சிறுகதை: ஆபத்து கல்பா..ஆபத்து... -விஜயநிலா



 தன்னுடைய ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியில் கம்ப்யூட்டரில் கேம் ஆடிக் கொண்டிருந்த சுமிதாவை முறைத்தான்.
"என்ன சுமி இது.எப்பவூம் கேம்.இல்லைன்னா சாட்.கொஞ்சம் வேலையைப் பாரேன்"
"நான் ரெடி பாஸ்.நீங்களே இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மாதிரி கேசே இல்லாம பரிதாபமா உட்கார்ந்திருக்கிங்க.நானே ஒரு கேஸ் கொண்டு வந்தாதான் ஆச்சு"என்ற சுமி எழுந்தாள்.
டிஷர்ட்(வாசகம் எழுதத் தேவையில்லாமலேயே)டில் அபாயகரமாக இருந்தாள்.நீலநிற சாயம் போக்கடிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து பின்புறம் கைகளைக் கட்டிக் கொண்டு உலாத்தினாள்.
"பாஸ்"
"என்ன சினிமா போலாமான்னு கேட்பே.நான் வரலை"
"இல்லை.யாரோ வர்ற மாதிரி இருக்கு.இந்நேரம் நீங்க மோப்பம் பிடிச்சிருப்பிங்களே.பர்ஃப்யூம் வாசனையைப் பார்த்தா யாரோ ஒரு செமத்தியான சென்னைப் பொண்ணுன்னு நினைக்கறேன்"என்பதற்குள் அந்த பெண் உள்ளே நுழைந்தாள்.
இளமஞ்சள் நிற ஸாரியில் கைகளற்ற ரவிக் அணிந்து அவனை எச்சில் கூட்டி விழுங்கச் செய்தாள்.
"வாங்க.உட்காருங்க.சுமி என்னன்னு கேளு"
"என் அண்ணனை காணம்."
"விபரமா சொல்லுங்க.சுமி கம்ப்யூட்டர்ல குறிப்பெடுத்துப்பா.சுமி நீ இங்க பார்க்காத"என்று ஆர்வமானான் விஜய்.
"என் அண்ணன் சேல்ஸ்ரெப்பா இருக்கான்.திடீர்னு காணம்.போனவாரத்துல இருந்து"என்று கண்களை கசக்கினாள்.
"ஏதாவது பிரச்சனை இருந்தா.வெளி ஆட்களோட தகறாறு இல்லைன்னா லவ்அஃபேர்"
"அதத்தான் சொல்ல வர்றேன்.."
"சொல்லுங்க.ரவி ஒரு பொண்ணை லவ்விட்டு இருந்தான்"
"அதில ஏதும் ப்ராப்ளமா"என்றாள் சுமி.
"அவளையூம் ஒரு வாரமா காணம்.இல்லை நான் தப்பா சொல்றேன்.முதல்ல காணாமப் போனது அவதான்.அவ பேரு ரேவதி.அப்புறமா ரவியை காணம்.ஒரு நாள் கழிச்சி"
"ஏன்.அவங்க லவ்வூக்கு எதிர்ப்பு இருந்ததா"
"ரேவதி வீட்ல அப்பா மட்டும்தான் எதிர்ப்பு.ஆனா அவர் இல்லாத நேரத்துல ரவி அங்க போய் ரவாதோசை எல்லாம் சாப்பிட்டு வந்திருக்கான்"
இவள் சோகமாக இருக்கிறாளா இல்லை நடிக்கிறாளா என்று புரியாமல் பார்த்தான்.அண்ணன் காணமல் போனதை ரவாதோசை சகிதமாக விவரிக்கிறாளே என்று பார்த்துக் கொண்டிருந்தபோதே அவளது செல்பேசி அதட்டியது.
எடுத்தாள்.
"ஓ..காட்..மை குட் காட்..ரவி நீ போயிட்டியா.."என்றாள்.லேசாக முதுகு அதிர அழ ஆரம்பித்தாள்.வானிடி பேக் திறந்து கர்ச்சீப் எடுத்து ஒற்றிக் கொண்டு மறுபடியூம் சிக்கனமாக அழுதாள்.
"என்னாச்சுங்க.உங்க பேரைக் கூட நாங்க கேட்டுக்கலை.சொல்லுங்க.யாருக்கு என்ன ஆச்சு"
"ரவி போயிட்டான்"
"உங்க அண்ணனா.எங்க.எப்படி.எப்ப"
"எல்லாத்துக்கும் ஒரே பதில்தான்.குரோம்பேட்டை பக்கத்துல ரயில்வே கிராஸ் பக்கத்துல கிடக்கறானாம்.கழுத்துல ஸ்ட்ராங்குலேட் பண்ண மாதிரி இருக்காம்.லோக்கல் இன்ஸ்பெக்டர் ஃபோன் பண்ணி சொல்றாரு"
"சரி வாங்க.போய் பார்த்துட்டு வருவம்"
"நீங்க வேணாம்"என்றாள் அவள்.
"ஏன்.."
"நான் என் அண்ணனை கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லி கேஸ் கொடுக்கத்தானே வந்தேன்.அதான் அண்ணனே போயிட்டானே.அப்புறம் எதுக்கு கேஸ்.உங்க வேலையை நான் டிஸ்டர்ப் வேற பண்ணிட்டேன்"
"பாஸ் சாட்ல ஆர்யாவை ட்ரை பண்ணட்டுமா..விஷால் படத்தை தட்டிப்பிடிச்சிட்டாராம்.ஒரு கங்க்ராட்ஸ் குடுத்திர்றேன்.சாட்ரும்ல பாவிங்க வரிசை கட்டி நிக்கறாங்க இந்த சுமிக்கு.நீங்கதான் கண்டுக்கறதே இல்லை.வசனம் போட்டிருந்தாலும் சரி போடாட்டியூம் சரி"
"பார்டன்"
"இந்த வார்த்தை வேணாம் பாஸ்.நயன் இதை காமடியாக்கிட்டாங்க.நான் என் டிஷர்ட்டை சொன்னேன்"என்ற சுமியை கத்தரித்து விட்டு சொன்னான் விஜய்.
"வா சுமி லெட்ஸ் கோ.என்ன ஆச்சின்னு பார்த்துட்டு வந்திருவம்.சும்மா ஒரு க்யூரியாசிட்டின்னு வைச்சிக்க"
காரை எடுத்துக் கொண்டு அவளையூம் அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
"உங்க பேரை சொல்லலையே நீங்க"
"மைதிலி.கொஞ்சம் சீக்கிரமா போங்க.ரவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை"
"அவர் இறந்துட்டார்னு சொன்னிங்களே"
"ஆமாமா.எப்படி ஆச்சு.யார் எப்படி கொன்னாங்கன்னு தெரியலையே.ரேவதியை வேற காணம்"
"நீங்க போலீஸ்ல புகார் கொடுத்திங்களா"
"இல்லை"
"ஏன்"
"ராதிகாதான் ரொம்ப பயமுறுத்தறாங்களே"
"யார் ராதிகா இந்த கதையில"என்றான்.
"நடிகை ராதிகா.அவங்க சீரியல் எல்லாத்துலயூம் போலீசை கேவலமானவங்களா காட்டறாங்களே பின்ன எப்படி போலீஸ் மேல நம்பிக்கை வரும்.குரோம்பேட்டை போகனும்.போங்க.டிராஃபிக்ல மாட்டிக்காம டிரைவ் பண்ணுங்க"
"பாஸ் நல்லா டிரைவ் பண்ணுவார்.ஆனா கார் டிரைவிங் இல்லை.சரி மேல சொல்லுங்க.ரேவதி வீட்டில போய் நீங்க கேட்கலையா.அவங்க என்ன வர்ஷன் சொல்றாங்க"
"அவ அம்மாகிட்ட கேட்டேன்.என் அண்ணனும் அவளும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கப் போயிருக்காங்கன்னு அவ அப்பா நம்பறாராம்.வந்தவூடன ரேவதியை தெருவூல தள்ளி தலைமுழுகனும்னு வசனம் பேசிட்டு இருக்காங்க.எப்ப போனாலும் பாலச்சந்தர் படம் மாதிரி ஆள் ஆளுக்கு இன்டலக்சுவலா பேசிட்டே இருப்பாங்க.காட்.எனக்கு தாங்காது.நான் அங்க போறதில்லை.ரவி எப்படித்தான் அவளை லவ் பண்ணினானோ.அவளைப் பார்த்திங்கன்னா அந்தக் கால சுலட்சணா மாதிரி குள்ளமா எப்பபாரு தலையில கனகாம்பரம் மல்லிப்பூவை கலந்து வைச்சிட்டு நிப்பா.கவர்மன்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கறவளுக்கு அந்த அழகே அதிகம்தான்.ரவிதான் புத்தியில்லாதவன்.காதல்னு விழுந்திட்டான்"
குரோம்பேட்டை ரயில்வே டிராக்கிற்கு வெளியே விழுந்திருந்தான் ரவி.உயரமாய் விஷால் போல இருந்தான்.வெள்ளைச் சட்டை கருப்பு பான்ட் அணிந்திருந்தான்.கழுத்தில் மார்பில் இடுப்பில் கத்திக்குத்துக்கான அடையாளங்கள் தெரிந்தன.உதடு கிழிந்திருந்தது.
"வாங்க நீங்கதான் சிஸ்டரா.இவங்க யாரு ரிலேட்டிவ்ஸா"என்றார் இன்ஸ்பெக்டர்.
விஜய் அறிமுகப்படுத்திக் கொண்டான்.டிடெக்டிவ் என்றதும் ஏளனமாய் பார்த்தார்.சுமி காமராவால் படமெடுத்துக் கொண்டாள்.
"மிஸ்டர் நீங்க யாரு போட்டோ எடுக்கறதை.அந்த லேடிகிட்ட காமராவை வாங்குங்க.எங்க போட்டோகிராஃபர் இப்ப வந்திருவார்.பாடியை அட்டாப்சி பண்ணதும் வாங்கிக்கலாம்.ஏம்மா உங்க அண்ணனுக்கு ஏதாவது லவ் அஃபேரா"என்றார்.
மைதிலி மறுபடி கர்ச்சீப் எடுத்து மூக்கு உறிஞ்சி விட்டு ரவி-ரேவதி கதையை ப்ளாஷ்பேக்க ஆரம்பித்தாள்.
"பாஸ் போலாம்.கதை முடிஞ்சிருச்சி.தேடப்பட்ட ஆள் அவூட்"
"இல்லை சுமி.கதை முடியலை.ஆள் செத்திருக்கலாம்.கொலைக்கான காரணம் தெரியனும்.காணாமப் போன ரேவதிக்கு என்ன ஆச்சுன்னு தெரியனும்.நாம இதை வேஸ்ட்டுன்னு விட்ர முடியாது"
"சரி இப்போதைக்கு கிளம்புவம்.அப்புறம் வருவம்.நான் மைதிலியோட செல்நம்பர் வாங்கிக்கறேன்"
"போறபோது ரவி வேலை பார்த்த கம்பெனிக்கு போய் அவனோட டீம்லீடர் யாருன்னு பார்த்து விசாரிச்சிட்டுப் போவம்"
கிளம்பினார்கள்.
அடுத்த இரண்டு தினங்களும் மந்த கதியில் கழிந்தன.
அதையடுத்து ஒரு மாலைநேரத்தில் மறுபடியூம் வந்திருந்தாள் மைதிலி.சற்று ஓவர் மேக்அப்பில் செயற்கையான புன்னகையூடன் இருந்தாள்.
"ஹாய்.மறுபடியூம் தொந்தரவூக்கு மன்னிக்கனும்.எங்கண்ணன்தான் தப்பு பண்ணியிருந்திருக்கான்."
"என்ன சொல்ற மைதிலி"என்றாள் சுமி.
"அவனோட பாடியை சர்ச் பண்ணின இன்ஸ்பெக்டர் ஒரு துண்டுக் காகிதத்தைக் காண்பிச்சார்.அதுல என் அண்ணணோட கையெழுத்துல ரெண்டே ரெண்டு வார்த்தை.'கல்பா ஆபத்து'ன்னு எழுதியிருந்தது"
"ஸோவாட்"
"கல்பனாங்கறது ரேவதியோட தங்கை பேரு.இவன் பாவி ரெட்டைவால் குருவித்தனம் பண்ணியிருப்பான் போல.அவகிட்ட போய் எங்கண்ணன் பத்தி என்ன நினைக்கறேன்னு கேட்டேன்.உதட்டைக் கடிச்சிக்கிட்டு கீழ்ப்பார்வை பார்க்கறா.அக்கா காணாமப் போன துக்கம் கூட இல்லாம"
"வெயிட் எ மினிட் மிஸ் மைதிலி.நீங்க பாட்டுக்கு வர்றிங்க.அண்ணன் காணம்கறிங்க.கேசை எடுத்துக்கறதுக்குள்ள அண்ணன் செத்துர்றார்.இப்ப அண்ணன் துண்டு சீட்டுல கல்பனான்னு ஒரு பொண்ணு பத்தி எழுதியிருக்கார்னு சொல்றிங்க.வி நீ டு செர்ச்.நாங்க துப்புறவா ஆராயனும்"
"அது உங்க வேலை.நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்.நான் கேஸ் போதும்னு சொன்ன பின்னாலும் நீங்கதான் ஆர்வமா என் பின்னால வந்திங்க.உங்களுக்கு தேடறதுக்கு உதவட்டுமேன்னு இந்த தகவலை தர்றேன்"என்று விருட்டென்று கோபித்துக் கொண்டு கிளம்பிப் போய் விட்டாள்.
அவள் போனதும் கேட்டான் விஜய்.
"சுமி.இவளை நம்பலாமா"
"நீங்க என்னையே நம்ப மாட்டிங்க.ஆனா இவ பொய் சொல்லலை.அந்த கல்பனாவை கொஞ்சம் விசாரிக்கனும்.ஆள் ரெண்டு பொண்ணுங்களை 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பண்றானோ என்னமோ"
"சரி.நீ போய் கல்பனாவை விசாரி.நான் ரேவதியை தேடனும்.அவ எங்க வேலை பார்த்தா.ஏதோ ஒரு கவர்மன்ட் ஆபீஸ்தானே.போற வழியில அந்த குரோம்பேட் இன்ஸ்பெக்டரை பார்த்துட்டு அவர்கிட்டயூம் இந்த தகவலைச் சொல்லிர்றேன்.அவருக்கும் அந்த ரேவதி பத்தி தெரிஞ்சிருக்கும்"
"ஆல்ரைட்.காட்இட்"என்று ஒரு பறக்கும் முத்தத்தை காற்றில் பறக்க விட்டபடி பைக்கில் கிளம்பினாள் சுமிதா.
 இன்ஸ்பெக்டரை பார்த்தபோது இன்னும் அதே விறைப்பில் இருந்தார்.
"கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க சார்.அதான் சீரியல்ல போட்டு தாக்கறாங்க.அந்த பொண்ணு ரேவதி பத்தி ஏதும் தகவல் தெரியூமா உங்களுக்கு"
"யாரது"
"செத்துப் போன ரவி லவ் பண்ணிட்டு இருந்த ரேவதி.அவளும் காணமப் போயிருக்கா.சீக்கிரம் விசாரிங்க சார்.இல்லைன்னா அவளும் ஏதாவது ஒரு ரயில்வே ட்ராக்ல விழுந்திருக்கப் போறா"
"அவ தங்கையோட பேரு கல்பனா.அவளுக்கும் ரவிக்கும் ஏதாவது.."
"யா.யா.அந்த கோணத்துலயூம் நாங்க விசாரிச்சிட்டுதான் இருக்கம்.ஆனா கல்பனா சின்னப் பொண்ணு."
"ரேவதி எங்க வேலை பார்க்கறா"
சொன்னார்.
அடுத்த அரைமணியில் அந்த அலுவலகத்தில் இருந்தான்.உள்ளே போய் ரேவதியைப் பற்றி கேட்டதுமே அங்கிருந்த ஆபீசரின் முகம் மாறியது.வெளியே வந்தான்.
"சுமி.உடனே வா.கேஸ் சிக்கலா போயிட்டு இருக்கு.ஏறக்குறைய எல்லாத்தையூமே நான் கண்டுபிடிச்சிட்டேன்.மேட்டர் ரொம்பப் பெரிய மேட்டர்"
"என்ன ஆச்சு.ரேவதியூம் செத்துட்டாளா"
"இல்லை.நீ உடனே வா.நாம மறுபடி அந்த இன்ஸ்பெக்டரைப் போய் பார்ப்பம்.மேட்டர் வெளியில லீக் ஆகாம முடிக்கனும்.ரொம்பவூம் சென்சிட்டிவ் விஷயம்"
சுமிதா வந்ததும் அவளை காரில் ஏற்றிக் கொண்டு மறுபடி குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தான்.அவனைக் கண்டதும் எரிச்சலுடன் வரவேற்ற இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போய் எழுந்து விட்டார்.
"மிஸ்டர் நிஜமாத்தான் சொல்றிங்களா.இல்லை இது ஒரு ரூமரா"
"நிஜம்.பாதி நிஜம்.மீதி நிஜமாகக் கூடாதுன்னு வேண்டிக்கறம்"
ரேவதி முதலில் காணாமல் போகிறாள்.
ரவி பிறகு காணாமல் போகிறான்.
ரவி செத்துக் கிடக்கிறான்.
கொலை
கல்பா ஆபத்து என்று எழுதி வைத்திருக்கிறான்.
ரேவதியின் தங்கையின் பெயர் கல்பனா.
ரேவதி வேலை பார்ப்பது சார்பதிவாளர் அலுவலகம்.
ரவி-ரேவதி-கல்பனா என்று காதல் முக்கோணம் இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
இது வேறு கல்பா!அங்கேதான் ஆபத்து என்று எழுதியிருக்கிறான்.
"யெஸ் சார்.ரவி மார்க்கெட்டிங் வேலை பார்க்கறவன்.அந்த இடத்துக்கும் போயிருக்கான்.அங்க என்னமோ ஆகப்போவூதுன்னு நியூஸ் கிடைச்சதும் ரியல்எஸ்டேட் புக்கிஸ் சென்னையில் பயங்கரம் நிகழப்போகிறது என்று சினிமா நடிகர்கள் தொழிலதிபர்கள் என்று ரகசியமாக அவர்களை சந்தித்து பாதிவிலைக்கு சொத்துக்களை விற்று விட்டு வேறு மாநிலத்துக்கு சென்று செட்டிலாகி விடும்படி சொல்லி விட்டு பவர் பத்திரம் வாங்கிக் கொண்டு உடனடியாக மார்க்கெட் விலையை விட டிஸ்கவூன்ட் செய்து பரபரவென சொத்துக்களை விற்று பத்திரம் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.எதற்காக எப்படி அவசரஅவரமாக நடிகர்கள் தொழிலதிபர்கள் சொத்துக்களை விற்கிறார்கள் என்று புரியாத ரேவதி சப்ரிஜிஸ்ட்ராரிடம் கேட்க ரியல்எஸ்டேட் மாஃபியாக்களின் உள்-ஆளாக செயல்பட்டு வரும் அவர் ரேவதியின் வாயை அடைப்பதற்காக அவளை அடைத்து வைத்திருக்க-அவளை விடுவிக்கிறார்கள்.
கடைசியில்-
"பாஸ்..கல்பான்னா கல்பாக்கம்னு கண்டுபிடிச்சிட்டிங்க.இந்த ரியல்எஸ்டேட் ஆளுங்க கல்பாக்கத்துல இருக்கற ரியாக்டர்கள் ஜப்பான் அணுஉலை மாதிரி கதிர்வீச்சை கசியவிடப்போகுதுன்னு புரளி கிளப்பித்தானே பணம் சம்பாதிச்சிருக்காங்க."என்றாள் சுமிதா.
"தெரியலை.நாம எதுக்கும் நம்ம ஆபீசை பெங்களுருக்கு நாளைக்கே மாத்திடலாம்"என்றான்.

                                                   ----------------------------------------------
Previous
Next Post »