ருவியா.ஆச்சர்யமா இருக்கு"
"இது மேக்அப் இல்லை.ஃபேஸ்ஷைனிங்.சும்மா லேசா தடவினா போதும்.முகத்துல இருக்கற சோர்வெல்லாம் மறைஞ்சு பளிச்சுனு ஆயிரும்.கார் வந்தாச்சு.வாங்க போலாம்"
 இருவரும் ஏறிக்கொண்டதும் அந்த கறுப்பு நிற டவேரா சன்னமான உறுமலுடன் விரைந்தது.
இசிஆர்ரோட்டில் இருந்த கம்பெனியின் கெஸ்ட் ஹவூசிற்குள் கார் நுழைந்தது.உள்ளே வந்ததும் அங்கிருந்த செக்யூரிட்டி விரைப்பாக சல்யூட் அடித்தான்.
 இன்டர்காம் எடுத்து இரண்டு மினிமீல்ஸூக்கு ஆர்டர் செய்தாள் தாமரை.நுரைமெத்தை போன்ற சோபாவில் தளர்வாக அமர்ந்தான் வருண்.அவனுக்கு எதிரே அமர்ந்த தாமரை லேசாக புன்னகைத்தாள்.
"என்ன சிரிக்கற தாமரை"
"இந்நேரம் நாம இங்க இருக்கறது தெரிஞ்சா அஞ்சலி என்ன நினைப்பாங்க"
"அவ தப்பா நினைக்க மாட்டா.நாம்பளும் ஆபீஸ் வேலையாத்தானே வந்திருக்கம்.எதுக்கு இன்ஹிபிஷன்ஸ்"என்றான் தன் லாப்டாப்பை திறந்தபடியே.கம்பெனியின் வலைத்தளத்திற்கு சென்று பார்வையிட்டு திரும்பினான்.கணக்கு வழக்குகள் திட்டங்கள் ப்ராஜக்ட்டுகள் போடுவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்த மென்பொருளை ஆன் செய்தான்.அதில் ஏதோ விபரங்களைக் கொடுத்து மாடல் ப்ராஜக்ட் செய்து பார்த்துக் கொண்டிருந்தபோதே கேட்டரிங் ஆட்கள் சாப்பாடு கொண்டு வந்து வைத்து விட்டு அகன்றார்கள்.
"முதல்ல சாப்பிடுங்க.நான் சர்வ் பண்றேன்"என்று எழுந்து கொண்டாள் தாமரை.
"வேணாம்.நானே எடுத்து போட்டுக்கறேன்.நீயூம் சாப்பிடு"என்றான் வருண்.அவள் ஒரு ப்ளேட்டில் சிறிதளவூ பருப்பு சாதமும் மினி சைஸ் எண்ணெய் இல்லாத சப்பாத்தியூம் எடுத்துக் கொண்டாள்.
"முதல்ல சூப் சாப்பிடு தாமரை"
"வேண்டாம்.சூப் சாப்பிட்டா பசியை கிளப்பி விட்டுடும்.நான் ஏற்கனவே டபுள் டயட்ல இருக்கேன்.இதே போதும் எனக்கு"என்றவாறு அவனது லாப்டாப்பை பிடுங்கி அருகிலிருந்த குட்டியான மேசை மேல் வைத்து விட்டு அவனுக்கு ஒரு ப்ளேட்டை எடுத்து தந்தாள்.
இருவரும் மௌனமாக சாப்பிட்டு முடித்தனர்.எழுந்து வாஷ்பேஷினை நோக்கி சென்றபோது கேட்டாள் தாமரை.
"ஆர்யூ ஆல்ரைட் சார்"
"ஏன்.எதுக்கு கேட்கற.."
"உங்களுக்கு அஞ்சலி ஏதாவது போன் பண்ணினாங்களா நீங்க கிளம்பறபோது"
"இல்லையே"என்றான்.அதை அவன் சொன்னபோது அவன் முகத்தையே பார்த்த தாமரைக்கு அவள் கண்களில் ஒரு திருட்டுத்தனம் தோன்றி மறைந்தது.

"சரி.வாங்க.கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடி ரிப்போர்ட்சை பாருங்க.சாப்பிட்ட உடனே பார்த்திங்கன்னா கோர்வையா திங்க் பண்ண முடியாது"என்றாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழ ஆரம்பித்தான் வருண்.அவன் வாயோரத்தில் இரத்தம் கசியத் துவங்கியது.(தொடரும்)
Previous
Next Post »