சிறுகதை: "ஒருநாள் சிரித்தேன்.ஒருநாள் வெறுத்தேன்..." --விஜயநிலா






 ஒரு கிழிந்த டைரியின் முதல் பக்கம்:
 'நான் நானாகவூம்
 நீ நீயாகவூம் இருப்பதை மதித்து
 நான் நீயாகவூம்
 நீ நானாகவூம் இருந்தால்
 சந்தோஷம் ஓடி வரும்'

      ஆனந்தன் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.அழ வேண்டும் போல இருந்தது.கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்து விடும் போல தோன்றியது.
கோவிந்தாபுரம்  சென்று விட்டு  திருவிசைநல்லுருக்கு வந்தவன் பிருந்தாவனத்தின் எதிரேஅங்கேயே உட்கார்ந்துவிட்டான்.உதடுகள் 'ராமாராமா'என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.எத்தனை
நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான் என்று தெரியவில்லை.அவனுக்காக யூனிட்காரர்கள் வெளியே காத்திருந்தார்கள். ஐ லெவல் மேட்சிங்காக காமராவை வைத்து விட்டு டேப்லெட்டில் ஸ்டோரிபோர்டை சரிபார்த்துக் கொண்டிருந்தான் காமராமேன்.
        பட்டீஸ்வரத்தில் தான் முதல் ஷாட்டை வைக்க வேண்டும் என்று தீர்மாணித்திருந்தான்.காரணம் யமுனா.அவனது நட்பை யமுனா அங்கேதான் முறித்துப் போட்டாள்.
   அந்த நாள் நன்றாக அவனுக்கு நினைவிருக்கிறது.ஆனந்தன் இப்போது போலசினிமாடைரக்டராகியிருக்கவில்லை.சினிமா பற்றி அவன் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.கொஞ்சம் கவிதைகளும்,கதைகளுமாக நோட்டு புத்தகத்தில் எழுதியிருப்பான்.
விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்.கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டியவன்.பட்டீஸ்வரம் துர்க்கையை பார்க்க வரும்போதுதான் யமுனாவைசந்திக்க நேர்ந்தது.
   யமுனா மிக அழகாக இருப்பாள்.பூ மலர்வது போல புன்னகைப்பாள்.மெல்லிய கொடி போல மாநிறத்தில் இருப்பாள்.கல்லுரியில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தாள்.கோவிலில் நடந்த பட்டி மன்றத்தில்தான் அவளை முதன் முதல் சந்தித்தான்.
அந்த சந்திப்பு பின்னர் சந்திக்கிற தருணங்களில் புன்னகையாக முளை விட்டு,மெல்ல பரிட்சயம் நட்பென்று கிளை விட்டது.அந்த காலங்களில் ஆனந்தன் எவ்வித முனைப்பும் இன்றி கால்பந்தாட்டமும்,கவிதை எழுதுதலுமாக இருந்தான்.யமுனா அவனிடம் ஒரு நாள் கேட்டாள்.
"நீங்க ஏன் ஒரு வேலைக்கு முயற்சி செய்யக் கூடாது ஆனந்தன்"
"வேலையா.என்ன வேலைக்குப் போறது.நான் படிச்சது லிட்டரேச்சர்.அதைக் கூட ஒழுங்கா படிக்காம கேம்ஸ் டோர்னமன்ட்டுன்னு இருந்திட்டேன்"
"ஏன் சிவில் சர்வீஸூக்கு தயார் செய்யலாமே.ஆங்கிலம் படிச்சிருக்கறதால சிவில் சர்வீஸ் பரிட்சையில பாஸாகறது சுலபமா இருக்குமே"
"இல்லை.எனக்கு அதில ஆர்வம் இல்லை"
 அதன்பின் அவள் பேச மாட்டாள்.எதற்கும் மௌனமே அவளது பதிலாக இருக்கும்.ஆனந்தன் படபடப்போடு பேசுவான்.பதிலே பேசாமல் யமுனா சாதிப்பாள்.
"என்ன கோவமா.சரி நான் நாளையில இருந்து வேலைக்கு முயற்சி பண்றேன்.
போதுமா யமுனா"
"........."
"அதான் சொல்லிட்டேனே.நாளையில இருந்து நான் சின்சியரா முயற்சி பண்றேன்"
"ஏன்.இன்னிக்கு நாள் நல்லா இல்லையா"
"அப்பாடா.என் தேவதை பேசிவிட்டாள்.தபாரு உடனடியா ஒரு கவிதை,"என்று நோட்டுப் புத்தகம் எடுத்து எழுதினான்.
'
|மூங்கிலோடு உரசி
கவிதை எழுதும் தென்றலே
என்னவளோடு உரசாதே
அவளிடமிருந்து புறப்படும்
இசை கேட்டு மயங்கி
இந்த பூமியே கூட நின்று விடலாம்'
"எப்படி இருக்கு யமுனா கவிதை"
"என்னை மன்னிச்சிடுங்க ஆனந்தன்.எனக்கு கவிதை படிக்கற பழக்கம் குறைஞ்சிடுச்சு."
"ஏன்"
"கவிதை பிடிக்கலை"
"கவிதை பிடிக்கலையா இல்லை என்னைப் பிடிக்கலையா"
"கவிதைதான் பிடிக்கலை"
"ஏன்"
"கவிதையூம் சாராயமும் என்னைப் பொறுத்தவரை ஒண்ணுதான்.ரெண்டுமே முளையை மழுங்கடிக்குது.முன்னேற விரும்பாம இப்படி கவிதையை பொதி சுமந்தா நாம ஊர்
போய் சேரவே முடியாது"
"யமுனா உனக்கு என்ன ஆச்சு"
"ஒரு தோழியா உன் எதிர்காலம் பத்தி கவலையா இருக்கு ஆனந்தன்"
"நான் அப்படி என்ன தப்பு பண்றேன்.கால்பந்து விளையாடறேன்.கவிதை எழுதறேன்.
இப்ப யமுனா தேவியார் கட்டளை இட்டுட்டதால ஐஏஎஸ் தேர்வூக்கும் தயார்பண்ணிக்கப் போறேன்"
"என் எதிர்வீட்டுல இருந்த ரமாவூம் அவ பின்னாடி சுத்திட்டு திரிஞ்ச பையனும் இப்படித்தான் கவிதை,நட்பு,இலக்கியம்னு ஊர் சுத்தினாங்க.சரியான வேலையூம்
கிடைக்காம,கூட இருந்த நண்பர்கள் உசுப்பிவிட்டதால தங்களோட பழக்கத்தை
காதல்னு நினைச்சுட்டு இன்னும் க்யூட்டா கனவூகளோட சுத்தித் திரிஞ்சுகடைசியில வீடு வரைக்கும் விஷயம் போனதும் ஓடிப்போய் பதிவூக் கல்யாணம்பண்ணிக்கிட்டு ஒரு வீட்டைப் பிடிச்சுப் போய் உட்கார்ந்தா அடுத்த மாசத்துல
இருந்து சோத்துக்கு என்ன வழின்னு தெரியலை.ரெண்டு பேரும் வேலையூம் கிடைக்காமல உறவூக்காரங்களோட வழிகாட்டுதலும் இல்லாம விஷத்தைத்தின்னுட்டு அந்தப் பையன் அதில போய்ட்டான்.அந்தப் பொண்ணு அரையூம் குறையூமா பிழைச்சு இப்ப கூனிக் குறுகி உட்கார்ந்திருக்கா. எனக்கு கவிதை பிடிக்கலை ஆனந்தன்.கவிதை ஒரு மெல்லக் கொல்லும்
விஷம்.அதுதான் என்னோட தீர்மாணமான முடிவூ"என்று சொல்லி விட்டு அவனது பதிலை எதிர்பாராமல் போய் விட்டாள்.
   காய்ந்த இலைகள் மரத்திலிருந்து விழுந்தன.காற்றில் அவனது நோட்டுப் புத்தகத்தின் தாள்கள் விரிந்தன.
'நாலைந்து
பாலீதீன் பேப்பரும்
சணலும் காகிதங்களும்
பாதி கடித்த பன்னும்
சுற்றி எறிந்த கூந்தல்முடியூம்
சாக்கடையில் மிதந்தபோது
மிதந்தன
கூடவே கொஞ்சம்
யாரும் படிக்காத கவிதைகளும்'
  அதன்பின் அவளிடம் கவிதை பற்றியூம்,இலக்கியம் பற்றியூம் பேச முடியாவிட்டாலும் பொதுவான விஷயங்கள் பேச முடிந்தது.யமுனா அவளது எதிர்வீட்டுப் பெண் ரமாவூக்கு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தாள்.ஒரு தரம் கோவிந்தாபுரத்தில்
வைத்து ரமாவைப் பார்த்தபோது அதிர்ந்து போய் விட்டான் ஆனந்தன்.இத்தனை துக்கம் தாங்கிய முகத்தோடு ஒரு பெண்ணைப் பார்க்க முடியூமா?அவள் முகத்தில்
இத்தனைவேதனை,அவநம்பிக்கை,சோகம் எல்லாம் அப்பிக் கிடந்தது.அவளை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு கண்கள் மூடியவாறு யமுனா ராமநாமம்
சொல்லிக்கொண்டிருந்தாள்.அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தன்அவள் திரும்பிப் பார்க்காததால் வெளியே வந்து விட்டான்.ரமாவின் காதல்தோல்வியால்
தான் அவள் பயப்படுகிறாள் என்று நினைத்தான்.இன்னொரு நாள் பட்டீஸ்வரத்தில் கேட்டான்.
"யமுனா.நான் ஒண்ணும் ஆகாசத்துல கோட்டை கட்டிட்டு இருக்கலை.என் எல்லை எனக்குத் தெரியூம்.நான் கவிதை எழுதறதெல்லாம் உன்னை பார்க்கற நேரங்களில்தான்.என் வானம் விடிவதே உன் குரல் கேட்டுத்தான்.என் கண்கள் திறப்பதே உன் முகத்தைப் பார்க்கத்தான்",என்றான்.
"நீங்க ஏதாவது கட்சியில  மேடையில பேசலாம் ஆனந்தன்.ஒரு பொண்ணை இப்படி எல்லாம் கவர முடியாது.இப்படி அசட்டுத்தனமா பேசாம ஒழுங்கா ஒரு
வேலைக்கு நீங்க முயற்சி பண்ணலாம்",என்றாள் யமுனா உறுத்தலான குரலில்.
"யமுனா.நான் கொஞ்சம் உன்கிட்ட பேசனும்"
"இப்ப பேசிட்டுதானே இருக்கம்"
"நான் நினைச்சதை உன்கிட்ட மட்டுமில்ல இங்க யார்கிட்டயூம் பேசக் கூட முடியலை.வில்லியம்கோல்டுமேனோட டெம்பிள் ஆஃப் காட் பத்தி பேசனும்னு பார்க்கறேன்.பேசவே முடியலை.ரொம்ப ஃப்ரஸ்ட்ரேஷனா இருக்கு யமுனா"என்றான்.
"சரி பேசுங்க.கோல்ட்மேன் ஸ்க்ரீன்ப்ளே பத்திதானே அடிக்கடி சொல்வார்.அதெல்லாம் சரிதான்.கனவூ சோறு போடாது ஆனந்தன்.நீங்க பேச வந்ததை பேசுங்க.ம்.."
"இல்லை.இன்னும் கொஞ்சம் புரியறாப்ல பேசனும்.என் மனசு திறந்து பேசனும்."
"சரி"
"உற்சாகம் இல்லாம சொல்றியே யமுனா"
"சொல்லுங்க ஆனந்தன்"
"நான் உன்னோட நட்பை ரொம்ப மதிக்கறேன் யமுனா.உன்னோட சொற்கள் ஒவ்வொன்னும் உளி போல என் மனசை செதுக்கிடுது."
"பார்த்திங்களா.மறுபடியூம் கவிதை வார்த்தைகளில பேசறிங்க.யதார்த்தமா பேசறதானா சொல்லுங்க.இல்லைன்னா நான் போறேன்.ரமாவை இன்னிக்கு டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போகனும்.அவளுக்கு டிப்ரஷன் ஜாஸ்தியாகிடுச்சு."
"சரி.நான் நேரடியாகவே சொல்றேன்.தினமும் உன்னைப் பார்க்காம என்னால இருக்க  முடியலை யமுனா.உன்கிட்ட நான் எழுதின கவிதைகளை காண்பிக்கனும்னு ஒரு வெறியே இருக்கு என்கிட்ட."
"சரி"
"உன்னை எட்ட இருந்து நிலவைப் பார்க்கற மாதிரி பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு"
"சரி"
"நான் உன்னை என் மனசில ரொம்ப உயர்ந்த இடத்துல வைச்சிருக்கேன் யமுனா"
"சரி"
"நான் உன்னை பார்க்காத போதெல்லாம் மரித்துப் போகிறேன்னு சொன்னா அதை நீ பொய் கலந்த கவிதை வார்த்தைகள்னு சொல்லுவே.ஆனா அதுதான் உண்மை"
பதில் சொல்லாமல் மார்பில் கைகளைக் கட்டிக் கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் யமுனா.மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தான் ஆனந்தன்.
"ஏதாவது பேசு யமுனா",என்றான்.
"ஆனந்தன்.என்னால பேச முடியலை.இத்தனை நாள் ஒரு அசட்டுப் பையன்கிட்டயா பேசிட்டு இருந்தேன்னு நினைக்கும்போது வெறுப்பா இருக்கு"
"என்ன சொல்ற யமுனா"
"பின்ன என்ன ஆனந்தன்.இந்த சூரியன்,இந்த கோவில்,இந்த மரங்கள் எல்லாமே நமக்கு முன்னும் இருந்துட்டு இருந்தது.நாம செத்த பிறகும் இருக்கப் போவூது.ஆனா நாம இருக்கற கொஞ்சநாள்லயே காதல்னும்,கவிதைன்னும் ஒரு முகமூடியைப்
போட்டுக்கிட்டு ஆட ஆரம்பிச்சிடறம்.அதனால இருக்கற கொஞ்ச காலத்துக்கான வாழ்க்கையூம் தறிகெட்டு தாறுமாறாப் போயிடுது.அதனால இத்தனை அசட்டுக் கற்பனையோட உள்ள உன்கிட்ட பழக நான் விரும்பலை.அதனால நாம இனிமே
பார்க்காம,பழகாம இருக்கறதுதான் நல்லது",என்றாள்.
   அதைக் கேட்டதும் அவனுக்குள்ளிருந்த 'நான்'எகிறிக் குதித்தது.அவள் எப்படி அப்படி சொல்லப் போகலாம் என்று முறுக்கிக் கொண்டு நின்றான்.கண்கள் சிவக்க
அவளைப் பார்த்தான்.சொன்னான்.
"யமுனா.நான் என்னமோ உன் பின்னாடி சுத்திட்டு திரிஞ்சிட்டு இருக்கறதா நினைக்காத.நான் சொடுக்குப் போட்டு கூப்பிட்டா ஆயிரம் பொண்ணுங்க என் பின்னாடி
வருவாங்க தெரியூமா?"
"ஆகா.வரட்டுமே.என்னை ஆளைவிடுங்க.குட்பை",என்று விலகி நடந்து விட்டாள்.அதன்பின் அவளை வழியில் பார்க்க முடியவில்லை.அவள் வேண்டுமென்றே
ஓடி ஒளிகிறாளா இல்லை காலம் கண்ணாமூச்சி ஆடுகிறதா என்று தெரியவில்லை.
ஆனந்தன் டிகிரிப் படிப்பு முடிக்கவில்லை.நான்கு பேப்பரில் போய் விட்டது.ஐஏஎஸ் எழுதவூம் முடியவில்லை.வேலைக்கும் போக முடியாமல்,கால்பந்து ஆட்டத்திலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிப் போனான்.கால்பந்து ஆட்டத்தில் முன்னுக்கு வர திறமையை விடவூம்,ஆள் பலம்,சிபாரிசு,பணம் தேவைப்பட்டது.எதிலும் அக்கறை
இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த ஆனந்தன் ஒருநாள் சென்னைக்கு பஸ் ஏறிப்போனான்.
   போன இடத்தில் வாழ்க்கை இன்னும் கேவலமாக இருந்தது.எட்டுக்கு எட்டு அறையில் பதினைந்து பேர்  இருந்து கொண்டு வேலைக்கு அலைய வேண்டியஅவலம்.ரோட்டோர பரோட்டா கடையில் பிளேட் கழுவிப் பார்த்தான்.அழுக்காக
டை கட்டிக் கொண்டு,எவர்சில்வர் பிளாஸ்க்கும்,பொம்மைகளுமா சிக்னலுக்குசிக்னல் விற்றுப் பார்த்தான்.கவிதை எழுதத் தெரிந்ததால் சினிமாவூக்கு பாட்டு எழுதப் போனால் வசதியாக வாழலாம்.டிவியில் பட்டிமன்றங்களில் பேசலாம். இலக்கியம் பற்றி உறுமலாம் என்று போய் முட்டிப் பார்த்தான்.அவனைப் போலவேஅங்கும் ஆயிரம் பேர் நோட்டுப் புத்தகத்தோடும்,யாருக்கு வேண்டுமானாலும்
கை,கால் பிடித்து விட தயாராகவூம் நின்றார்கள்.கடைசியில் இரண்டொருபடங்களில் பின் வரிசையில் குரூப் டான்ஸ் ஆடினான்.தசைப்பிடிப்பில் கால்கள் பிடித்துக் கொள்ள அதே வலியோடு ஆடினான்.கூட ஆடிய பெண் அவனை கவனித்து விட்டுக் கேட்டாள்.
"உன்னைப் பாத்தா ஆடற ஆளா தெரியலையே.கண்கள்ல ஒரு மிதப்பும்,கனவூம் தெரியூதே.டைரக்ஷன் எதுனாச்சும் செய்யலாமே"
 சட்டென்று ஆடுவது நிறுத்தி அவளைப் பார்த்தான்.ஒரு கணம் யமுனாவின் முகம் நினைவில் வந்து போனது.அடுத்தடுத்து வந்த நாட்களில் அவன் தயாரிப்பாளர்களின்
அலுவலங்களில் தவம் கிடக்கலானான்.யாரும் அவனை சீண்டவில்லை.ஆடிக்கொண்டிருந்தாலாவது வயிற்றுக்கு சோறு கிடைத்திருக்கும்.இப்போது
ஆடுவதற்கும் மனமில்லாமல் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்போது தவறான முடிவூஎடுத்து விட்டோமோ ஒழுங்காகப் படித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றியது.
பட்டீஸ்வரமும் கோவிலும்,யமுனாவிடம் பேசிக் கொண்டிருந்த காலமும் மனதில் வந்துபோயின.
   நான்கு வருடங்கள் இப்படியே போனதில் யாரை அணுக வேண்டும்.யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று ஆனந்தன் கற்றுக் கொண்டான்.இரண்டு படங்கள் உதவியாளனாகப் பணி புரிந்து வசைச் சொற்களை காதில் வாங்கிக் கொண்டான்.அவனது கதை இன்னொரு அலட்டல் இளைஞனால் அவனது பெயரில் படமாக்கப் பட்டு சில்வா; ஜூப்ளி கொண்டாடியதை எவ்வித வருத்தமும்,கழிவிரக்கமும்
இன்றி மௌனமாக ஜீரணித்துக் கொள்ள முடிந்தது.இன்னொரு நாள் ஒரு கதாநாயகநடிகனின் பார்வை பட்டு அவனுக்காக போய் சொன்ன கதை பிடித்துப் போய் படம் ஆரம்பித்தாயிற்று.அவனை ஏளனமாகப் பார்த்து வெளியே துரத்திய அதே தயாரிப்பாளர் மாலை போட்டு மரியாதையாக அட்வான்ஸ் கொடுத்தார்.முதல் ஷாட்டை
பட்டீஸ்வரத்தில்தான் வைக்க வேண்டும் என்று புறப்பட்டு கிளம்பி வந்து விட்டான்.
எல்லாரும் காத்துக் கொண்டிருக்க திருவிசைநல்லுரில் போதேந்திரசுவாமிகளின் பிருந்தாவனம் எதிரே அமர்ந்து ராமராம என்று சொல்லிக் கொண்டிருந்தான் ஆனந்தன்.
   வெளியே வந்தான்.பட்டீஸ்வரம் சென்று முதல் ஷாட்டுக்கு முன்னதாக தேங்காய்உடைத்து,பிரமிப்போடு சற்றே கர்வமாகவூம் பார்த்தான்.எங்காவது யமுனா தென்படுவாளா என்று தேடினான்.யமுனா இல்லை.
   அன்றய தினம் முழுக்க சந்தோஷமாக இருந்தது.யமுனா மட்டும் எங்கும் தென்படவில்லை.இந்நேரம் எவனாவது அரசாங்க வேலை பார்ப்பவனை மணந்து கொண்டு குழந்தைபெற்றுக்கொண்டு,வீடு,
சமையல்,குழந்தைகள்,கணவன் என்றுசெக்கு மாடாகிப் போயிருப்பாள் என்று ஆனந்தன் நினைத்தவாறு படுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் இன்னொரு இடம்.
   நாடாக்கட்டில்.யமுனாவின் கிழிந்த டைரி மின்விசிறியின் காற்று பட்டு பக்கங்கள் படபடத்தன.
  '|ஆனந்தன்.
  கனவூகளாலேயே ஒரு மனிதனை
  நெய்ய முடிந்திருக்கிறதே.
  நீ நிசமா இல்லை கனவா?
  இல்லை நீ ஒரு முரட்டுக் குழந்தை.'
  உன்னை விரட்டினால்தான் உன் திறமை உனக்குப் புரிபடும்.அதனால்தான் உன்னை மனசொடிந்து போகுமாறு விரட்டினேன்.நல்லவேளை நீ ஐஏஎஸ் எழுதி சாதாரணமானவனாகப் போய் விடவில்லை.காலம் உன்னை விரட்டப் போவதில்லை.
நீதான் காலத்தை உன் கைப்பிடிக்குள் அடக்கி விட்டாயே.உன்னை இந்த தோழி எட்ட நின்று நிலவைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பாள்.
  கண்கள் மூடிப் படுத்திருந்த ஆனந்தனுக்குள் யமுனா மெல்லப் புன்னகைத்தாள்.

                                                                   -------------------
Previous
Next Post »

1 comments:

Click here for comments
November 11, 2015 at 8:48 AM ×

//மிதந்தன
கூடவே கொஞ்சம்
யாரும் படிக்காத கவிதைகளும்// Super sir

Congrats bro அரிஷ்டநேமி you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar