சிறுகதை: "பெண்மணம்..." -விஜயநிலா


  
 நடக்கின்ற எதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமின்றி அப்படியே அமர்ந்திருக்கத் தோன்றியது.கண்களை மூடாமல்தான் அமர்ந்திருந்தேன்.எந்த காட்சியூம் பதிவாகவில்லை.காலையில் ஏழரைக்கே வாத்தியார் வந்திருந்து ஹோமம் வளர்த்து அதன்பின் மந்திரம் சொல்லி பிண்டம் வைத்து என் அப்பாவூக்கு சிராத்தம் செய்து விட்டு டிகிரி காபி கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்த அசைன்மன்ட் தேடி போய் விட்டார்.நான் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தேன்.

 அப்பாவின் ஃபோட்டோ சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.அதில் போடப்பட்டிருந்த கையகல மல்லிகைப்பூ சரம் சரிந்திருந்தது.நிறை விளக்காக எண்ணையூடன் குத்துவிளக்கு அருகே விறைப்பாக நின்றிருந்தது.
 அப்பா ஒரு சாதாரண மனிதர்தான்.அவரைப் பற்றி எனக்கு எந்த ஆதர்சமும் கிடையாது.எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ்ந்து மறைந்து விடுகிறார்களே அது போலத்தான் என் அப்பாவூம் இருந்தார்.இந்த கதை கூட என் அப்பா பற்றியதல்ல.அப்பாவிடம் நான் சின்ன வயதில் தொடர்ந்து மன்றாடிக்கேட்டுக் கொண்ட வேண்டுதலும் அதை கடைசி வரை நிராகரித்து வந்ததும்தான்.அதைத்தான் நேரடியாகச் சொல்ல நினைத்தேன்.அதற்குள் இந்த திதி சம்பிரதாயங்களில் மனம் சற்று ஸ்தம்பித்து விட்டது.
அப்பா எப்போதும் கொஞ்சம் சிடுசிடுத்தனமாகவே இருப்பார்.தனிமையாகவே இருப்பார்.நண்பர்கள் என்று யாரும் வீட்டுக்கு வந்து நான் பார்த்தது கிடையாது.அதன் காரணத்தை சற்று பெரியவனாக நான் வளர்ந்தபின்தான் புரிந்து கொள்ள முடிந்தது.திண்டுக்கல்லில் பெரிய வணிகக்குடும்பத்தில் செல்லமாகப் பிறந்திருக்கிறார்.ஆனால் அவரது தாத்தா சேர்த்து வைத்த அத்தனை சொத்துக்களையூம் நல்லபெயரையூம் என் தாத்தா அதாவது அப்பாவின் அப்பா வாரி இறைத்து கரைத்திருந்திருக்கிறார்.அந்த ஆள் ஒரு ஜபர்தர்ஸானவர் என்று சொல்லக் கேள்வி.ஆங்கிலத்தில் பிய்த்து உதறுவார் என்பார்கள்.ஆனால் அவரது நோக்கமெல்லாம் புதிது புதிதாக பெண்களைப் பிடிப்பதில்தான் இருந்தது.இந்த இடத்தில் நான் அப்பாவை பற்றி சொல்ல வந்து அவர் அப்பாவை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் என எண்ணுகிறேன்.சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.சில பாராக்களுக்குப் பிறகு கதையின் மெயின் களத்திற்குள் சிரமப்பட்டாவது வந்து விடுகிறேன்.

 அவர் பெயர் ஜெகந்நாதன்.ஆள் குள்ளமாக சிவப்பாக சினிமா கதாநாயகன் மாதிரி இருப்பார்.எப்போதும் இம்போர்டர்டட் கார் வைத்திருப்பார்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை காரையூம் தன்னிடமுள்ள பெண்ணையூம் மாற்றி விடுவார்.அவர் 'பெண் பிடிக்கும்' வித்தையே மிகப் புதிதாக இருக்கும்.எப்போதும் விமானத்திலேயே சுற்றுவார்.திண்டுக்கல்லில் சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒண்ணாம் நம்பர் மண்டிதான் அவருடையது.முழுக்க வெங்காய வியாபாரம்.சிலோனுக்கும் மலேஷியாவூக்கும் ஏற்றுமதி செய்வார்.அத்துடன் சிகரெட்டிற்காக (சிகார் என்பார்கள்.சுருட்டு போல இருக்கும்) அட்டைப்பெட்டி தயாரித்து ஏற்றுமதி செய்வார்.கண்ணதாசன் பாட்டில் வருவது போல காலையில் சிலோனில் காபி மதியம் உணவூக்கு மலேயா அதன்பின் இரவூக்கு ரங்கோன் என்று சுற்றுவார்.ஏர்போர்ட்டில் யாராவது அழகான பெண்ணைப் பார்த்து விட்டால் அருகில் போய் அமர்வார்.பார்த்த மாத்திரத்திலேயே அவள் அழகில் பிரமித்துப் போய் விட்டதாய் சொல்லி தன்னுடைய கார் சாவியை கையில் கொடுத்து விட்டு திரும்பிப் பாராமல் வந்து விடுவார்.அந்த பெண் மிரண்டுபோய் ஃபாரின்காரையே தனக்கு கொடுத்து விட்டாரே என்று தன்னை அவருக்கு கொடுக்க முன்வருவதோடு தன்னுடைய சொத்துக்களையூம் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விடுவாள்.


 அப்படி முதலில் வந்தவள்தான் மெல்சி.ஒரு கிறிஸ்துவப் பெண்.எமிஜாக்சன் எல்லாம் வெட்கப்பட வைக்கும்அழகு.டீச்சராக இருந்தாள்.அவளை தன் வலையில் சிக்க வைத்த ஜெகந்நாதன் அவளை கரூரில் கொண்டு போய் அரண்மனை போன்ற பங்களா கட்டி வைத்துக் கொண்டார்.மெல்சிக்கு செல்வநாதன் என்ற பையன் பிறந்தபோதுதான் என் அப்பாவூக்கு சனி பிடித்தது என நினைக்கிறேன்.அதுவரை அரை மனதாக என் அப்பாவை தன் அருகே அனுமதித்தவர் அதன்பின் அப்பாவை பார்த்தா விரட்டுவாராம்.திண்டுக்கல்லில் அந்த காலத்தில் அவர்கள் வீடு கிழக்குரதவீதியில் இருந்தது.அங்கே அந்த வீசாலமான வீட்டில் சமையலறை மட்டும் கிடையாது.அதற்கு பதிலாக வீட்டில் எதிரில் உள்ள ஒரு வீட்டையே சமையலறையாக மாற்றி விட்டிருந்தனர்.அந்த வீட்டிற்கு சோறாக்குற வீடு என்றே பெயர்.என் அப்பா எப்போதும் ஒரு மோரிஸ்மைனர் காரில் உட்கார்ந்துதான் சாப்பிடுவாராம்.அந்த செல்வநாதன் பிறந்ததும் கார் அருகே அவரை விடமாட்டாராம்என் தாத்தா.அந்த நிமிடத்திலிருந்துதான் அப்பா தனிமை விரும்பியாக மாறிப்போனார் என்று நினைக்கிறேன்.செல்வநாதனின் அத்தியாயம் சுலபமாய் ஒரு நாளில் முடிந்து போனது.அடுத்ததான ஏர்போர்ட்டில் வைத்து கார்சாவிக்கு தன்னையூம் தன் சொத்துக்களையூம் கொடுக்க ஒரு பெண் வந்தாள்.அவள் பெயர் ஜெயாமேரி.இலங்கையிலிருந்து வந்த இன்னொரு அழகுப்புறா என்று கிசுகிசுத்துக் கொண்டார்கள்.தாத்தா சுலபமாக மெல்சியையூம் செல்வநாதனையூம் கைவிட்டார்.கடைசியில் அந்த மெல்சி திருச்சி கன்டோன்மென்ட்டில் சேவாசங்கம் அருகே-இப்போது அங்கே பாஸ்போர்ட் ஆபீஸ் இருக்கிறது-கடைசி காலத்தை கழித்தாளாம்.செல்வநாதன் இப்போது குளித்தலை பக்கமாக கிறித்துவ மதபிரசங்கியாக அலைகிறார் என்று சொல்வார்கள்.
கடலுரரில் 8ம்எண் புயல் எச்சரிக்கைக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது என்று டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது என் அப்பா சார்ந்த ஞாபகம் கடலுரர் பக்கமாக இடம் பெயர்ந்தது.திண்டுக்கல்லில் அத்தனை பேரோடும் புகழோடும் மைனராக திகழ்ந்த ஜெகந்நாதன் அத்தனை சொத்துக்களையூம் இழந்தார்.சொத்துக்களை மட்டும்தான் இழந்தார்.

     ஆனால் மெல்சி, ஜெயாமேரி அதன்பின் வேறு பல பெண்கள் என்று தன் ஆட்டத்தை மட்டும் அவர் தொடர்வதை நிறுத்திக்கொள்ளவில்லை.பழநியில் தேவஸ்தான கேன்டீன் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தியபோது அங்கே கௌதமி என்றொரு யூவதிவை வைத்துக் கொண்டிருந்தார் என்பார்கள்.திண்டுக்கல்லில் இருந்து பழநிக்கு முதன்முதலாக அவர்தான் தார்ரோடு போட்டவர் என்றால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள்.அத்தனை சொத்துக்களையூம் அவர் இழந்தது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தஞ்சாவூருக்கு அருகில் வல்லத்தில் ராணுவ விமான ஓடுதளம்அமைக்கும் கான்ட்ராக்ட்ல் அத்தனை பணத்தையூம் முடக்கியிருந்தார்.கடைசியில் போட்ட பணம் வரவில்லை.மனைவியையூம் மகனையூம் அதாவது என் அப்பாவையூம் விட்டு விட்டு ஓடிப் போய் விட்டார்.அதன்பின் என் அப்பாவை பராமரித்து வந்தது அவரது பெரியப்பா.அவர் இன்னொரு கடுகடு ஆசாமி.தம்பி பையனையூம் தம்பி மனைவியையூம் தன் தலையில் சுமத்தி விட்டார்களே என்ற கடுகடுப்பை காண்பித்துக் கொண்டே இருப்பார்.வணிகவரித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு கடலுரருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தபோது அப்பாவூம் அங்கு பள்ளிக்கூடத்தை மாற்றிச் செல்ல வேண்டியிருந்தது.பள்ளியிறுதி வரைக்கும்தான் அப்பாவால் படிக்க முடிந்தது.அதன்பின் எங்கோ ரேடியோ கடையில் வேலை பார்த்திருக்கிறார்.அதன்பின் அரசு வேலை கிடைத்திருக்கிறது பெரியப்பாவின் தயவால்.அப்புறம் திருமணம் என்று எல்லா சாமானிய மனிதன் போலவூம் அவரது வாழ்க்கை ஆகியிருக்கிறது.நான்தான் வீட்டுப் பெரியவர்களிடம் எங்களது முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வமுடன் கேட்டுக் கொள்வேன்.சிலர் சொல்வார்கள்.சிலர் ஜெகந்நாதன் ஆடிய ஆட்டத்தை கேலி செய்து சிரிப்பார்கள்.அப்போதெல்லாம் எனக்கு பெண்களை ஏறெடுத்தும் பார்க்க கூடாது.பெண்கள் எல்லாரும் பிசாசுகள் என்பதாக ஒரு நினைப்பு வரும்.அதாவது என் தாத்தா நல்லவர் என்றும் அந்த பெண்கள்தான் வந்து அவரை கெடுத்து விட்டார்கள் என்றும் அந்த வயதில் நானாக நினைத்துக் கொள்வேன்.அந்த நினைப்பு தவறு என்று எனக்கு  காண்பித்தது வெண்ணிலா டீச்சர்.


     நான் திருச்சியில் கோஎட் பள்ளியில்நான்காம் வகுப்பு படிக்கும் போது பெண்பிள்ளைகளிடம் பேச மாட்டேன்.அந்த பள்ளிக்கூடம் இன்றைக்கும் இருக்கிறது.மேலப்புதுரர் பக்கமாக இடது புறம் திரும்பினால் புனித அன்னாள் மேனிலைப்பள்ளி என்று பெயர்.அங்குள்ள சிஸ்டர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.சிலர் அதீத அன்பாக இருப்பார்கள்.இருந்தாலும் அவர்களும் பெண்கள்தானே என்ற ஏளனம் மட்டும் என்னிடம் இருக்கும்.என் வகுப்பில் சுபத்ரா, சாந்தி, காந்தி என்ற பெண்கள் மதிய நேரத்து ஸ்டடி டீமில் ஒன்றாக இருக்கும்படி ஆகும்.இதில் சுபத்ராவின் அப்பா டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருந்தார்.அந்த பெண் என்னிடம் பழக பழக வந்தாலும் நான் விலகி விலகிப் போய் விடுவேன்.எப்போதும் வெள்ளை வெளேறென்னு இஸ்திரி சட்டை போட்டு சட்டைக்காலரில் கர்ச்சீஃபை எம்ஜியார் மாதிரி வைத்துக் கொண்டு வரும் செல்வராஜ் கூட என்னை பொறாமையாகப் பார்ப்பான்.நான் விலகி விலகிச் சென்று விடுவதைப் பார்க்கிற வெண்ணிலா டீச்சருக்கு என்ன புரிந்ததோ என்று தெரியாது.ஒருநாள் என்னை அருகில் அழைத்து அமர வைத்து என் கைகளைப்பிடித்துக் கொண்டார்.
 டீச்சரின் அருகில் போனபோதே என்னமோ மாதிரி புதிதாக ஒரு வாசனை வந்து கொண்டே இருந்தது.மதியம் யூரின் போனபோத செல்வராஜ் சொன்னான்.
"அது பவூடர்டா.குட்டிக்குரா பவூடர்.பொம்பளைங்க போடறது.கமகமன்னு லேடீஸ் வாசனையா வரும் அந்த பவூடர்ல இருந்து.ஆனா விலை அதிகம்."
"உங்க வீட்ல என்ன பவூடர்டா"
"எங்க வீட்டுல பவூடர் எல்லாம் கிடையாது.எங்கப்பா இஸ்திரி போட்டு வர்ற காசுல பவூடர்லாம் வாங்க முடியாதுடா.உங்க வீட்டுல"
அப்போதுதான் யோசித்துப் பார்த்தேன்.எங்கள் வீட்டிலுள்ள பவூடரில் மட்டும் ஏன் வாசனை வருவதில்லை என்று.எங்கள் வீட்டில் எப்போதும் பான்ட்ஸ் பவூடர்தான் வாங்குவார்கள்.ரோஸ்நிறத்தில் பவூடர் டப்பா இருக்கும்.ஆனால் அதிலிருந்து பிரத்யேகமாக எந்த வாசனையூம் வந்து நான் பார்த்ததில்லை.அப்பா எப்போதும் மாசசாமான்களை காவேரி ஸ்டோரில் வாங்கி வைத்து விடுவார்.காவேரி ஸ்டோர் கல்லுக்குழியில் இருக்கிறது.அங்கிருந்து சைக்களில் கடைப்பையன் கொண்டு வந்து வைத்து விடுவான்.சாமான் வந்து இறங்கினா உடனே நான் எட்டிப்பார்ப்பது பினாகா டூத்பேஸ்ட் இருக்கிறதா என்றுதான்.அதில்தான் குட்டிக்குட்டியாக பொம்மை வைத்திருப்பார்கள்.அந்த பொம்மைகளுக்காகவே பினாகா வாங்கச் சொல்லி தொணத்தொணப்பேன்.பவூடர் பற்றியெல்லாம் நான் யோசித்துப் பார்த்தில்லை.ஆனால் இப்போது வெண்ணிலா டீச்சரின் உடலிலிருந்தா இல்லை அவளது உடையிலிருந்தா என்று தெரியவில்லை குட்டிக்கூரா பவூடர் வாசனை அசத்தலாக வீசியது.அந்த வாசனை அப்படியே என்னை கட்டிப் போட்டு விட்டது.அதன்பின் நான் செய்த காரியம் எனக்கே வெட்கமாக இருக்கிறது.எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து குட்டிக்கூரா வாசனை வருகிறதா என்று ரசகியமாக முகர்ந்து பார்த்துக் கொண்டே வந்திருக்கிறேன்.ஒரு தரம் தைரியம் வரப்பெற்றவனாக சுபத்ராவிடம் கேட்டேன்.
"நீ உங்க வீட்ல குட்டிக்கூரா பவூடர் வாங்க்ச் சொல்ல மாட்டியா"
"ஏன் கேட்கற"என்றாள் மனப்பாடம் செய்வதை நிறுத்தாமல் ஸ்டடி ஹவரில்.
"இல்லே..அழகான பொண்ணுங்க எல்லாம் குட்டிக்கூரா பவூடர்தான் போடுவாங்கன்னு செல்வராஜ் சொல்றான்.அவங்க அப்பா கடைக்கு இஸ்திரிக்கு வர்ற டிரஸ்ல கூட பொண்ணுங்க டிரஸ் சிலதுல குட்டிக்கூரா வாசனை இருக்குதாம்"
"ச்சீய் போடா..எங்கப்பா ஃபாரின் பவூடர்தான் வாங்குவார்.நாங்க பர்மாபஜார்லதான் வாங்குவோம்"என்று சொன்னது என்னை கொஞ்சம் குழப்பி விட்டது.மறுபடியூம் செல்வராஜிடம் கேட்டேன்.
"பெரிய பணக்காரங்க எல்லாம் குட்டிக்கூரா போட மாட்டாங்களாடா"
'யார் சொன்னா..எம்ஜியார் படத்துல வர்ற கதாநாயகிங்களே குட்டிக்கூராதான் போடறாங்களாம்..நம்ம பீமநகர்ல வின்சன்ட் சொன்னான்..ஃபாரின் பவூடர் எல்லாம் வெள்ளைக்காரிங்க குண்டி தொடைச்சிட்டுத் துரக்கிப் போடறதை கொண்டு வந்து சுண்ணாம்பு நிரப்பி விப்பானுங்க"என்று கெக்கெக் என்று சிரிக்க ஆரம்பிக்க இந்த டாபிக்கை இனி இவனிடம் பேசக் கூடாதென்று முடிவூ செய்து கொண்டேன்.அப்புறமும் நான் வெண்ணிலா டீச்சரிடம் போய் அமர்கின்ற தருணங்களில் அந்த குட்டிக்கூரா பவூடர் ஒரு கனவூ எஃபக்ட்டை கிளப்பிவிடவே அந்த பவூடரை எங்க வீட்டிலும் வாங்கச் சொல்லனும் என்று முடிவூ செய்தேன்.
இதற்கிடையே பெண்கள் பற்றின என் தவறான எண்ணத்தை வெண்ணிலா டீச்சர் வெகுவாக மாற்றியிருந்தார்.என் தாத்தா ஆடிய ஆட்டத்திற்கு அந்த மெல்சியொ ஜெயாமேரியோ இல்லை கௌதமியோ என்ன செய்வார்கள்.இத்தனைக்கும் ஐரனி மாதிரி அந்த ஜெயாமேரியின் பெண் அதாவது என் தாத்தாவிற்கு பிறந்த பெண் மங்கையர்கரசி என்று பெயர்சொன்னார்கள்.அந்த பள்ளிக்கூடத்திலேயே பயிற்சி டீச்சராக வேலை செய்து வருதாக தகவல் கிடைத்தது.அந்த பெண் நல்ல பெண்ணாகவே இருந்தாலும் நான் வெறுப்போடு பார்ப்பேன்.அந்த பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரியாதென்றாலும் கனிவாகச் சிரிப்பாள்.கடைசியில் அத்தனை மைனர் ஆட்டம் ஆடிய ஜெகந்நாதன் தாத்தா தங்குவதற்கு வீடு ஏதும் இல்லாமல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் செகன்ட் கிளாஸ் வெயிட்டிங் ரூமில் டிக்கெட் இல்லாத பயணியாக ஒளிவூ மறைவாக தங்கிக்கொண்டிருந்ததை பார்த்திருக்கிறாள் இன்னொரு வயதான பெண்.அந்த பெண்ணின் பெயர் மங்களம்.அந்த பெண்தான் கடைசியில் அவரை ரயில்வேகாலனியில் தன் வீட்டில் வைத்து கடைசி வரை பராமரித்து வந்தாள்.அத்தனை பெண்களும் எப்படி இவர் வைக்கும் பொறியில் சிக்குகிறார்கள்.ஒரு பெண் கூட இவர் மீது கோபம் கொண்டு சீறவில்லையே.கடைசி வரைக்கும் இவருக்கு மட்டும் எப்படி பெண்களின் அருகாமையூம் அவர்களுடைய அன்பும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது.
ஒருநாள் நான் வெண்ணிலா டீச்சரிடம் போய் நின்றேன்.அவர்தான் அழைத்திருந்தார்.
"வாடா.ஸ்கூல்ல நாளன்னிக்கி எக்ஸ்கர்ஷன் போறம்.தொண்டி ஓரியூர்னு ரெண்டு நாள் பஸ் பயணம்.எல்லா பிள்ளைங்களும் வராங்க.நீயூம் வந்திடு.காலையில அஞ்சு மணிக்கு கிளம்பனும்"
"வீட்ல...அப்பா விட மாட்டாங்க..."
'நான் சொல்லிக்கறேன்.நீ நைட் என் ரூம்லயே படுத்துக்க.காலையில இங்கிருந்தே கிளம்பிடலாம்"என்று என்னை அவருடைய ஹாஸ்டல் அறையில் தங்க வைத்தார்.
இரவூ சப்பாத்தியை பிய்த்து எனக்கு வெண்ணிலா டீச்சர் ஊட்டி விட்டபோது குட்டிக்கூரா வாசம் சப்பாத்தியையே சுவை மாற்றிக் காட்டியது.காலையில் டீச்சருக்கு தெரியாமல் கொஞ்சம் குட்டிக்கூரா பவூடரை ஒரு காகிதத்தில் மடித்து எடுத்துக் கொண்டு விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன்.முடியவில்லை.குளித்து முகம் துடைத்துக் கொண்டு வந்தபோது வெண்ணிலா டீச்சர் என் கைகளில் ஒரு சின்ன பான்ட்ஸ் பவூடரை நீட்டினாள்.
"டீச்சர்..இது.."
"உன் வீட்டுல பான்ட்ஸ்தான் வாங்குவாங்களாமே.அதான் பக்கத்து ரூம் பிலோமினா டீச்சர்ட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்.போட்டுக்க.சுபத்ராதான் சொன்னா உன் வீட்டுல பான்ட்ஸ் பவூடர்தான் வாங்குவாங்கன்னு.."
கதவூக்கு வெளியே இருந்து பழி வாங்கி விட்ட சந்தோஷத்தில் சுபத்ரா சிரித்தாள்.கடைசி வரை எனக்கு குட்டிக்கூரா பவூடர் கிடைக்கவில்லை என்றாலும் நான்தான் அடம்பிடித்து டீச்சரின் அருகில் அமர்ந்தேன்.வெண்ணிலா டீச்சரிடமிருந்து வந்த குட்டிக்கூரா வாசனையே போதும் என்றிருந்தது.
 டூர் முடிந்து வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென்று வழக்கம் போல மர்பிரேடியோவில் ஹிந்திப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தார்.
மெதுவாக அவரிடம் போனேன்.
"என்னடா..போய் புஸ்தகத்தை எடுத்து படி.போ பரிட்சை வருதுல்ல" என் இத்தனை வருட வாழ்க்கையில் அப்பா என்னிடம் அதிகபட்சமாக பேசியது இந்த வாக்கியமாகத்தான் இருக்கும்.அவரது அப்பா ஒரு நல்ல அப்பாவாக இல்லாமல் போனதால் தான் மட்டும் எதற்காக ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டுமென்று நினைத்திருக்கக் கூடும்.பலநேரங்களில் அவர் அப்பா செய்த கொடுமைகள் அலட்சியங்களுக்கு பழிவாங்குவதாக என்னைத்தான் பலிகடாவாக வதைப்பார் என் அப்பா.அதெல்லாம் எனக்குப் பழகிப்போய் விட்ட நிகழ்ச்சிகள்.எப்படியூம் இந்த தீபாவளியை முடித்து விட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் விட வேண்டுமென்று ஒவ்வொரு வருடமும் நினைத்துக் கொள்வேன்.ஆனால் ஓடிப்போவதற்கான திராணி இருக்காது எனக்கு.இப்போது குட்டிக்கூரா பவூடரின் வாசனையை அனுபவித்தே ஆக வேண்டுமென்று மனது அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டதால் அப்பா எட்டி உதைத்தாலும் குட்டிக்கூரா வாங்கி விட வேண்டுமென்று பணிவான நின்றேன்.

"என்னடா"
"இந்த தரம் வேற பவூடர் வாங்கலாம்பா"
"என்னது";
"ப..பவூடர்..வேற பவூடர் வாங்கலாம்னு.."
"ஏன் துரைக்கு இந்த பவூடருக்கு என்ன.பவூசு கேட்குதோ இந்த வயதுல.பிச்சுப்புடுவேன் பிச்சி.போய் புஸ்தகத்தை எடுத்துட்டுப் போய் படி.."
"இல்லேப்பா.ஸ்கூல்ல பசங்க எல்லாம் குட்டிக்கூரா பவூடர் வாங்கறாங்கப்பா.."
"அதான பார்த்தேன்.குட்டி பவூடர் வேணுமா..இந்த பார்றி..உம்மவனை.குட்டிங்க போடற பவூடர் கேட்கறான் இந்த வயசுல..அப்படியே ஜெகந்நாதனை உரிச்சி வைச்சிருவான் போல.."
ஜெகந்நாதன் என்ற வார்த்தை என்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்தேன்.மறுபடியூம் பெண்கள் என்றால் திரும்பிப்பார்க்காமல் ஒடுங்க ஆரம்பித்தேன்.வெண்ணிலா டீச்சர் கண்டுபிடித்து விட்டார்.
"என்னடா உன் பிரச்சனை..என் பவூடர் வேணுமா.."
எனக்கு வேண்டியது பவூடரா அல்லது அந்த பவூடர் தடவிய டீச்சரா என்று அந்த வயதில் புரியவில்லை.அந்த பவூடரின் வசீகரமா இல்லை வெண்ணிலா டீச்சரின் வசீகரமா எது பெரிது என்று புரியவில்லை.
"வீட்ல வாங்க சொல்லு.மாசசாமான்தான வாங்குவிங்க..எங்க வாங்குவிங்க..'
"காவேரி ஸ்டோர்ல டீச்சர்"
"அப்புறமென்ன.அங்க குட்டிக்கூரா கிடைக்குமே.."
'அப்பா வாங்கமாட்டேங்கறார் டீச்சர்.."
"சரி விடு.பவூடர் வேணும்னா தரேன் போட்டுக்கறியா..'
"வேணாம் டீச்சர்"


அப்புறம் வந்த ஆண்டு பரிட்சை தேர்வூக்கான தீவீரமான வாசிப்பும் வேறு கவலைகளும் வந்து குட்டிக்கூரா பவூடரை கொஞ்சம் மறக்கடித்து விட்டது.அந்த ஆண்டு முடிந்ததும் என்னை ஆர்சி ஹைஸ்கூலுக்கு மாற்றி விட்டார்கள்.அங்கே கோஎட் கிடையாது.கையில் புளியவிளார் வைத்துக் கொண்டு மிரட்டுகிற ஆசிரியர்களும் மதியநேரத்து ஸ்டடி டைம் எல்லாம் இல்லாததால் கபடி விளையாட்டுமாக கொஞ்சமாக மாறிப்போனேன்.அப்புறம் நான் வெண்ணிலா டீச்சரை நான் சந்திக்கவே இல்லை.இங்கே வருகிற வாத்தியார்கள் கோகுல் பவூடரும், பான்ட்ஸ் பவூடருமாகத்தான் வருவார்கள்.பாதிப்பேர் வெற்றிலைப்பாக்கு போட்டு குதப்பியூம் சிகரட் பிடித்தும் வேறு வாசனையை கிளப்பி வெறுக்க வைத்தார்கள்.


 அப்பாவிடம் ஒவ்வொரு மாதமும் நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்.கடைசி வரை அப்பா குட்டிக்கூரா பவூடர் வாங்க சம்மதிக்கவே இல்லை.அறையை பெருக்க ஆரம்பித்தார்கள்.
"அதை கொண்டுட்டுப் போய் ஆத்துல கரைச்சிட்டு வந்திருங்க.பிண்டத்தை ரொம்பநேரம் வைச்சிட்டிருக்கக் கூடாது"என்றதும் எழுந்தேன்.ஒரு பித்தளை குண்டாவிலிருந்த பிண்டத்தை துணியால் மூடி ஸ்கூட்டியில் முன்னால் வைத்து கால்களால் இறுக்கிக்கொண்டு ஆற்றுப் பாலத்திற்கு வந்தேன்.அதை எடுத்து ஆற்றில் கொட்டி விட்டு கை கால்களை அலம்பி விட்டு ஒட்டிக்கொண்டிருந்த எள்ளை எடுத்துப் போட்டு விட்டு திரும்பி வண்டியை ஸ்டார்ட் செய்யப் போனபோது அங்கிருந்த ஒரு குப்பைக்குவியலின் அருகே கிடந்த காலியான பவூடர் டப்பா என்னை கவர்ந்தது.யாரோ போட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.



அது ஒரு பான்ட்ஸ் பவூடர் டப்பா.
 என்ன மனிதன் நான்?எப்படி யோசிக்காது போனேன்.ஒவ்வொரு முறையூம் அப்பா பான்ட்ஸ் பவூடரை மாற்றாதிருந்தமைக்கு காரணம் இருந்திருக்க வேண்டும்.குட்டிக்கூரா பவூடருடன் எனக்கொரு வெண்ணிலா டீச்சர் திருச்சியில் இருந்த மாதிரி திண்டுக்கல்லிலோ கடலுரரிலோ பான்ட்ஸ் பவூடருடன் அப்பாவூக்கு ஒரு அபிமான டீச்சர் ஏன் இருந்திருக்கக் கூடாது?
                                                         -----------------------------------
Previous
Next Post »

3 comments

Click here for comments