சிறுகதை: கவிதைகள் கைவிடப்படுவதுண்டு.... -விஜயநிலா


  
ஒரு பெண்ணை அழகானப் பெண் என்று சொல்ல எவையெவையெல்லாம் தேவை என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்.அழகான வசீகரிக்கும் முகம்,அப்படியே ஆளைச் சுருட்டிப்
போடுகிற மாதிரி கண்கள்,கிட்ட வந்து வருடி விடுகிற மாதிரியானப் புன்னகை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பனிச்சறுக்கில் சரேலென இறங்கும் இடுப்பு இப்படி எத்தனையோ இருக்க நான் எதைப் பார்த்து கவிதை எழுதினேன் தெரியூமா?
 அந்தப் பெண்  எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தாள்.சற்று ஒல்லியான தேகம்தான்.சிறிய கூந்தல்தான்.ப்ளவூசை யூ ஷேப்பில் பின்னால் வெட்டியிருந்தாள்.அந்தப்பெண்ணின் முதுகுதான் எனக்குள் எதையோ கிளப்பியது.அவளின் கோதுமை நிற முதுகில் மினுமினுப்பான பூனை ரோமங்கள் மேலே இருந்த ட்யூப்லைட் ஒளியில் பளபளத்தது.
  இதில்  என்ன ஒரு வினோதம் என்றால் நான் அமர்ந்திருந்தது ஒரு பள்ளியின் பரிட்சை ஹாலில். பிஷப்ஹீபர் பள்ளி புத்துரில்  இருக்கிறது.அந்த பக்கமாக நான்
சைக்கிளில் ரவூன்ட் அடித்திருக்கிறேன்.கட்டைச் சுவரில் உட்கார்ந்து கொண்டு தம்மடித்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.
  அதெல்லாம் ஒரு காலம்.இப்போது நண்பர்கள் கிடையாது. எப்போதாவது செல்லில் கிடைத்தால் கூட அவசர ஹலோ மட்டும்தான்.என்ன சொல்ல வந்தேன்?
  அந்தப் பெண்!
  அவள் பரிட்சை ஹாலில் எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தாள்.
கோதுமை நிற முதுகும்,பொன்னிற முடிகளும் எனக்குள் கிறக்கமூட்டவே நான் பாங்க் எக்ஸாமை கைவிட்டு ஹால்டிக்கெட் கொண்டு வந்திருந்த என்வலோப்பில் அவள் முதுகு பார்த்து கவிதை எழுதினேன்.
டெஸ்ட்ஆஃப் ரீசனிங்கும்,நியூமரிக் எபிலிட்டியூம் யாருக்கு வேண்டும்.
முகம் தெரியாத அவளின் முதுகு தரும் கவிதைதானே வேண்டும்.
  இரண்டொரு தடவை அவள் வேறொரு பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
அவளது முழுமுகத்தைப் பார்க்க முடியவில்லை.உட்காரும் முன்பே
பார்த்திருக்கலாம்.நான் எப்போதுமே எதிலுமே லேட்.
 அவளது இடது பக்கத்து கன்னமும்,காதில் தொங்கிய தோடும் கூட
ஏதோ குடை ராட்டினம் போல ஆடியதும் என்னைக் கவரவில்லை.
அவள் முதுகு போல கிறக்கமாக அவளிடம் எதுவூம் இல்லை.
 பரிட்சை ஹாலிலிருந்து வெளியே வரும்போது இந்த கவிதையை அவளிடம் காட்டினால் என்ன நினைப்பாள்.அவளிடம் பேசலாமா என்றெல்லாம் அசட்டுத்தனமாக நான் யோசித்துக் கொண்டிருந்தபோது பரிட்சை முடிந்த தருணத்தில் அவளே இட்சினியோ எதுவோ மந்திரம் போட்ட மாதிரி அவளே என்னிடம் பேசினாள்.
"எக்ஸ்கியூஸ் மி..என்னோட பேனா மூடி கீழ விழுந்திடுச்சி.உங்க காலடியில இருக்கான்னு பார்க்கறிங்களா"
அவள் குரல் சாக்லேட்ஐஸ்க்ரிம் மாதிரியெல்லாம் இல்லை.சற்று கரகரப்பான குரல்தான்.அதில் கூட செக்ஸ் ஒளிந்திருந்ததை நான் கண்டு பிடித்தேன்.என் காலடியில்தான் பேனா மூடி விழுந்திருந்தது.எடுத்துக்கொடுத்தேன்.அவள் தாங்க்ஸ் கூட
சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
அவள் நடந்து போகும்போது பார்த்தேன். மார்போடு வைத்திருந்த பர்ஸூடன் ஹால்டிக்கெட் கவரில் அவளது பெயர் சிவகாமி என்றிருந்தது.
  அந்தப் பெயர் எனக்குப் பிடிக்கும்.
சின்ன வயதில் படித்த சரித்திரக் கதையில் வரும் நாயகியின் பெயரும் சிவகாமிதான்.
  சிவகாமி புத்துர் பஸ்ஸ்டான்டில் பஸ் ஏறிச் செல்லும்வரை நான் பார்த்துக் கொண்டே நின்றேன்.  இது ஏட்டு வருடங்களுக்கு நடந்தது.
அதன்பின் நான் சிவகாமியை எப்போது மறுபடி பார்த்தேன் என்று நினைக்கிறீர்கள்.
  இந்ததரம் இன்னொரு கல்லுரி. ரயில்வே எக்ஸாம்.என்னாச்சர்யம்.
இப்போது சிவகாமி எனக்கு நான்கு வரிசை தள்ளி முன்னால் அமர்ந்திருந்தாள்.பாதி தேர்வில் என்னை திரும்பிப் பார்க்கமாட்டாளா என்ற தவிப்பில் நான் அமாந்திருந்தேன்.அவள் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.
  கவிதை எழுதலாமா?
 நான் கவிதை எழுதவில்லை.காரணம் இப்போது அவள் கழுத்தை முழுக்க மூடிய மாதிரி ரவிக்கை அணிந்திருந்தாள்.அதற்குள் பாஷன் மாறிவிட்டதா?ஆறே மாதத்தில் மாறி விடுமாமதியமும் தேர்வூ இருந்ததால் நான்  மரத்தடியில் அமர்ந்திருந்தேன்.இது என்ன மாதிரியான மரம் என்று தெரியவில்லை.சிவப்பு நிறத்தில் பூக்களாகக் கொட்டியிருந்தன.அங்கே இருந்த அத்தனைப் பெண்களும் பூக்களாகச்
சிரித்துக் கொண்டிருக்க அவள் யாரிடமும் பேசாமல் ஏதோ ஒரு கைடு வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.
 முகம் வாடிப்போயிருந்தது.சாப்பிட்டிருக்கிறாளோ  இல்லையோ.இல்லை.சாப்பிட்டிருக்கிறாள்.பக்கத்தில் ஒரு எவர்சில்வர் டப்பா வைத்திருந்தாள். அநேகமாக தயிர்சாதம்,வடுமாங்காயாக இருக்கும்.
என்னவோ தெரியவில்லை.அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது.
 அருகே போனேன்.
"ஹலோ.."என்றேன்.என்னால் சகஜமாக சிரிக்க முடியவில்லை.அவளிடம் தயிர்சாத வாசனை வீசியது.
"என்ன"என்றாள்.அதே கரகர குரல்!
"ஆச்சர்யமா இருக்குங்க."
அடுத்ததாக நீ யார் என்று கேட்டு விடுவாள் என்று நினைத்தேன்.கேட்கவில்லை.என்னை அடையாளம் தெரிந்து கொண்டாள்.
"ஓ..அந்த பாங்க் எக்ஸாம்ல பார்த்தம்ல.என்னோட பேனா மூடியை தேடித்தந்திங்க|,"என்றாள்.
"என்னங்க ஆச்சு.பாங்க் எக்ஸாம்.உங்களுக்கு ரிசல்ட் வரலையா,"என்றேன்.
"வரலை.படிச்சா மட்டும் போதாதுன்னு நினைக்கறேன்.இன்டர்வ்யூ வர்றதுக்கு செலவூ பண்ணனுமாம்,"என்றாள்.
"அப்படியெல்லாம் இல்லைங்க.எங்க தெருவில ஒரு பையனுக்கு கிடைச்சிருக்கு.நாம எல்லாம் சரியா எக்ஸாம் எழுதறதில்லை.நானே எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்து கவிதைதானே எழுதினேன்"
"கவிதை எழுதினிங்களா",என்றாள் பயத்துடன்.
"ஆமா.எதைப் பார்த்து எழுதினேன்னு இப்ப சொல்ல மாட்டேன்.திட்டுவிங்க",என்றேன்.அதற்கு
மேல் பேசமுடியாமல் அவளுக்கு தெரிந்த பெண்கள் வந்து விட்டார்கள்.அவளும் என்னை கத்தரித்து விட்டாள்.
 ரயில்வே எக்ஸாம் முடிந்ததும் என்னை லேசாகப்பார்த்துக் கொண்டே சென்றாள்.நான் அவளை மறுபடியூம் பார்த்து கவிதை எழுதலாமா என நினைத்தேன்.பொன்மலை பஸ்ஸிலேறி சென்று விட்டாள்.அதன்பின் ஒரு தரம் தெப்பக்குளத்தில் அவளை ஒரு சாயங்காலத்தில் பார்த்தேன்.அவளுடன் ஒரு வயதானப் பெண் வந்திருந்தாள்.
இப்போது அவள் யூ வடிவ ப்ளவூஸ் அணிந்திருந்தாள்.தெப்பக்குளத்தில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் சந்தில் நின்று கொண்டு நான் எனது நோட்டுபுத்தகத்தை திறந்தபோது அவளை கும்பலாக வந்த ஜனங்கள் அள்ளிக் கொண்டுப் போய்விட்டன.
 இன்னொரு நாள் ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதி அருகே நான் நின்று கொண்டிருந்தபோது சிவகாமி எங்கிருந்தோ தோன்றினாள்.சே!வந்து கொண்டிருந்தாள்.
"அட..சிவகாமி எப்படியிருக்கிங்க.ஸ்ரீரங்கத்துல கூட பரிட்சை வைக்கிறாங்களா", என்றேன்.
"சேசே.நான் இங்க வாரா வாரம் வருவேன்",என்றாள்.
அது போதாதா எனக்கு.
அப்புறம் சிவகாமியை அடிக்கடி சந்திக்கும் தருணங்கள் கிடைத்தன.அவளிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் மெல்ல அவளிடம் சொன்னபோது சிவகாமி என்னை நேருக்கு நேராகப் பார்த்து சிரித்தாள்.
"என்ன காதலிக்கறிங்களா"
"ஆ..ஆமா",என்றேன்.
"ஏன்"
"உங்களை பிடிச்சிருக்கு",என்றேன்.
"நமக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கறது முக்கியமில்லை.கொஞ்சம் பிராக்டிகலா பேசுவமா நம்ம ரெண்டு பேருக்குமே வேலை கிடையாது.சினிமால வர்ற மாதிரி ஊட்டிக்கோ,குலுமணாலிக்கோ போய் பாட்டு பாடனும்னா கூட கையில காசு கிடையாது.நாம எப்படி காதலிக்க முடியூம் மிஸ்டர் சுப்பிரமணியன்"
"அப்ப காதலுக்கு காசு அவசியமா"
"தெரியலை.ஆனா காசு இருந்தாதான் வயித்துல பசி இல்லாம,நாளைக்கு என்ன செய்யறதுங்கற பயம் இல்லாம இருக்க முடியூம்.பயம் இல்லாம இருந்தாதான் புத்தி உடம்பு பத்தியூம்,மனசு பத்தியூம் யோசிக்கும். இப்ப நான் அடுத்த எக்ஸாம் எழுதறதுக்கு
பிரிப்பர் பண்ணலாமா இல்லை ஹிந்தி அப்படி இல்லைன்னா கம்ப்யூட்டர் கிம்ப்யூட்டர் படிக்கலாமான்னு இருக்கு.வரேன் சுப்பிரமணியன். ஒரு வேளை,வேலை கிடைச்சதுன்னா நாம மறுபடி மீட் பண்ணலாம்"
 நானே எனது முகத்தில் கரி பூசிக் கொண்டது போல உணர்ந்தேன்.எத்தனை நேரம் தாயார் சந்நிதியில் அப்படியே நின்றிருப்பேன் என்று தெரியாது.
 சிவகாமி போய்விட்டாள்.முதுகு தெரிய,அந்த முதுகில் இருக்கிற பொன்னிற பூனை முடிகள் தெரிய அசைந்து அசைந்து நடந்தபடி போய் விட்டாள்.
 இன்னொரு நாள் அவளை டவூன்ஹால் பக்கமாக வளையல் கடைகள் அருகே இருக்கும் பழைய புத்தகக் கடையில் பென்ஜான்சனை தேடிக்கொண்டிருந்தபோது பார்த்தேன்.கையில் குடையூம்,சற்று வண்ணமாக சேலையூமாக நடந்து போனாள்.பின்னால் நடந்தேன்.தாலுகா ஆபீசில் அவள் நுழைந்ததும் எனக்கு ஆச்சர்யமாகி விட்டது.சிவகாமிக்கு வேலை கிடைத்து விட்டதோ.  நான் போய் பார்த்தபோது அவள் தாலுகா ஆபிசில் தாசில்தார் அறைக்கு முன் அறையில் அமர்ந்து ஒரு பைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
 அங்கேயே நின்றிருந்தேன்.என்னை கவனித்து விட்ட சிவகாமி வெளியே வந்தாள்.டீயூம்,வடையூம் வாங்கித் தந்து விட்டு சினேகமாக புன்னகைத்தாள்.
"எனக்கும் கூடிய சீக்கிரம் வேலை கிடைச்சிரும். அப்ப சிம்லா இல்லைன்னா ஊட்டி போய்  பாட்டு பாடலாம்",என்றேன்.
"என்ன"
"உனக்கு வேலை கிடைச்சிருச்சி போலருக்கே. சொல்லவே இல்லையே என்கிட்ட"
"எதுக்கு சொல்லனும் மிஸ்டர் சுப்பிரமணியன்.தவிரவூம் இது டெம்ப்ரவரி போஸ்ட்.எம்ப்ளாயின்மன்ட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிச்சாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ஊஸ்ட் பண்ணிடு வாங்க.இன்னுமா காதல் பண்ணறது சாத்தியம்னு நினைச்சிட்டு இருக்கிங்க சுப்பிரமணியன்"
"எனக்கு நம்பிக்கையிருக்கு.வைத்தீஸ்வரன் கோவில்ல போய் சுவடி எல்லாம் பாத்துட்டு வந்திருக்கேன்.எனக்கு காதல் திருமணம்தானாம்"
என்றதும் என்னை அட அசடே என்பது போல பார்த்தாள்.அதன்பின் பின் எந்த பொன்மலை பஸ்ஸைப் பார்த்தாலும் அதில் சிவகாமி இருக்கிறாளா என்று பார்ப்பேன்.
 அப்புறம் ஒருநாள் அவளைத் தேடிக்கொண்டு அவளது வீட்டுக்குப் போனபோதுதான் க்ளைமாக்ஸ்.வீட்டில் பூட்டு தொங்கியது. அவளுக்கு வேலை கிடைத்து வேறு ஊருக்குப்போயிருப்பார்களோ? வீட்டை காலி செய்து கொண்டு கும்பகோணம் பக்கமாகப் போய்விட்டதாக தெருவில் சொன்னார்கள்.
 சொல்லி வைத்த மாதிரி அதன்பின் வருடக்கணக்கில் நான் சிவகாமியை பார்க்கவே இல்லை.அவளுக்கு என் முகவரி தெரியாது. இதற்கிடையே எனக்கு பாங்க் வேலை கிடைத்தது.கிடைத்தவூடனே வீட்டில் கல்யாணப் பேச்சு.காரணம் என் வயது.முப்பத்தைந்தாகி விட்டது.முன்நரை,இளந்தொப்பை,கண்களின் கீழே கருவளையம்.
 கல்யாணம் வேண்டாம்.என்றேன்.காரணம் சினிமாக்களில் எல்லாம் வருகிற மாதிரி எப்படியூம் சிவகாமியை கண்டு பிடித்து விடலாம் என்ற நப்பாசை.
 எட்டு வருடங்களாகி விட்டது.மதுரைக்கு வந்து செட்டில் ஆகி விட்டேன்.அவளைக் கண்டுபிடிப்பது எல்லாம் நடக்காது என்று வீட்டில் கல்யாணத்திற்கு பெண் பார்க்கச்சொல்லி விட்டு ஞாயிறன்னு கிளம்பினேன்.
எங்கள் பாங்க் பரிட்சைக்கு எனக்கு எக்ஸாம் டூட்டி.அந்த பள்ளிக் கூடத்திற்கு சென்றேன்.தெற்குவாசலில் இருக்கிது.உள்ளே போய் மானேஜரிடம் விவரம் கேட்டுக் கொண்டு வெளியே சன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சி.
  அவள் வந்து கொண்டிருந்தாள்.சிவகாமி. அவளுக்கும் எட்டு வயது அதிகமாகி இருக்குமல்லவா அதன் மாற்றம் தெரிந்தது உடலில். யூ வடிவ ப்ளவூஸ் எல்லாம் அவள் அணிந்திருக்கவில்லை.என்னை அவள் கவனித்திருக்கவில்லை.அப்புறம் தேர்வூ முடிந்ததும் பேப்பர்களை வாங்கிக் கொண்டே வந்தபோது என்னை ஆச்சர்யமாக விழிகளை அகட்டிப் பார்த்தாள்.
 இப்போதாவது கண்டு பிடித்தோமே நமக்கு அதிர்ஷ்டம் இருக்கறது என்று நினைத்தபோதுதான் அவளது காலில் உள்ள மெட்டியையூம்,நெற்றியில் இருந்த அழுத்தமான பெரிய சைஸ் குங்குமத்தையூம் கவனித்தேன்.
"சிவகாமி..எப்படி இருக்கே.ஆச்சர்யமா இருக்கு"
"நல்ல இருக்கேன்.அவரும் வந்திருக்கார்"
"அவர்.?யாரைச் சொல்றே.உன் அப்பாவா"
"இல்லை சுப்பிரமணியன்.எனக்கு ரெண்டு வருஷம் முன்னாலதான் கல்யாணமாச்சு.அவர் பேர் சேஷாத்ரி.அவருக்கு வேலைக்குப் போற பெண்தான் வேணுமாம்.ஏதோ ஜாதகத்துல தோஷம்னு என் ஜாதகம் பொருந்தினதால கட்டிவைச்சுட்டாங்களாம்.எனக்கு வேலை கிடைச்சாதான் நான் "அஃபிஷியலா" அவரோட பெண்டாட்டி ஆக முடியூமாம். சொல்றார்.அதுவரைக்கும் தனித்தனி படுக்கைதான். "எதுவூம்" கிடையாதாம்.வெளிய நிக்கறார் பாருங்க. அடுத்த சன்டே இன்சூரன்ஸ் எக்ஸாம்
எழுதனும்"என்று சொல்லி விட்டு  எழுந்து போனாள்.
 வெளியே மரத்தடியில் மோட்டர்பைக்கில் அதன் அளவூக்கு உயரம் போதாமல் எக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த அவள் கணவன் குள்ளமாய் சுருட்டை முடியூடன்,உப்பிய கன்னங்களுடன் எவ்வித கதாநாயகத்தனங்களும் இன்றி அமர்ந்திருந்தாள்.முதுகு தெரிய நடந்த சிவகாமியை பார்க்கப் பாவமாக இருந்தது.
 அதென்னமோ தெரியவில்லை,சிலபேருக்கு விடிவதே இல்லை.

                                                -----------------------
Previous
Next Post »