சிறுகதை: "தனியே... - விஜயநிலா



 சென்னை மழை, ஷாரூக், ஆமீர்கான், தெறி  என்று சிக்கலாக இருக்கும் உங்களது தினவாழ்க்கைக்குள் சற்று முன் அனுமதியில்லாமல்தான் குறுக்கிடுகிறேன்.மன்னிக்கவூம்.
 எனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.என் பிரத்யேக அறைக்குள் வரும் யாரும் சுவற்றில் மாட்டியிருக்கிற லேமினேடட் படத்தைப் பார்த்து விட்டு மார்லன்பிராண்டோவா என்று கேட்டிருக்கிறார்கள்.அது ராபர்ட் எட்மான்ட் ஜோன்ஸ்.உலகின் முதல் காஸ்ட்யூம் டிசைனர்.இல்லை உலகின் முதல் காஸ்ட்யூம் டிசைனர் ஏவாள்தான் என்று குறுக்கே வருபவர்கள் விலகிக் கொள்ளவூம்.நான் சற்று சீரியசாக சொல்ல விரும்புகிறேன் இந்த கதையை.ஸாரி உண்மைச் சம்பவத்தை.
   என் பெயர் ரிஷி.பஞ்சவதன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில், விருமாண்டி சந்தனம் என்ற பிடிவாத தமிழ்ப்பெயர்களுக்கு மத்தியில் எனக்கு இரண்டே எழுத்தில் ரிஷி என்று பெயர்.இதையூம் சுருக்கி என் கேர்ள் ஃப்ரன்ட்கள் என்னை 'ர்ரி' என்று அழைப்பார்கள்.இப்போது அதற்கெல்லாம் வழியில்லை.எனக்கு கல்யாணமாகி விட்டது.சுபத்ரா வந்த பிறகு வாழ்க்கை மாறிப்போய் விடும் என்றெல்லாம் நினைத்தேன்.தவறு.
 நான் ஒரு காஸ்ட்யூம் டிசைனர்.பொதுவாக படங்களின் ப்ரிபுரொடக்ஷனின் போதே என் வேலையை 90 சதவீதம் முடித்து விடுவேன்.சில மல்டிஸ்டார் படங்களில் மட்டும் வேலை கழுத்தைப் பிடித்து இறுக்கும்.நான் நேரங்கழித்து வந்தால் மற்ற பெண்கள் போல சுபத்ரா குற்றப்பத்திரிகை வாசிக்க மாட்டாள்.ரொம்ப சுலபம்.எனக்கு டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்து விட்டு துரங்கி விடுவாள்.
 இந்த கதை சுபத்ரா பற்றியல்ல என்றாலும் கொஞ்சம் கிட்டே வாருங்கள்.சுபத்ரா பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன்.அவள் சாகப் போகிறாள்.அனாமத்தாக.யாருமே காப்பாற்ற முடியாமல்.காரணம் அப்புறம் சொல்கிறேன்.
 நான் மதுக்கிருஷ்ணனுடன் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்து அவன் சிஜி செய்வதை பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த சிஜிக்கு பொருத்தமாக நான் என் காஸ்ட்யூம் வேலையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.கதாநாயகியாக நடிக்கும் தெலுங்குப் பெண்ணிற்கு உடலில் இடுப்பைத் தவிர எதுமில்லை.அதனால் அவள் இடுப்பை வைத்து ஆட விட்டு பாடல்களை ஒப்பேற்ற வேண்டும் என்று டைரக்டர் காலையிலேயே நோட்பேடில் பாடலுக்காக குறிப்புகள் தந்து விட்டுப் போயிருக்கிறார்.
 சிஜியில் ஹீரோயினின் இடுப்பு வசீகரமாக கிள்ளிப் பார்க்கலாமா என்று விரல்களை பரபரக்க வைத்தது.பின்புறத்தை சற்று பெரிதாக்கி விடுமாறு டைரக்டர் சொல்லியிருப்பதால் அதை கவனித்துக் கொண்டிருந்தான் மதுக்கிருஷ்ணன்.
 அப்போது என் செல்பேசி ஒலித்தது.
ஒரு தனியார் தமிழ்ச்சேனலிலிருந்து ஆங்கிலத்திலஅழைத்தாள் ஒரு பெண்.அவர்களது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைக்க விரும்புகிறார்கள்.என்ன ப்ரோக்ராம் என்றேன்.
'முன் ஜென்மம்" என்றாள்.
அப்படி ஒரு ப்ரோக்ராம் ஏதும் வருகிறதா?எப்போதாவது நான் டிவி பார்ப்பேன்.அதுவூம் எம்ஜிஎம்மில் பழைய கிளாசிக் ஆங்கிலப் படங்கள் என்றால் மட்டுமே.அதென்ன முன்ஜென்மம்.ஏதேனும் சித்தர்கள் ஆவி சம்பந்தப்பட்ட வாரஇறுதி சீரியல் போன்ற டிஆர்பி ரேட்டிங் எகிறச் செய்யூம் நிகழ்ச்சியா?
 அதன்பின் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் அழைத்தார்.அவரை நான் சில படங்களில் பார்த்திருக்கிறேன்.ஸ்டன்ட் நடிகராக இருந்து குணச்சித்திர நடிகரானவர்.
"ரிஷி சார்.நீங்க அவசியம் கலந்துக்கனும்"
"என்ன ப்ரோக்ராம் அது.என்னமோ சென்மம்னாங்க"
"யா.முன் ஜென்மத்துல நீங்க யாரா அல்லது என்னவா இருந்திங்கன்னு கணிச்சி உடனே சொல்லிருவோம்"
"உடான்ஸ்"என்று சிரித்தேன்.
"நம்புங்க ரிஷி.முதல்ல சில கேள்விகள் கேட்பம்.அப்புறம் உங்களை படுக்க வைச்சி மனோவசியப்படுத்தற மாதிரி உங்க மனதை பின்தொடர்வோம்.கடைசியில நீங்க யாரா என்னவா இருந்திங்க முன் ஜென்மத்துலன்னு நீங்களே சொல்லிருவிங்க"என்றார்.
"ஓகே.ஏதோ சொல்றிங்க.நீங்க சொல்றதை நாங்க நம்பித்தானே ஆகனும்"என்றேன் அரைமனதாக.
"நாங்க சொல்ல மாட்டம்.நீங்களே சொல்விங்க."
அடுத்த வாரம் வரச்சொன்னார்கள்.வண்டி அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.எனக்கு செல்ஃப் டிரைவ்தான் பிடிக்கும்.ஸ்கோடா வைத்திருக்கிறேன்.சுபத்ராவை விட எனக்கு என் கார் மேல்தான் காதல் அதிகம்.
ஸ்டுடியோவிற்கு சென்றதும் உள்ளே ஒரு அறையில் உட்காரச் சொன்னார்கள்.அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வந்து பவ்யமாக சிரித்து என் கைகள் பற்றி குலுக்கி விட்டு நான் வேலை பார்த்த படங்களில் சிலவற்றை சொல்லி அதிலிருந்து காஸ்ட்யூம் உன்னதம் பற்றி புகழ்ந்தார்.பயோடேட்டாவை சரியாகப் படித்திருப்பார் போலிருக்கிறது என்று புன்னகைத்தேன்.அப்புறம் நிஜய்ரத்தினம் கதவை திறந்து கொண்டு சிரிப்புடன் உள்ளே வந்தார்.
"நீங்க எங்க புரோக்ராமை நம்பலை போலிருக்கு"
"எனக்கு சென்மம்கற கான்சப்ட்டே தப்புன்னு படுது நிஜய்.மனுஷ உடம்பே ஒரு மெஷின் மாதிரி.எப்ப வேணா ரிப்பேராகி காயலான் கடைக்கு போயிரலாம்"
"சரி.வாங்க செட்டுக்கு போயிரலாம்.நாங்க சொல்றது நுரத்துக்கு நுரறு சரியா இருக்கும் ரிஷி சார்"
"அதை எப்படி நம்பறது நிஜய்ரத்தினம்.ஏதாவது ப்ருப் தருவிங்களா.."
"உங்களுக்கு மட்டும் சொல்றேன்.நீங்க ஸ்பெஷல் செலிப்ரட்டி கெஸ்ட்டுங்கறதால போன ஜென்மத்துல நீங்க என்னவா இருந்திங்கன்னு மட்டுமில்லாம போன ஜென்மத்துல உங்க கடைசி தினத்துல இருந்தவங்க இந்த ஜென்மத்துல எங்கே இருக்காங்கன்னு ஒரு க்ளு மாதிரி சொல்றேன்.யார்கிட்டயூம் சொல்லிராதிங்க"என்றார்.
 நிகழ்ச்சி அரங்கில் என்னை அமர வைத்து விட்டு லைட்டிங் கேமரா கோணம் எல்லாவற்றையூம் சரிபார்த்தார்கள்.ஒரு பெண் காமராவிற்கு பின்னால் நின்று கொண்டு என்னை பார்த்தாள்.தவறு.ஏறக்குறைய சைட்தான் அடித்தாள்.
 ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்றதும் நிஜய் ரத்தினம் என்கைகளைப் பற்றி குலுக்கி விட்டு என்னை ஒரு சேரில் அமர வைத்தார்.என்னைப் பற்றி சில கேள்விகளை கேட்டார்.நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது காமராபெண் குபுக்கென்று சிரித்து விட்டதில் நான் கவனம் கலைந்தேன்.நாலைந்து முறை கட் செய்தார்கள்.அப்புறம் அவளை வெளியே அனுப்பி விட்டு காமரா ஓட அவள் செட் ஓரத்திலிருந்த ஒரு பழைய மோட்டார்பைக்கில் அடியில் அமர்ந்து கொண்டு என்னையே பார்ர்ர்த்துக் கொண்டிருந்தாள்.
மறுபடி கட்.
"வாங்க ரிஷி இதுல படுத்துக்கங்க.ரிலாக்ஸ்ட்டா ஃபீல் பண்ணுங்க.எந்த பயமும் வேண்டாம்.கண்களை மூடிக்கங்க.கேட்கற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்"
"ட்ரை பண்றேன்"என்றேன்.
கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார் நிஜய்ரத்தினம்.அப்புறம் கேள்விகள் கேட்பது குறைந்து..நிசப்தம்.நான் என்னையூமறியாமல் பேச ஆரம்பித்தேன்.
'நான் ஆமதாபாத்தில் பிறந்தேன்.தீரஜ்லால்ஹீராசந்த்தை நான் அப்போதே அறிவேன்.இரண்டு பேரும் துணி வியாபாரம் செய்திருக்கிறௌம்.தீரஜ்லால்ஹீராசந்த் என்றால் உங்களுக்கு புரியாது.சுருக்கமாய் அம்பானி என்று சொன்னால் புரிந்திருக்கும்.அப்புறம் எனக்கு பிசினஸ் செட் ஆகாமல் டெக்ஸ்டைல் டிபார்மன்ட்டில் அரசாங்க வேலை கிடைத்து ஆபீசராகி விட்டேன்.வசதியான வாழ்க்கை.டில்லியில் குடித்தனம்.அழகான மனைவி.குழந்தைகள் இல்லை.சின்னதாய் ஒரு சராசரி இந்தியனாக இருந்த நான் ஒருநாள் செத்துப் போனேன்.இல்லை.அப்படியில்லை.எல்லாரும் போல வயதாகிப்போய் நான் சாகவில்லை.என்னை யாரோ மண்டையில் அடித்து கொலை செய்தார்கள்.யாரென்று நான் திரும்பிப் பார்ப்பதற்குள் கண்களுக்குள் வகிதாரஹ்மானோ ஆஷா பரேக்கோ இல்லை வேறு யாரோ மசமசப்பாக தெரிந்தார்கள்.அதற்குள் நான் சுத்தமாய் செத்துப் போயிருந்தேன்.அப்புறம் ரீல் அறுந்து போன மாதிரி நான் விழித்துக் கொண்டேன்.
"ப்ரமாதம்"என்று சிரித்தார் நிஜய்ரத்தினம்.
"நான் என்ன சொன்னேன்.ஏதாவது என்னை ஹிப்னடைஸ் பண்ணினிங்களா"என்றேன்.
"இல்லை.முன் ஜென்மத்துல நீங்க அம்பானியை பார்த்து பழகியிருக்கிங்க.ஒரு கவர்மன்ட் ஆபீசரா இருந்த உங்களை கொலை செய்துட்டாங்க.அதுக்கு காரணம் என்ன தெரியூமா"
"என்ன"
"நீங்க தனியா இருந்ததுதான்.இனிமே தனியா இருக்காதிங்க.எங்கேயூம் எப்பவூம்.தனிமைதான் உங்களுக்கு எதிரி"
"அப்புறம்?"
"ப்ரோக்ராம் இஸ் ஓவர்.அடுத்த மாதம் டெலிகாஸ்ட் பண்ணுவம்.எடிட் ஆனதும் நீங்க வந்து பார்த்துக்கலாம்"
"அப்ப சொல்றேன்னு சொன்னிங்களே"
"என்ன"
"என்னை யார் கொலை செய்ததுன்னு"
"வாங்க என் ரூமுக்குள்ள போயிருவம்.அந்த காமரா அசிஸ்டன்ட் பொண்ணு உங்களை சைட் அடிக்குதுன்னு நினைக்கறேன்"
அவரைப் பின்தொடர்ந்து போய் அமர்ந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குள் அதிர்ச்சியை கிளப்பின.
"என்ன சொல்றிய்க நிஜய்"
"ஆமா.நீங்க முன் ஜென்மத்துல கொலை செய்யப்பட்டுட்டிங்க ரிஷி"
"அதான் சொன்னேனே ஷஷுட்டிங்ல.நீங்க என்னமோ சொல்றேன்னு சொன்னிங்களே"
"ஓ..அதுவா..தனியான சந்தர்ப்பங்களை தவிர்த்துருங்க.தனியா இருக்கும்போதுதான் உங்களை கொலை செய்தாங்க"
"இதுவா பதில்.என்னை கொலை செய்தவங்க இந்த ஜென்மத்துல எங்க இருக்காங்கன்னு சொன்னிங்க"
"நீங்க வீட்டுக்குப் போனதும் புரியூம்.போய்ப்பாருங்க.புரியலைன்னா எனக்கு ஃபோன் அடிங்க.யார்னு உடனே சொல்றேன்"
வீட்டுக்கு திரும்பினேன்.ஏமாற்றமாகவூம் வெறுப்பாகவூம் இருந்தது.இந்த ப்ரோக்ராமில் என்னை கலந்து கொள்ள வைப்பதற்காக நிஜய்ரத்தினம் பொய் சொல்லியிருக்கிறாரா?நான் கொலை செய்யப்பட்டேன் என்றால் இந்த பிறவியில் அந்த கொலையாளி எங்கே?தனிமைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
இதில் எதையாவது நான் வரிகளுக்கு இடையே வாசிக்க வேண்டுமா?
கேள்விகள்...கேள்விகள்..
முகேஷ் அல்லது அனில் இவர்களில் யாரையாவது நான் கேட்க வேண்டுமா?ச்சே.தப்பாக யோசிக்கிறேன்.என் வீடு ஏழாவது மாடியில்.லிஃப்டில் ஏறி காரிடாரில் அமர்ந்து கதவருகிலிருக்கும் அழைப்பு மணியை அழுத்தும் முன் திறந்து கொண்டது.
உள்ளே பேச்சுக்குரல் கேட்டது.
"இந்த அபார்ட்மன்ட்ல மொத்தம் நாற்பது வீடுங்க இருக்கு.ஆனா உங்க ப்ளாட்ல மட்டும்தான் தனிமை இருக்குஇவீட்டுல நீங்க ரெண்டே பேர்தான்.எப்பவூம் தனிமைங்கறதால குழந்தை பிறக்கறதுக்கு உங்க கணவர் ஓவர்டைம் முயற்சிகள் ஏதும் செய்வாரா"என்று எதிர்ப்ளாட் பெண்மணி பேசிக்கொண்டிருந்தாள்.சுபத்ரா பதிலுக்கு எதுவூம் சொல்லாமல்கேட்டுக் கொண்டிருந்தாள்.
 எதிர்ப்ளாட் சொன்ன வார்த்தை எனக்குள் சறுக்கென்று இறங்கியது.
'உங்க ப்ளாட்ல மட்டும்தான் தனிமை'
என்ன சொல்கிறாள் இவள்?
"ஆமா சுபத்ரா.மத்த ப்ளாட்ல யாராவது ஓல்டு ஏஜ் பீப்பிள் கூட இருப்பாங்க.இல்லைன்னா அட்லீஸ்ட் வேலைக்காரி யாராவது வந்துட்டுப் போவாங்க.நீதான் வேலைக்கும் யாரையூம் அமர்த்திக்கலையே"
சுருக்கென்றது எனக்குள்.அப்போதுதான் ரீவைண்ட் செய்து பார்த்தேன்.அவள் சொல்வது உண்மைதான்.இந்த ப்ளாட்டில் நானும் சுபத்ராவூம் மட்டும்தான்.
தனிமையோ தனிமை.ஆனாலும் அவள் என்னிடம் சற்று ஒட்டுதல் இல்லாமல் பழகுவது போலத்தான் இருக்கும்.இரவூகளில் அவளை ஆக்கிரமித்தாலும் அவள் முடிவில் எதுவூமே நிகழாதது போல எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு அரை செகன்ட்டில் துரங்கிப்போய் விடுவாள்.ஒரு குட்நைட் கிடையாது.மோவாயைப் பிடித்து கிள்ளியது கிடையாது.நீ சரியான முரடுப்பா என்று இடுப்பில் குத்தியது கிடையாது.ஆனால் எப்போது அழைத்தாலும் வந்து படுப்பாள்.முடிந்ததும் எதுவூமே நிகழாதது போல விலகி விடுவாள்.இத்தனை நாள் இதை நான் உணராது இருந்திருக்கிறேன்.
அப்படியானால்...
தனிமை...
தனிமையில் ரொம்ப நேரம் என் கூட இருப்பது...
தனிமையில் என்னுடனே படுத்துக் கொள்வது...சாப்பிடுவது..டிவி பார்ப்பது..எல்லாமே சுபத்ராதான்.
அப்படியானால்...அவள்தான் என்னை ..அதென்ன...Nபுhன ஜென்மத்தில் என்னை...
க்ரேட்.கண்டு பிடித்து விட்டேன்.என்னை கொன்றவளை.என்னை கொல்லப் போகிறவளை...
வெயிட் எ மினிட்...
இந்த ஜென்மத்தில் நான் முந்திக்கொண்டு விட்டால்..
இப்போதே இவள் கழுத்தை நெறித்து..
ச்சே.அசட்டுத் தனமாக யோசிக்காதே.சரியாக திட்டம் போட்டு ப்ளோசார்ட் போல மனதிற்குள்ளாக எழுதிக்கொண்டு அப்புறம் ஒரு சுபநாளில்..சுபத்ராவை...நினைத்துப் பார்த்தாலே இனிக்கிறது.
என் செல்பேசி ஒலித்தது.
"நான்தான் நிஜய்ரத்தினம்.என்ன யோசிச்சிங்களா..தனிமைங்கற கீவேர்டு பயன்படுத்தி ஏதாச்சும் தேத்த முடிஞ்சதா"
"ஏறக்குறை கண்டுபிடிச்சிட்டேன் நிஜய்ரத்தினம்"
"க்ரேட்.நான் உங்களை கூப்பிட்டதுக்கு வேற காரணம்"
"என்ன"
"செட்யூல்லை எடிட் பண்ணியாச்சு.அட்டகாசமா வந்திருக்குஇ"
"ஓகே"
"ஆனா நீங்க மயக்க நிலைல இருக்கும்போது உங்க முகத்துக்கு குறுக்காக கலங்கலா ஒரு முகம் போல தென்பட்டது.இட்ஸ் அமேஸிங்.அதை உங்களுக்கு காட்டனும்.உடனே வாங்க.இதுவரைக்கும் எந்த அமானுஷ்யமும் எங்க எபிசோடுல முகம் காட்டலை.."
"கதை விடாதிங்க.டிஆர்பியை ஏத்தறதுக்கு புருடா விடறிங்க"
'இல்லை ரிஷி.இதை நான் இன்னும் எங்க ப்ரொமோ ஹெட்டுக்கு கூட சொல்லலை..வாங்க.பார்த்தா நீங்களே ஆச்சர்யப்படுவிங்க"
எனக்கும் முதல் முறையாக ஆர்வம் வந்தது.
கிளம்பினேன்.
ஸ்டுடியோவிற்குள் போனபோது நிஜய்ரத்தினம் ரெடியாக இருந்தார்.
"வாங்க ரிஷி.எடிட்டிங் கன்சோல் ஏழாவது ப்ளோர்ல இருக்கு.லிஃப்ட்ல போயிரலாம்"
லிஃப்ட்டில் புகுந்தபோது என்னையூமறியாமல் சுபத்ராவின் முகம் ஞாபகம் வந்தது.அவளை கொன்று விட்டிருக்கலாமோ?
லிஃப்ட்டில் எங்களையூம் சேர்த்து ஏழு பேர் இருந்தோம்.
1..லிஃப்ட் மேலேறியது குலுங்காமல்.
2..இரண்டு பேர் இறங்கினர்கள்.மூன்று பேர் ஏறினார்கள்.
3..நான்கு பேர் ஏறினார்கள்.
4..ஐந்து பேர் இறங்கிப் போய் விட்டார்கள்.மறுபடியூம் ஏழுபேர்களானோம்.
5..நான்கு பேர் இறங்கி விட இரண்டு பேர் ஏறினார்கள்.
6..மூன்று பேர்கள் இறங்கி விட யாரும் ஏறவில்லை.
அடுத்து ஒரே ஒரு ப்ளோர்தான்.ப்ளக்கென்று ஒரு சப்தம்.அப்புறம் சரசரவென்று என்னவோ சப்தம்.லிஃப்ட் நின்று போய் விட்டது.
உள்ளே நானும் நிஜய்ரத்திம் மட்டுமே.
என் செல்பேசி ஒலித்தது.
எடுத்தேன்.
சுபத்ரா!
இப்போது லிஃப்ட்டில் எங்கள் இருவரையூம் சுபத்ராவின் குரலையூம் சேர்த்துக் கொண்டால் மொத்தம் மூன்று பேர்.
"என்ன சுபத்ரா"
"திடீர்னு எழுந்து போயிட்டிங்களே.எதுவூம் டிஸ்கஷனா.."
"இல்லை.இது வேற"
"ஹ்ஹாவ்..எனக்கு துரக்கம் வரது.நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க"என்று அவள் ஃபோனை வைத்து விட-
முதல்முறையாக சுபத்ராவை கொல்ல வேண்டாம் என்று தீர்மாணித்தேன்.
தனிமையான லிஃப்ட்.சரி செய்ய அரை மணி நேரமாவது ஆகும்.
உள்ளே இரண்டே பேர்.
நான்-நிஜய்ரத்தினம்.
த.னி..மை..
அப்படியானால் முன் ஜென்மத்தில் என்னை கொலை செய்தது?
என் பாக்கெட்டிற்குள் கையை விட்டு கத்தி ஏதும் இருக்கிறதா என தேடினேன்.ச்சே.காஸ்ட்யூம் டிசைனரிடம் என்ன இருக்கும்.
எதற்கு கத்தி?கைகள் போதாதா?கழுத்தில் வைத்து ஸ்ட்ராங்குலேட் செய்து..
"என்ன அப்படி பார்க்கறிங்க ரிஷி"என்ற நிஜய்ரத்தினத்தின் பார்வையில் பயம் கோடிட்டிருந்தது.
மெதுவாக புன்னகைத்தபடி இரு கைகளையூம் நீட்டியபடி அவரை நெருங்கினேன்.எதற்கும் நாளைக்கு செய்தித்தாள் வாங்கிப் பாருங்கள்.

                                                    ------------------------------
Previous
Next Post »