கார்...



இன்று காலையில் கண்விழிக்கும் தருணத்தில் கனவில் ஒரு கார் வந்தது.சாக்லேட் நிறத்தில்.அந்த காரை ஓட்டியவர் முகம் கூட இப்போது வரை சரியாக நினைவில் இருக்கிறது.சாக்லேட் நிறத்தில் முன்புற அட்டகாசமாக க்ரில்லுடன் சாலையை ஆக்கரமித்தபடி வந்து நின்ற அந்த கார் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார்.
 வாங்க முடியூமா இந்த காரை?அதுவூம் இப்போதைய நிலையில் என்ற சந்தேகம் லேசாக எட்டிப் பார்க்க விழித்துக் கொண்டேன்.
 சார்லஸ் ஸ்டூவர்ட் ரோல்ஸ் மற்றும் ஃப்ரடரிக் ஹென்றி ராய்ஸ் என்ற இரண்டு ஆசாமிகள் சேர்ந்து 1906தான் இந்த கார் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலையைக் கேட்டால் நம்மால் வாங்க முடியாதென்று தோன்றும்.ஆனால் இரண்டு ஆசாமிகள் சேர்ந்து பிரிட்டனில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னால் ஜஸ்ட் லைக் தட் ஆக ஒரு கம்பெனியை ஆரம்பித்திருக்கிறபோது அதே ஜ.லை.த. ஆக இந்த காரை நம்மால் வாங்க முடியாதா என்று எனது அருகே டேட்டாகார்டின் அருகே சின்னதாக உட்கார்ந்திருக்கிற விதி கேட்கிறது.
 அப்போதே 30 எச்பி திறனுடன் 6 சிலிண்டர்கள் கொண்ட காரை ரோ.ரா. தயாரித்து வெளிட்டிருந்தார்கள்.கொஞ்சம் ஜெட்தனமான சீற்றல் கொண்ட இன்ஜின்.1920களில் எனது தாத்தாவின் அப்பா திண்டுக்கல்லில் ரோ.ரா.வின் சில்வர்கோஸ்ட் ஓப்பன் டூரர் என்ற நீண்டகாரை வைத்திருந்தார்.அப்போது திண்டுக்கல்லில் அவர்கள் வீட்டில் சமையலறை மட்டும் இருக்காது.அதற்கு பதிலாக வீட்டின் எதிரே ஒரு வீட்டை வாங்கி அந்த வீட்டையே சமையலறையாக மாற்றி இருப்பார்கள்.அந்த வீட்டை 'சோறாக்குற வீடு' என்பார்கள்.] ஸ்பென்சர் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களுக்கு என் முன்னோர்கள் அரசாங்க சிவில் கான்ட்ராக்டர்களாக இருந்தார்கள்.ஸ்பென்சர் கம்பெனியின் தலைமை அலுவலகம் திண்டுக்கல்லில்தான் அப்போது இருந்தது.இப்போதும் திண்டுக்கல்லில் பஸ்ஸ்டாண்டை ஒட்டி ஒதுங்கிய பகுதிக்கு ஸ்பென்சர் காம்பவூண்டு என்ற பெயர் இருக்கிறது.என் அப்பா அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக டைனிங் டேபிளுக்கு பதிலாக ஒரு மோரிஸ் மைனர் காரையே வைத்திருப்பார்கள்.சாப்பாடு என்றால் சும்மா இல்லை.திண்டுக்கல்லில் மட்டன் மார்க்கெட்டில் 'சேர்" கணக்காக வாங்கி வருவார்கள்.கிலோ எல்லாம் அப்போது புழக்கத்தில் இல்லை.இரண்டரை கிலோ ஒரு சேர் என்று நினைக்கிறேன்.
 ஓவர் டு ரோ.ரா.
 அவர் சில்வர்கோஸ்ட் வைத்திருந்தாலும் ரோ.ராவின் விண்டேஜ் மாடல்களில் எனக்குப் பிடித்தது சில்வர் ரெய்ஸ்ட் கேப்ரியோலெட் என்ற மழுப்பலான மூடுமந்திரம் போன்ற சேஸிஸூடன் இருக்கிற கார்தான்.ஆரம்ப காலத்தில் ரோ.ரா.காரர்கள் சேஸிஸ் தயாரிக்கவில்லை.இன்ஜினில்தான் அவர்கள் கில்லாடிகள்.
 1938ல் ஒரு ஏப்ரல் மாதத்தில் எனது தாத்தாவின் அப்பா ஒரு புதிய காரில் ஜாய் ரவூண்டிற்காக கிளம்பினார்.அப்போதெல்லாம் கார்கள் இறக்குமதியாகி கப்பலில் வரும்.திண்டுக்கல் கிழக்குரத வீதியிலிருந்து ஒரு ஜாய் ரவூண்ட் செல்லும் போது காட்டாஸ்பத்திரி இருக்கிற ரவூண்டானாவில் திரும்பும்போது கந்தசாமி படத்தில் வரும் ஆசிஷ்வித்யார்த்தி போல வாய் கோணிக் கொண்டது.கால் ஒரு பக்கம் இழுத்துக் கொள்ள அப்படியே பொத்தினாற்போல கொண்டு வந்து புதுக்காரை வீட்டில் நிறுத்தி விட்டார்கள்.அவருக்கு வந்தது மாஸிவ் ஸ்ரோக்.திண்டுக்கல் தமிழில் அதை பச்சவாதம் என்பார்கள்.சொன்னேனல்லவா.சேர் கணக்கில் திண்டுக்கல்லில் மட்டன் தின்பார்கள் என்று.அதன் எதிர் விளைவூ.வெறும் மட்டன் உண்டதால் ஸ்ரோக் வரவில்லை.அத்துடன் கவளம் கவளமாக சோற்றை உருட்டித் தின்றதால் வந்த விளைவூ.அவர்தான் அந்தக்காலத்தில் திண்டுகல்லில் இருந்து பழநிக்கு முதன் முதலாக தார்ரோடு போட்டவர்.அந்தக்கால பிரபல கான்ட்ராக்டர்.திண்டுக்கல் செயின்ட்மேரிஸ் ஸ்கூலில் எனது தாத்தா அன்பளிப்பாகக் கொடுத்திருந்து வெள்ளி ரோலிங் ஷீல்டு இன்னமும் இருக்கிறது என்பார்கள்.அதன் புகைப்படம் மட்டும் என்னிடம் இருக்கிறது.
  எனது தாத்தாவின் சகோதரியின் பெயர் பாப்புக்கண்ணு என்பார்கள்.பதினெட்டு வயதில் இதயபலஹீனம் காரணமாக இறந்து போன இவர் ஓவியத்தில் விற்பன்னர்.இவரது சவ ஊர்வலத்திற்கு இப்போது போல ஆம்புலன்சை எல்லாம் அழைக்கவில்லை.ஒரு புத்தம் புதிய இம்போர்டட் செவர்லே காரில் உடலை வைத்து அவர் வரைந்த ஓவியம் அவர் வடிவமைத்த பொம்மைகளை எல்லாம் ஊர்வமாக எடுத்துச் சென்று தற்போது அங்குவிலாஸ் இருக்கும் இடத்தில் புதைத்து விட்டார்கள்.இந்த பெண் மிக ராசியானவர் என்று சொல்வார்கள்.அந்த பெரிய வளாகத்தை வாங்கிய அங்குவிலாஸ்காரர்களும் அவரது சமாதியை இடிக்காமல் இன்னமும் திண்டுக்கல்லில் வைத்திருக்கிறார்கள்.அங்கு நகரம் என்ற அந்த காம்பவூண்டிற்குள் சென்றால் பார்க்கலாம்.கார்கள் என்பது அந்த அளவிற்கு எங்களது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருந்தது.ஆக்டர் 'விக்டர்' புகழ் அருண்விஜய்யின் இன்லாஸ் எல்லாம் கூட ஒரு வகையில் என் முன்னோர்களின் சொந்தக்காரர்கள்தான்.இது அருண்விஜய்க்கு தெரியாதென்று நினைக்கிறேன்.
 ரோல்ஸ்ராய்ஸில்தான் முதன் முதலாக இரட்டை டார்க் கன்வர்ட்டர் கொண்டு வந்தார்கள்.இதனை ட்வின் டிஸ்க் டார்க் கன்வர்ட்டர் என்பார்கள்.இதனால் காரின் சக்தியை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அப்புறம் ரோல்ஸ்ராய்ஸ் கம்பெனி மிலிட்டரிக்கான  என்ஜின்களை தயாரிப்பவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டது.இதற்கிடையே பொருளாதார சிக்கலிலும் சிக்கி மீண்டு வந்துள்ளதாகச் சொல்வார்கள்.
 இந்த ரோல்ஸ்ராய்ஸ் என் ஜீனில் லேசாக இடம் பிடித்திருக்கிறதோ இல்லையோ கார்கள் என்றால் பொதுவாகப் பிடிக்கும்.ரோட்டில் போகிறபோது பெண்களைப் பார்ப்பதற்கு பதிலாக கார்களைப் பார்ப்பதுதான் எனக்குப் பிடிக்கும்.நம்முடைய வின்டேஜ் காலத்தில் வந்த அம்பாசடரைப் பார்த்தால் எனக்கு ஸ்ரீபீரியா போலவூம்(இப்போதென்றால் ஹன்சிகா) பிரிமியர் பத்மினி ஃபியட் காரைப் பார்த்தால் ஸ்ரீதேவி(பதினாறு வயதினிலே மயிலு) போலவூம் எனக்குத் தோன்றும்.சின்ன வயதில் விடுமுறைக்கு எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே உள்ள கார்பொம்மைகளை வாங்கி வந்து வைத்து தீபாவளியன்று வெடி வைத்து உடைப்பேன்.கார்களில் எனக்கு டீசல் பிடிக்காது.டீசல் என்பது லாரிக்காரர்களுக்கானது.பெட்ரோல்தான் கார்களின் ஆதர்சம் என்பேன்.ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் கார் படம் (படத்தின் பெயர் டூயல்) வரும்போதெல்லாம் பிளாசா தியேட்டரை கோவில் போல சுற்றி வந்திருக்கிறேன்.காரின் கதவைத் திறந்து உள்ளே அமரும்போது ரெக்ஸினும் பெட்ரோலும் கலந்த மாதிரி ஒரு வாசம் வருமல்லவா.குளித்து சீயக்காய் போட்டு (இப்போதெல்லாம் யார் போடுகிறார்கள்.) தலையில் டவலுடன் அருகே வந்தமரும் பெண்ணிடமிருந்து வரும் வாசம் போல ஒரு வாசம் வருமல்லவா அந்த வாசனையை புறக்கணிக்கக் கூடாதென்று நான் என் காரில் ஆம்பிபியூர் போன்ற சமாச்சாரங்களை டேஷ்போர்டில் வைப்பதில்லை.
 திண்டுக்கல் புராணமோ தாத்தாக்களின் கார்களோ அதெல்லாம் இருக்கட்டும்.உன்னால் இப்போது ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்க முடியூமா என்று இன்னமும் பிடிவாதமாக டேட்டாகார்டின் அருகே அமர்ந்திருக்கும் விதி கேட்டு விட்டு லேசாக சிரிக்கிறது.
 நிச்சயம் வாங்க முடியூம்.
 என்ன ஒன்றிரண்டு வருடங்கள் ஆகலாம்.
 ஃபான்டம் அல்லது ரெய்த் இரண்டில் எந்த மாடல் என்று பார்த்தால் எனக்கு ஃபான்டத்தை விட ரெய்த்தான் பிடிக்கும்.இரண்டின் ஆரம்ப விலை நாலரை கோடி ரூபாய் ஆகிறது.டாப் என்ட் மாடலின் விலை ஒன்பது கோடி ரூபாய்.
 ஒன்பது கோடி ரூபாய் சம்பாதித்து விட முடியாதா என்ன!
 லாட்டரலாக உழைத்து ஸ்மார்ட்டாக சம்பாதித்தால் கடந்து போன காலங்களைத் தவிர எதையூம் வாங்கி விட முடியூம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Previous
Next Post »