சிறுகதை: பூவினும் மெல்லிய பூங்கொடி -விஜயநிலா

      

         என்னை இதற்குமுன் நீங்கள் பார்த்திருக்கிறீகளா?நான் பார்ப்பதற்கு
மாஸ்க்குலைனான தோற்றத்துடன் இருப்பேன்.கால்பந்தாட்டத்தில் நிறைய தரம் ஹிந்துவிலும்,எக்ஸ்பிரசிலும் ஸ்போர்ட்ஸ் காலத்தில் முகம் காட்டியிருக்கிறேன்.என்னை சற்றே கலைத்துப் போட்டு ரீஅசெம்பிள் செய்தால் சற்றேறக்குறைய டேவிட் பெக்காமினின் நிழல் போலத் தெரிவேன்.ஒரு திரைப்படத்தில் துண்டுபீடி சைசுக்கு இருக்கிற பையனுக்கு(வாரிசு நடிகனாம்!) சண்டைக்காட்சியில் அடி வாங்குகிற மாதிரி நடிக்கக் கூப்பிட்டார்கள்.மாடலிங் செய்வதற்கு கூட முன்பெல்லாம் ஆர்வம்  இருந்தது.டேவிட் பெக்காம் போலவே டேவிட் கேன்டியை எனக்கு மிகவூம் பிடிக்கும்.டிஅன்ட்ஜிக்களில் பார்த்திருப்பீர்களே!
 இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லை.இதோ இந்த ஆபீசை பாருங்கள் எத்தனை சோம்பலாக இருக்கிறது.இந்த ஆபீசில் நான் என்னைத் தொலைத்து விட்டேன்.
 ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்தான் எனக்கு
ஐஓசியில் வேலை கிடைத்தது.வேலை கிடைத்த மறுநாளே எல்லா விளையாட்டு வீரர்கள் மாதிரியே நானும் விளையாட்டைத் துறந்து விட்டேன்.வீட்டில் உடனே எனக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று ஊர் ஊராகச் சென்று பெண் பார்த்து வந்தார்கள்.
 ஆனால் எனக்கென்னவோ கல்யாணத்தில் மட்டும் உடனே ஈடுபாடு வந்து  விடவில்லை.விளையாடுகிறபோது முழுஈடுபாட்டுடன் விளையாடி விட்டு ஸோபியாலாரன் படம் பார்க்கப் போய்விடுவேன்.அப்போதெல்லாம் திருச்சியில் பிளாசா தியேட்டரில் பழைய ஆங்கிலப் படம் போடுவார்கள்.அப்படியூம் இல்லையென்றால் கன்டோன்மன்ட் பக்கம் போனால் போதும் அங்கே கிருஷ்ணசாமி இருக்கிறார்.
  கிருஷ்ணசாமி கால்பந்து விளையாட்டு வெறியர்.திருச்சியில் டோர்னமன்ட் எல்லாம் நடத்துவார்.அவருடன் அறிவானந்தம் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிப்போர்ட்டர் ஒருவரும்,பென்னிக்குட்டி என்ற ரயில்வே ஆசாமியூம் வருவார்.உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் விடிய விடிய  கொட்டாவி விட்டபடி ஆவென்று கேட்டுக் கொண்டிருப்போம்..அதற்காகவே  கன்ட்டோன்மன்ட்போவேன்.அதெல்லாம் ஒரு காலம்.
  இத்தனை நாள் கல்யாணம் செய்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டே
வந்ததற்கு காரணம் என்ன என்று தெரியவேயில்லை.யோசித்துப் பார்த்தால்  நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சிங்கராயர் என்றுஒருஆசிரியர்,திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்தவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்ததிருக்கிறார்.அவர்  என்னை பாதித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இல்லை.அது கூட காரணம் இல்லை.
இப்போதும் கூட நான் மிகவூம் விரும்பி கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கவில்லை.
 என்னுடைய ஆபீசில் பூங்கொடி வந்த ஒரு வருடத்தில்தான் நான் இந்த முடிவை எடுத்தேன்.பூங்கொடியை எங்கள் அலுவலத்தில் வந்தவூடனேயே அத்தனை ஆண்களும் அவள் நிசமாகவே பெண்தானா என்று தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள்.
 காரணம் அவளது தோற்றம்.
 பூங்கொடி சிவப்பான நிறம்தான்.சுமாரான உயரம்.பழுப்பேறிய அடர்த்தியில்லாத கூந்தல்.ஆனால் நாங்கள் எல்லாம் பார்த்து வியந்த சமாச்சாரங்களை சொல்லலாம் தப்பில்லைதான்.பூங்கொடியிடம் முன்னழகோ,பின்னழகோ எதுவூம் கிடையாது.இப்படி ஒரு பெண் எங்களது  ஆபீசிற்கு புதிதாக வேலைக்கு வருவாள் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம்.
 பூங்கொடி எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் பழகுவாள் என்றாலும்
அவள் கண்களில் பளபளவென்று ஒரு கல்யாண ஏக்கம் இருப்பது எனக்கு  மட்டும் தெரிந்தது.
 எப்போது எனக்கு அந்த எண்ணம் வந்து மனதில் உட்கார்ந்து கொண்டது
என்று தெரியவில்லை.
 இவளை கல்யாணம் செய்து கொண்டால் என்ன?
 என்னுடைய கேபினுக்கு ஒருநாள்
பூங்கொடி வந்தபோது கேட்டேன்.
"பூங்கொடி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
"எதைப் பத்தி மனோகரன்"
"பர்சனல் மேட்டர்தான்.ஆபீசில பேச வேண்டாம்.தேவையில்லாத
இடைஞ்சல்கள் இருக்கும்.சாயங்காலம் ரெஸ்ட்டாரென்ட்ல போய் காபி சாப்பிட்டு கிட்டே பேசலாமா"
"சரிஎன்று சொல்லி விட்டு சென்ற பூங்கொடியின் கண்களில் பளிச்சென்று மின்னல்கீற்று ஏதாவது தொpகிறதா என்று
பார்த்தேன்.அதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை.எப்போதும்போல்தான் சிரித்து விட்டுச் சென்றாள்.
 சாயங்காலம் பத்மாகபேயில் வைத்து பேச ஆரம்பித்தேன்.பூங்கொடி பாசந்தியை இன்னும் ஸ்பூனால் கிள்ளிக்கொண்டிருந்தாள்.என் மனதிலிருப்பது தெரிந்தால் இவள் என்ன நினைப்பாள்? இந்த நகரத்தில் யாருமே சீண்டாத தன்னை  வலுவில் வந்து விரும்புகிறானே இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என்று பயத்தில் விலகி விடுவாளோ?
"பூங்கொடி எனக்கு முப்பத்திநாலு வயசு ஆகுது"
"ம்"
"பாசந்தி பிடிக்குமா உங்களுக்கு.இன்னொரு பாசந்தி கொண்டு வரச்
சொல்லவா"
"வேண்டாம்."
"வேணுமான்னு கேட்டா யாராக இருந்தாலும் வேண்டாம்னுதான் சொல்வாங்க.இங்க காபியூம்,பாசந்தியூம் நல்லா இருக்கும்|,"என்று சொல்லி விட்டு இன்னொரு பாசந்தி கொண்டு வரச்சொன்னேன்.அவள் அதை ஆர்வமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"மனோகரன் நாங்க ஸ்வீட் எல்லாம் உண்மையைச் சொல்லனும்னா தீபாவளியன்னிக்கிதான் சாப்பிடறது.ஹோட்டல்ல அதிகபட்சம் ஒரு தோசை,காபி அவ்வளவூதான்,"என்றாள்.
"என்னோட வயசை சொன்னேனே எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கு தெரியலையா"
"புரியலை"
"உங்களுக்கு வயசு என்ன இருக்கும்"
"முப்பதை நெருங்கியாச்சு"
"பூங்கொடி நான் எதுக்காக உங்களை ஹோட்டலுக்கு வரச் சொல்லி உட்கார வைச்சு பேசிட்டு இருக்கேன்னு புhpயலையா உங்களுக்கு,"என்றதும்  என்னை பேந்த பேந்த முழித்தபடி
பார்த்தாள்.அவளிடம் இது வரையாரும் காதலுடன் அணுகியிருக்க மாட்டார்கள் போலும்.
"பூங்கொடி"
"ம்"
"நான் உங்களை விரும்பறேன்.ஐமீன் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்"
பாசந்தியை வைத்து விட்டாள்.என்னை நேரடியாகப் பார்த்தாள்.நான் மெல்லப் புன்னகைத்தேன்.அவளது குச்சிக்குச்சியான கைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன என்ற நினைக்கிறேன்.
"கல்யாணமா.என்ன சொல்றிங்க மனோ"
"என் மனசுக்கு உங்களைப் பிடிச்சிருச்சி"
"இந்த பியட் காரையா?,"என்றாள் பட்டென்று.  அவளுக்கு அலுவலகத்தில் எல்லோரும் பியட் கார் என்று பெயர் வைத்திருந்தார்கள்.பிரிமியர்பத்மினி பியட் கார் போல ஒடிசலாக,நோஞ்சானாக இருக்கிறாள் பூங்கொடி என்பதற்காக
என்பதனால் அந்த பெயர்.அவளது முகத்தை உற்றுப் பார்த்தேன்.
  சிறிய நெற்றி.அதில் சுருக்கங்கள்.அடர்த்தியற்ற புருவங்கள்.இடது புருவத்தின் மேல் ஒரு வெட்டுத் தழும்பு.எந்த உணர்ச்சியையூமே
காட்டாத கண்கள்.மேலுதட்டில் சின்னதாய் கோடு கிழித்த மாதிரி
முடிகள்.குறுகலான மோவாய்.அதன் நடுவில் ஒரு மரு.கழுத்து நசுங்கிப் போன மாதிரி இருந்தது.கைகள் வெடவெடவென்றிருந்தன.
"எதுக்காக இந்த திடீர் முடிவூ,"என்றாள்.
"உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு"
"அதான் எப்படி.எங்க வீட்லயே யாருக்கும் என்னைப் பிடிக்காது"
"அதெல்லாம் இருக்கட்டும்.நான் எப்ப உங்களைப் பெண் பார்க்க வரலாம்"
பதில் சொல்லாமல் தலை குனிந்து  கொண்டாள்.
"வர்ற சன்டே வரட்டுமா"
"ம்"
ஞாயிறன்னு அவளது வீட்டுக்குச் சென்றேன்.தென்னுரில் ஹிந்தி பிரச்சாரசபா போகும் வழியில் ஒரு சந்தில் இருந்தது அவளது வீடு.
வீடு என்று சொல்வதை விட அது ஒரு ஒண்டுக்குடித்தனம் என்று சொல்லலாம்.குறுகலான சந்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.வாசலில் ஒரு ராலி சைக்கிள் நின்று கொண்டிருந்தது.
ஒரு எம்80ஓரமாகக் கிடந்தது.
வெளியே எதற்காகவோ வந்து எட்டிப்பார்த்த பூங்கொடி என்னைப் பார்த்து விட்டு,"வாங்க.நீங்க மட்டும்தான் வந்திங்களா.பேரன்ஸ் வரலையா"என்றாள் கவலையூடன்.
"சும்மா இந்த பக்கம் வந்தேன்.அப்பா ஊர்ல இல்லை.அம்மா சித்தி வீட்டுக்கு போயிருக்காங்க.இன்னிக்கி வர வேண்டியது இன்னும் வரலை.அதான் சொன்னபடி நான் மட்டுமாவது போய்
பார்த்து வந்திரலாம்னு தோணுச்சி"
என்றபடி உள்ளே வந்தேன்.
 பெயின்ட் போயிருந்த மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டாள்.
கதவில் சந்திரிகாவோ,மெடிமிக்ஸோ ஒட்டப்பட்டிருந்தது.இருபது வருடத்துக்கு முந்திய கமலஹாசன் படம் சன்னலின் பின்பக்கம் ஒட்டப்பட்டு பாதி கிழிந்திருந்தது.உள்ளே காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த வயதான பெண்மணி எழுந்து வந்து கைகளைக்
குவித்து,"வாங்கோ"என்றாள்.அவளது அம்மாவாக இருக்க வேண்டும்.நல்ல செழிப்பாக அம்பாசிடர் போல இருந்தார்.
(சே.நான் ஏன் இப்படி கிறுக்குத்தனமாக யோசிக்கிறேன்!) வேறு யாரும் வீட்டில் இருக்கிற மாதிரி தெரியவில்லை.
"நான் பூங்கொடியோட ஆபீஸ்லதான் வேலை பார்க்கறேன். மனோகரன்"
"அப்படியா.உட்காருங்க"என்று உள்ளே
போய்விட்டார்.பூங்கொடி என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.அவளது அப்பா வீட்டில் இல்லை போலிருக்கிறது.அனல்
காற்று வீசியது.மின்விசிறி அற்பவேகத்தில் நொண்டியபடி சுழன்று
கொண்டிருந்தது.டிவியில் டிடி மட்டுமே இருந்தது.சுவற்றில் ஆணியடித்து புகைப்படங்களை வரிசையாக மாட்டி வைத்திருந்தார்கள்.அந்த வீட்டில்  ஒவ்வொரு இடத்திலும் நடுத்தர வர்க்கத்தின் அடையாளம்.அவள் அப்பா ஒரு பாலிடெக்னிக்கில் பணியாற்றி ஓய்வூ பெற்றவராம்.எப்போதும் காலையில் அவர்களது சாதிசங்கம் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று விடுவாராம்.தில்லைநகரில் இருக்கிறது அந்த அலுவலகம்.அங்கே போய் திருமணத் தகவல் போன்ற சமாச்சாரங்களை கவனிப்பாராம்.சாயந்தரமானால் பிஷப்ஹீபர் பள்ளிக்கூடத்தின் அருகில் நின்று கொண்டு நண்பர்களுடன்
பேசிக் கொண்டிருப்பாராம்.தன் பெண்ணிற்கு கல்யாணம் செய்து வைக்க
அவருக்கு தோன்றவில்லை போலும் என நினைத்துக் கொண்டேன்.பூங்கொடி ஒரு தட்டில் முறுக்கும்,நமுத்துப் போன மிக்சரும் கொண்டு வந்து வைத்தாள்.காபி பழைய டிகாஷனில் போட்டது மாதிரி இருந்தது.என்ன பேசுவது  என்று தெரியாமல் தவித்துப் போய்
வருவது வரட்டும் என்று அந்த அம்மாளை அழைத்தேன்.
"என்ன தம்பி சொல்லுங்க.அவர்  இப்ப வரமாட்டார்.காலைலயே
டிபன் கட்டி எடுத்துகிட்டு சங்கத்துக்கு போயிருவார்.நைட்தான் வருவார்"
"பூங்கொடிக்கு வரன் பார்த்துட்டு  இருக்கிங்களா"
"ம்"
"நான் நேரடியாகவே சொல்லிர்றேன். நான் இவளை கல்யாணம் செய்துக்க விரும்பறேன்"
"நீங்களா?",என்றாள் வியந்து போய். "எங்க அப்பா,அம்மாவை அழைச்சுட்டு  வர்றேன்.அப்பறம் முறைப்படி பேசலாம்"
கிளம்பி வந்து விட்டேன்.
 அம்மாவிடம் சொன்னேன்.அப்பா  என்னை ஏற இறங்கப் பார்த்தார்.பிறகு
அம்மாவிடம்~~நம்ம சாதியா அவங்க"
என்றார்.அப்பா இப்போதெல்லாம்  அடிக்கடி சாதி பற்றிப் பேசுகிறார்.
அவரது தம்பி காதல் கல்யாணம் செய்து கொண்டு போனபோது
சாதி பற்றி அவர் பேசவில்லை.கல்யாண மாப்பிள்ளை போல டிரஸ்
செய்து கொண்டு திருச்செந்துர்  சென்று தம்பியின் கல்யாணத்தில்
கலந்து கொண்டார்.அக்காவூக்கு  வரன் பார்க்க ஆரம்பித்தபோதும்
இப்படித்தான் 'சாதி' அங்கவஸ்திரத்தை தோளில் போட்டுக் கொண்டார்.இப்போது  மறுபடி பார்க்கிற ஆட்களிடமெல்லாம்
அவர் சாதி சாதி என்று பேசுவதைப் பார்த்தால் எனக்கு கல்யாணம் செய்து  வைக்க முடிவூ செய்து விட்டார் என்று  தோன்றியது.
 பூங்கொடியையூம்,அவர்களது குடும்பச் சூழ்நிலையையூம் சொன்னதும் உடனே வேண்டாம் என்றார்.கோயமுத்துரில் எங்கோ 'சாதியில்' பெண் பார்த்து  வைத்திருப்பதாகச் சொன்னார்.
 நான் சின்ன வயதிலிருந்தே அதிகம்  பிடிவாதம் பிடிப்பவன்.என் குணம்
அவரிடமிருந்து வந்தது.அதனால் அரை மனதோடு பெண் பார்க்க வர
சம்மதித்தார்.
 அடுத்தவாரம் என்னை ஆபீசில்  வைத்து சொன்னாள் பூங்கொடி.
"ஏதாவது வேண்டுதலா மனோ"
"என்ன பூங்கொடி"
"எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நான் பொருத்தமே இல்லை.உங்க
பக்கத்துல நிக்கறப்ப என்னைப்பார்த்தா சாணி பொறுக்கறப்
பொண்ணு போல தெரியூது"
பதில் சொல்லாமல் சிரித்தேன்.
நண்பர்களுக்க பார்ட்டி வைத்து  கொண்டாடினேன்.பாட்டிலை
திறந்ததுமே குணசேகரன் சொன்னான்.
"கொழுத்த எலி கழனிப்பானையிலதான் விழுமாம். தெரியூமாடா உங்களுக்கெல்லாம்"
"நீ செய்யறது கொஞ்சம் கூட  நல்லா இல்லைடா.பூங்கொடியோட
சம்பளத்துக்காகத்தான் இந்த மாரேஜ்னு நாங்க நினைக்கலை.நீயே வசதியான  குடும்பத்து ஆள்.உனக்கு ஏன்டா புத்தி
இப்படிப் போச்சு"
"ஏன் என்ன தப்பு"
"சரி விடுங்கடா ஆள் ஆளுக்கு டேஸ்ட் வேறுபடத்தான் செய்யூம்,என்றார்கள்.அப்பா கல்யாண நாள் நெருங்க நெருங்க ஆள் ஆளுக்கு பதில் சொல்ல தடுமாறினார்.
"லவ் மாரேஜா.பொண்ணு பார்த்தா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்கற
சின்னப் பையன் மாதிரி இருக்குதே.எப்படி ஒத்துக்கிட்டிங்க"
ஒரு தரம் என்னிடம் வந்து கெஞ்சலான  குரலில் கேட்டார்.நான் நிமிர்ந்து பார்த்த போது சொன்னார்.
"கல்யாணத்தை நிறுத்திரலாமாடா மனோ.
அவங்களுக்கு வேணும்னா கொஞ்சம் பணம் கிணம் தந்து"
"ஏன்"
"அந்தப் பொண்ணைப் பாத்தியா அப்படியே மரப்பாச்சி பொம்மை போல
இருக்குடா.உனக்கு ஏன் புத்தி இப்படி போகுது"
"அப்பா அந்த பொண்ணுக்கு பியட் கார்னு எங்க ஆபீசில பர் வைச்சிருக்காங்க."
"பார்த்தியா..பார்த்தியா..இந்த கல்யாணம் வேண்டாம்"
"இந்த கல்யாணம்தான் வேணும்.பூங்கொடிதான் வேணும் எனக்கு"
"எப்படியோ ஒழி.எல்லாம் என் தலையெழுத்து,"என்று போய் விட்டார்.
கல்யாணத்திற்கு நான்கு நாட்கள்  இருக்கும்போது ஒரு நாள் இரவூ எனக்கு தொலைபேசியில் அழைத்த பூங்கொடி கேட்டாள்.
"மனோகரன்.எனக்கே கொஞ்சம் நெருடலா இருக்கு.இந்த கல்யாணம் அவசியம் நடக்கனுமா.நீங்க எத்தனை பெரிய ஸ்போர்ட்ஸ்மேன்"
"கவலையை விடு பூங்கொடி.நான்  நல்ல மனநிலையிலதான்
இருக்கேன்.கல்யாணம் நல்லபடி நடக்கும். நீ சந்தோஷமா இரு"
 திருமணம் நடந்த அன்று அப்பா ஒருவித தவிப்போடு நின்றிருந்தார்.பேசுகிறவர்களிடம்,"அதெப்படி நம்ம சாதிப் பொண்ணாச்சே.அழகா முக்கியம்.குணம் வேணும் சார்.குணம்.அது மட்டுமில்லாம நம்ம சாதியா இருக்கறது முக்கியம்,"என்று தன்னுடைய 'சாதி' அங்கவஸ்திரத்தை மாட்டிக்கொண்டு அலைந்தார்.பூங்கொடியின் அப்பா  வாய்நிறைய வெற்றிலையை அடக்கிக்கொண்டு மண்டபத்தில் அமர்ந்து  தன்னுடைய பிரதாபங்களை அளந்து விட்டுக் கொண்டிருந்தார்.பூங்கொடி புறாக்குஞ்சு போல என்னுடன் நின்று கொண்டிருந்தாள்.அலுவலக நண்பர்கள் என்னை பெருமையாகவூம்,அசட்டுத் தனமானவனாகவூம் பார்த்து விட்டு
கைகுலுக்கி விட்டுச் சென்றனர்.
அம்மா மட்டும் யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே நின்றிருந்தாள்.
கல்யாண சடங்குகள் எல்லாம் முடிந்து நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டி ருந்தபோது அம்மா தொலைவிலிருந்து
என்னைப் பார்த்த பார்வை...
.தலையைச் சாய்த்து அம்மா  என்னை பார்த்த பார்வை என்னை
அழைத்தது.
 எழுந்து அருகே போனேன்.
"தப்புப்பா.",என்றாள்.
"இல்லைம்மா.சரிதான்,"என்றேன்.
"நீ அவரைப் பழி வாங்கறதா  நினைச்சுட்டு உன் வாழ்க்கையை
பாழாக்கிட்டியே"
சிரித்தேன்.
"சிரிக்காதடா எனக்கு அழுகையா வரது"
ஹலோ, உங்களுக்கு சினரியோ  புரியவில்லைதானே.இந்த கதை
முழுக்க நான் என்னைப் பற்றித்தான்  சொல்லிக் கொண்டு வந்தேன்.
இன்னொருவரையூம் சொல்லியிருக்க  வேண்டும்.சொல்லவில்லை.அவர்
என்னுடைய அப்பா.ஒரு அப்பா என்றவரையில் அவர் ஓகேதான்.
ஆனால் ஒரு கணவன் என்றவரையில்தான் அவர் ஒரு
புதிராகிப் போனார்.காரணம் அம்மாவின் அழகு.அழகு என்பது
தவறு.பேரழகு என்று சொல்ல  வேண்டும்.அம்மாவின் அந்த அழகின்
முன் தன்னுடைய சாதாரண உருவம் அவருக்கே அற்பமாகத் தெரிந்திருக்க அவர் செய்த கொடுமைகளை நான் பட்டியலிட்டால் இதெல்லாம் வழக்கமாக ஆண்கள் கதைகளில் எல்லாம் செய்கிற கொடுமைகள்தானே என்பீர்கள்.நான் இந்த கொடுமைகளை எல்லாம் சின்ன வயதிலிருந்து அருகில்
இருந்து பார்த்திருக்கிறேன்.சப்தம் வராமல் அழுதிருக்கிறேன்.அம்மாவின்
அழுதமுகத்தைப் பார்க்கப் பிடிக்காமல்  ஹாஸ்டலில்  படித்திருக்கிறேன்.
 அதனால் அப்பாவை பழிவாங்க வேண்டும்.அவருக்கு தண்டனை தர
வேண்டும் என்று எனக்குள் ஒரு வெறி. அதற்கு பலியாடு பூங்கொடி.அதற்காகத்தான் நான் அவளை கல்யாணம் செய்து கொண்டி
ருக்கிறேன்.பூங்கொடியின் முகத்தையூம், உருவத்தையூம் அவர் பார்க்கிறபோதெல்லாம் தன் மகனுக்கு இப்படி ஒரு மனைவியா என்று உள்ளுக்குள் அழ வேண்டும் என்று
ஒரு சந்தோஷம் எனக்கு.ஆனால் பூங்கொடியை நேசிக்க,அவளை என்
மனைவியாக ஏற்றுக்கொள்ள இனிமேல் தான் என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
 முதலிரவில் என்னருகில் சந்தோஷக் குழப்பத்தோடு நின்ற பூங்கொடியின் அருகே சென்று,"என்னை மன்னிச்சிடு  பூங்கொடி,"என்றேன் மெதுவாக.

                                                         ---------------------------
Previous
Next Post »