தண்ணீர்...தண்ணீர்...



  சென்னை தத்...தளிக்கிறது.
சென்னை மட்டுமல்ல சாதா ஊர்களில் எல்லாம் கூட பத்து நிமிடம் பெய்யூம் சோதா மழைக்கே சாலைகள் காணாமல் போய் விடுகின்றன.எங்கே எந்த இடத்தில் கரன்ட்டு கம்பிகள் மறைந்து கிடக்குமோ என்ற பயம் ஏற்படுவதை மறைத்துக் கொண்டுதான் நடக்க வேண்டியிருக்கிறது. 
 1977 கால கட்டத்தில் திருச்சியில் இதே போல் மழை தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தது.செயின்ட்ஜோசப் கல்லுரியில் எல்லாம் HFL (அதிகபட்ச வெள்ள அளவூ) என்று சுவற்றில் எழுதி வைத்திருப்பார்கள்.அந்த மழை வெள்ளத்தில் பாதிரியார் வளர்த்து வந்த மலைப்பாம்பு இறந்து விட்டதாகக் கூறுவார்கள்.அப்போது தினம் தினம் பள்ளிக்கூடங்களுக்கு லீவூ விட்டு விடுவார்கள்.லீவூ என்றால் ஒட்டுமொத்தமாக ஒரு வாரம் பத்து நாட்கள் என்று விடமாட்டார்கள்.காலையில் யூனிஃபார்ம் போட்டு குடையை எடுத்துக் கொண்டு பஸ் வருவதற்கு சற்று முன்னதாக ஆல்இந்தியா ரேடியோவில் சேவைச் செய்திகள் என்று வாசிப்பார்கள்.அதில் பள்ளிக்கு விடுமுறை என்று வந்து விட்டால் கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்த மாதிரி சந்தோஷம் கொப்புளிக்கும்.அதனால் தவணைமுறையில் தினம் தினம் விடுமுறை விடுவதை அனுபவித்து மகிழ்வோம்.
  அப்புறம் இதே காலகட்டத்தில் இடம் பெயர்ந்து செங்குளம் காலனி என்று கல்லுக்குழி (என்ன ஒரு பெயர்) அருகே இருக்கிறது.அங்கே சென்று ஹவூசிங்போர்டு பகுதியில் வசித்து வந்தோம்.கல்லுக்குழியில் அந்த காலத்தில் ரவூடிகள் எல்லாம் இருப்பார்கள்.கல்லுக்குழி கந்தன் அவர்களின் ஒரு மாஸ் ஹீரோ.இந்த க.க.வூக்கும் தாராநல்லுரர் கண்ணனுக்கும் அடிக்கடி தொழில்போட்டி இருக்கும்.ஒரு தரம் தாராநல்லுரர் கண்ணனை பஸ்ஸ்டான்ட்டில் அவரது கண்ணன் உணவூ விடுதியிலேயே வைத்து வெட்டி விட்டார்கள்.கல்லுக்குழி கந்தன் கேரக்டரில் கரண் போன்ற மீடியாக்கர் ஹீரோக்கள் படம் நடிக்கலாம்.அத்தனை 'கதைகள்' அந்த காலத்தில் அங்கே உலவியதுண்டு.
 அப்போது சர்க்யூட் ஹவூஸ் வழியாக திமுதிமுவென்று ஆட்கள் சைக்கிளில் சைரன் அடித்துக் கொண்டு ஓடினார்கள்.
 காவிரியில் வெள்ளமாம்.வைகையில் வெள்ளமாம்.வைகையில் எந்த காலத்தில் தண்ணீர் இருந்திருக்கிறது.லெமூரியக்கண்டம் காலத்திலேயே வைகையில் மணல்தான் இருக்கிறது என்று நிகண்டுவில் எழுதியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.
 ஆட்கள் ஓட ஓட இங்கே உள்ள சனங்கள் மிரண்டு விட்டார்கள்.ஹவூசிங் போர்டு போன்ற குடியிருப்புகளில் வெள்ளை நிற ஸ்லாக் சட்டையூம் தைத்துப் போட்ட கருப்பு பான்ட்டும் போட்ட அரசாங்க அலுவலர்கள்தான் இருப்பார்கள்.அப்பாவி அரசு இயந்திரங்கள்.சாதாரண சப்தத்திற்கே அரண்டு போகும் சாமானியர்கள்.
 போகிற போக்கில் சைக்கிளில் ஓடும் ஆட்கள் ஈரோடுல பவானி கூட பியச்சிக்கிச்சு.பவானி வெள்ளமா பெருக்கெடுத்து திருச்சியில பல இடங்களை முழுங்கிட்டா.உறையூர்ல பாதி இடம் காணாமப் போச்சாம்.தில்லைநகர் போயிருச்சாம்.மலைக்கோட்டையில பாதி உசரத்துல வெள்ளமாம்.உச்சிப்பிள்ளையார் வாக்அவூட் பண்ணிரலாமான்னு யோசிச்சிட்டிருக்காராம்.
  நாங்கள் ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்தோம்.அப்போதெல்லாம் நான் கதை எழுதுவதில் வயதுக்கு வரவில்லை.அதனால் ஒரு நோட்டுப்புத்தகத்தில் நசநசவென்று கவித எழுத வைத்திருப்பேன்.அதனால் முதலில் கவித நோட்டை காப்பாற்ற வேண்டுமென்று வைராக்கியம் ஏற்பட்டது.முக்கியமான சாமான்களை எடுத்து பரணில் போட்டு விட்டு அருகே இருந்த எங்களது அத்தை வீட்டுக்கு சென்றிருந்தோம்.அத்தையின் ஹஸ்பன்ட் ஒரு முசுடு ஆசாமி.பத்து ஜென்மங்களாக அந்த ஆளுக்கும் எனக்கும் பகை.ஆகாது.முறைத்து விட்டு லேசாக கதவைத் திறந்தார்.
 நகருய்யா.நாடே முழுகிக்கிட்டிருக்கு என்று உள்ளே போய் வெங்காய பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு வெள்ளம் செங்குளம் காலனியை விழுங்குவதைக் காண காத்திருந்தோம்.அவர்கள் இரண்டாவது மாடியில் இருப்பதால் அந்த அளவிற்கெல்லாம் வெள்ளம் வந்து விடாது என்று முதல் மாடியிலிருந்து நாங்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்து பொறுமையிழந்து இப்போது போல டிவியில் லைஃவ் நியூஸ் எல்லாம் கிடையாது.சாயந்தரம் அருங்குளவன் கடைக்கருகே பாய்க்கடையில் மாலைமுரசு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
 சாயந்தரம்தான் தெரிந்தது.
 அப்படி ஒன்றும் வெள்ளம் வரவில்லையாம்.காவிரிக்கரையில், சிந்தாமணி, சத்திரம் பஸ்ஸ்டான்ட் பக்கமெல்லாம் வெறும் முழங்கால் வரைதான் தண்ணீராம்.
 பெருமூச்சு விட்டவாறே அங்கிருந்து கிளம்பினோம்.
 வீட்டுக்கு வந்து சன்னலில் உட்கார்ந்திருந்தோம்.ஆல்இந்தியா ரேடியோவில் சாரதாஸ் விளம்பரம் தவிர பெரிதாக ஒன்றும் வரவில்லை.அப்போது திமுதிமுவென்று சைக்கிளில் ஆட்கள் ஓட ஆரம்பித்தார்கள்.
 இந்த முறை வெள்ளமெல்லாம் இல்லை.
 காவிரியில இருந்து தண்ணில முதலைங்க ஊருக்குள்ள வந்திருச்சாம்.நாலைந்து முதலைங்க தென்னுரர் வழியா பாலக்கரையில திரும்பி கன்டோன்ட்மன்ட் வரை வந்து இங்க்லீஷ்வேர்ஹவூஸ்ல நின்னுட்டு இருக்கும்போது உய்யகொண்டான் வாய்க்கால்ல இருந்து இன்னொரு செட் முதலைங்க கோர்ட் வழியா வந்து இந்த முதலைங்க கூட சண்டை போட ஆரம்பிச்சிருச்சாம்.நாலைஞ்சு ஆட்களை முழுங்கிடுச்சாம்.ஒத்தக்கடை எல்லாம் இரத்தக்கடை ஆயிருச்சாம்.
 முதலைக்கு பயந்து மறுபடி அத்தை வீட்டுக்கு போக வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.காரணம் அவர்கள் வீட்டிலேயே ஒரு முதலை இருக்கிறது.
 சென்னையில் மழை.வெள்ளம் என்று ஆள் ஆளுக்கு பதறுவதையூம் பேஸ்புக் டிவிட்டரில் ஸ்டேட்மன்ட் போடுவதையூம் பார்த்தால் சிரிப்பு வருகிறது.
 இந்த மழைக்கே இப்படியா.நாங்கெல்லாம் அப்பவே அப்படி.
 மழைன்னா அது திருச்சியில பெய்யனும்.

Previous
Next Post »