தொடர்கதை: "அவள்-இவள்..." -விஜயநிலா


                                                                         (6)
   வாசல்கதவில் கை வைத்தபடி தயங்கியபடியே நின்றிருந்தவன் உள்ளேயிருந்து யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.யாரும் வரவில்லை என்றதும் திரும்பிச் சென்று விடலாம் என்று நினைத்தபோது உள்ளேயிருந்து யாரோ வருவது போலிருந்தது.
"யாருப்பா அது"என்றபடி வெளியே வந்தான் சீமன்.இளம் வக்கீல்.சதுரமுகம்.பெரிய விழிகள்.தடிமனான மீசை.மோவாயில் பள்ளம்.டிஷர்ட்டில் சேகுவேரா படம் இருந்தது.வெள்ளை நிற டிஷர்ட்டிற்கு கருப்பு நிற ஜீன்ஸ் எடுப்பான இருந்தது.
"சார் உங்ககிட்ட பேசனும்"
"என்ன.உள்ள வாப்பா.உட்கார்.என்ன விஷயம்"என்றான் சீமன் அக்கறையாக.உள்ளே வரவேற்பறையில் நவீன ஓவியங்கள் மாட்டபட்டிருந்தது.டீபாயின் மேல் அன்றய தினசரிகளும் வாரஇதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.மிகவூம் பழைய காலத்து மின்விசிறி இருந்தது.உயரமான பழமையான கட்டிடம் என்பதால் காற்றௌட்டம் மிகுந்திருந்தது.
"சொல்லுப்பா.உன்ன ஏதாவது பிரச்சனையா"
"போனவாரம் சைதாப்பேட்டை தேரடி பக்கத்துல உங்களோட ஆர்ப்பாட்டத்தை பார்த்தபோதே உங்ககிட்ட பேசனும்னு தோணுச்சி;"
"சரி அதுக்கென்ன.போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் என் தினவாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்வூகளாகி விட்டன"என்றான் சீமன்.
"நான் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை நேர்ல பார்த்திருக்கேன் சார்.அதை யார் கிட்ட சொன்னலும் நம்ப மாட்டேங்கறாங்க"
'இருப்பா.நான் கேட்கறேன்.நீ விபரமா சொல்லு.அதுக்கு முதல்ல கொஞ்சம் மோர் சாப்பிடு"என்ற சீமன் உள்ளே திரும்பி-
"தோழரே நண்பருக்கு மோர் கொண்டு வாங்க"என்றதும் சமையலாள் மோர் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார்.
"சொல்லுங்க.தைரியமா சொல்லுங்க.எதுவானாலும் பார்த்துக்கலாம்"
"நான் ஒரு பொண்ணை லவ் பண்ணினேன் சார்"
"நல்லது.மேல சொல்லுங்க"
"அந்த பொண்ணை எந்த எதிர்ப்பும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்லை.பதிவூத் திருமணம் செய்துக்கிட்டோம்.அரக்கோணத்துல நடந்தது எங்க திருமணம்.அதன்பின்னர் அங்கேயே ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தினம்"
"அப்புறம் என் ஆச்சு?உங்க பேரை இன்னமும் சொல்லலையே நண்பரே"
"என் பேர் தியாகு.சேல்ஸ் ரெப்பா இருக்கறேன்.ஊர் ஊரா அலைஞ்சி திரிஞ்சி பொய் சொல்ற வேலை.கல்யாணமானதும் எனக்கும் ஒரு குடும்பம் வந்திருச்சின்னு சந்தோஷமா இருந்தேன்"
"அப்ப யாரும் வந்து பிரச்சனை பண்ணாங்களா"
"யாரும் பிரச்சனை பண்ணலை.எங்க காதலுக்கு எதிர்ப்பே இல்லை.ஆனா திடீர்னு ஒருநாள் என் மனைவி அஞ்சலி காணாமப் போயிட்டா"
"அஞ்சலி உங்க மனைவியா"
"அவளை உங்களுக்கு தெரியூமா.."
"தெரியாது.நான் இங்க ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன் சிசியூ வார்டுல இருந்த ஒரு தோழரைப் பார்க்க.அங்க பேஷன்ட்ஸ் பேர் எழுதிப் போட்டிருந்த இடத்துல நின்னுட்டு இருந்தப்ப அஞ்சலிங்கற பேர் அதில இருந்தது.இந்த பேரை மறக்க முடியாது"
"ஏன் சார்"
"அஞ்சலிங்கற பேர் சினிமால திரும்பத் திரும்ப வரும்.மணிரத்னம் எடுத்த அஞ்சலி படத்துல வர்ற குழந்தை அஞ்சலியை மறக்க முடியூமா.பிரபுவை வைச்சி பாலச்சந்தர் எடுத்த டூயட் படத்துலயூம் அஞ்சலிங்கற பேர் பாப்புலர்.அதே மணிரத்னத்தோட அக்னிநட்சத்திரம் படத்துல அமலாவோட கேரக்டர் பெயரும் அஞ்சலிதான்.இந்த பேர் எனக்கு சட்டுனு மறக்காது தோழர்"என்றான் சீமன் எழுந்து போய் பிரிட்ஜ் திறந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்திக்கொண்டே.திரும்ப வந்து உட்கார்ந்தபோது தியாகுவின் கைவிரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தது.
"என்ன ஆச்சு.உடம்பு ஏதும் சரியில்லையா.."
"நீங்க எப்ப பார்த்திங்க அஞ்சலியை.ஐமீன் அஞ்சலியோட பேரை அந்த ஹாஸ்பிடல்ல"
"ரெண்டு வாரத்துக்கு மேல இருக்கும்.ஏன் அது உங்க அஞ்சலியா.."
"இல்லே.இருக்காது.நானே காணாமப்போன என் அஞ்சலியை கண்டுபிடிச்சிட்டேன்.இல்லே.தப்பு.கண்டுபிடிக்கலை.அவளே என் வீடு தேடி வந்துட்டா.தான் காணமப் போயிருந்திருக்கோம்கறது அவளுக்கு நினைவில்லை.கிட்டத்தட்ட டெம்பரரி அம்னீஷியா போலத்தான் இருந்தா.."
"இப்ப எங்க அவங்க.மறுபடி ஏதாவது பிரச்சனையா"
"அவ இல்லை சார்"
"வாட்"
"அஞ்சலி இல்லை"
"மறுபடி காணமா"
"இல்லே"
"அப்ப என்ன ஆச்சு"
"அஞ்சலி இல்லாமப் போயிட்டா"
"அப்படின்னா"
"அவ இல்லாமப் போறதை நானே என் கண்ணாலப் பார்த்தேன் சார்.அந்த அதிர்ச்சியை என்னால தாங்க முடியலை.இதை போலீஸ்ல போய் சொன்னா என்னையே மிரட்டறாங்க.பெண்டாட்டியை கொலை பண்ணிட்டு டிராமா போடறியாடான்னு அடிக்க வராங்க போலீஸ்ல"
"போலீஸ் விஷயத்தை அப்புறம் பார்த்துக்கலாம்.முதல்ல என்ன ஆச்சுன்னு பதட்டப்படாம சொல்லுங்க.தேநீர் கொண்டு வரச்சொல்லவா"என்ற சீமன் பின்னால் திரும்பி-
"தோழரே ரெண்டு தேநீர் கொண்டு வாங்க"என்றான்.
"அவ கலைஞ்சி போயிட்டா சார்"என்றான் நடுக்கத்துடன்.
"பார்டன்"
"பார்ட் பார்ட்டா அஞ்சலி கலைஞ்சிப்போயிட்டா.அவ உடல் கரைஞ்சிப் போயிருச்சி"
"என்ன நண்பா சொல்றிங்க.ஆங்கிலப்படங்கள் மாதிரி இருக்கு.உடல் கரைஞ்சிப்போயிச்சா"
"ஆமாம்"
தியாகு அந்த சம்பவத்தை விவரித்தான்.
முதலில் அஞ்சலி அவன் தோளில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.அவன் சட்டை பட்டன்கைள திருகிக் கொண்டே கண்களை மூடிக்கொண்டு ஏதோ ஒரு பழைய சினிமா பாடலை மெல்ல முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.அப்புறம் அவள் உடல் ஒரு முறை துரக்கிப் போட்டது.திடீரென அவள் முகம் கோணிக்கொள்ள அவள் வாயோரம் இரத்தம் வழிந்தது.அந்த இரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.அவளது கால்கள் உதைத்துக் கொள்ள ஆரம்பித்தன.பதறிப் போன தியாகு அவளை கீழே படுக்க வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவளது உடல் 6 போல குறுகிக் கொண்டது.கால்விரல் நகங்களும் கைவிரல் நகங்களும் முதலில் கழண்டு கொண்டன.அப்புறம் கைகளும் கால்களும் மெழுகு போல தோல் வழண்டு போய் காணப்பட்டது.அவள் முகத்தில் கோடு கோடுகளாக இரத்தம் காணப்பட்டது.அதுவூம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.அப்புறம் மெல்ல மெல்ல அவளது உடல் கரைய ஆரம்பித்தது.தீயில் கருகின மாதிரி ஒரு வித நாற்றம் வந்தது.அவள் சுத்தமாய் கரைந்து போனாள்.அவள் உடல் கிடந்திருந்த இடத்தில் கருப்பாய் கார்பன் போன துகள் துகள்களாகக் கிடந்தன.அஞ்சலி என்ற பெண் அங்கே கிடந்ததற்கான அடையாளமே இல்லை.
"என்ன நண்பா சொல்றிங்க.சினிமா படம் மாதிரி இருக்கு.அது எப்படி ஒரு பொண்ணோட உடம்பு முழுக்க கரையூம்.செத்துப் போயிட்டாங்களா அஞ்சலி"
"அவள் உடல் சிதைஞ்சி கரைஞ்சிப் போச்சே அப்ப செத்துப் போனதாகத்தானே அர்த்தம்"
"ஹாரிபிள்.வாங்க ஏதாவது செய்யனும்.இது எப்ப நடந்தது.ரெண்டு வாரம் இருக்குமா.ஐமீன் அஞ்சலிங்கற பொண்ணு இங்க ஹாஸ்பிடல்ல இருந்ததுக்கு அப்புறமா முன்னாலயா"
"இது நடந்து ஒரு மாசமா ஆகுதுதான் சார்"
"ஒரு மாசமா.இத்தனிநாள் என்ன பண்ணிட்டிருந்திங்க"
"பயந்து போய் ஊரை விட்டு ஓடிப்போயிட்டேன் சார்.என்ன பண்றதுன்னு தெரியலை.என் மேல ஏதாவது தப்பு வந்திடும்னு பயம்.நடந்த கொடூரத்தை என்னாலயே நம்ம முடியலை.பயத்துலயூம் அருவருப்புலயூம் ஊரை விட்டு ஓடிட்டேன்.திரும்ப வந்து போலீஸ்ல சொன்னதை அவங்க நம்பலை.என்னையே கேள்வி கேட்டாங்க.என்மேல கொலைப்பழி சுமத்தி உள்ள தள்ளிவிடுவமோன்னு பயம் வந்திடுச்சி.மறுபடி ஊரை விட்டு ஓடத்தான் இருந்தேன்.அப்புறம் சைதாப்பேட்டை தேரடி பக்கத்துல உங்க மீட்டிங்கை பார்த்ததும்தான் உங்ககிட்ட சொன்னா உதவி கிடைக்கும்னு தோணுச்சி"என்றான் படபடப்புடன்.
"சரி சரி.முதல்ல நல்லா சாய்ந்து உட்கார்ந்துக்கங்க.பதட்டப்படாதிங்க..நான் என்ன பண்ணறதுன்னு யோசிக்கறேன்"என்றான் சீமன்.
இது போன்ற உடல் கரைந்து போகிற நிகழ்வூகள் ஏதும் இருக்குமா என்று இன்டர்நெட்டில் சர்ச் செய்து பார்த்தான்.குறிப்பிடும்படியான சம்பவங்கள் ஏதும் இல்லை.அஞ்சலி என்று டைப் செய்து பார்த்தான்.சாதாரண தகவல்கள்தான் வந்தன.யாராவது பேத்தாலஜிக்காரர்களை அணுகிக் கேட்கலாம் என்று தனக்கு தெரிந்த டாக்டர்களை முயற்சித்தான்.முழு விபரமும் சொல்லாமல் இது போல ஒரு பெண்ணின் உடல் உடனடியாக கரைந்து போக வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டான்.எல்லோரும் டாக்டர் பிரதாப்பை அணுகி கேட்டுக் கொள்ளச் சொன்னார்கள்.பந்து உதைத்த இடத்திற்கே வருவது மாதிரி நான் மருத்துவமனையில் பார்த்த அஞ்சலியின் பெயர் இருந்த இடத்தில்தான் டாக்டர் பிரதாப் பெரிய டாக்டராக இருக்கிறார்.என்னவோ தட்டுகிறதே.எங்கோ இடிக்கிறதே.அந்த மருத்துவமனையிலேயே இதற்கு விடை கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தியாகு பரபரத்தான்.
"சார் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.இத மாதிரி அஞ்சலியோட உடல் கரைஞ்சு போறதுக்கு முன்னால அவளோட வலது கை உள்ளங்கையில இருந்த ரேகைகள் சுத்தமா அழிஞ்சிப் போச்சி"
"என்ன சொல்ற தியாகு"
"ஆமா சார்.அன்னிக்கி பார்த்து ஒரு கிளிஜோசியக்காரன் வந்திருந்தான் தெருவில.எங்க வீட்டுக்கு வந்து அவன் நின்னுட்டே இருந்தான்.பரிதாபமா இருந்தது.சரி விளையாட்டுக்கு அவன்கிட்ட ஜோசியம் பார்க்கலாம்னு உட்கார்ந்தேன்.என்னைப் பார்த்துட்டே இருந்த அவன் திடீர்னு அஞ்சலியைப் பார்த்ததும் பயந்த மாதிரி சொன்னான்"
"என்ன சொன்னான்"
"உங்க மனைவி கையில ரேகை இருக்கான்னு பார்த்துடுங்க சார்.ஆயூள் ரேகை அநேகமாக காணாமப் போயிருக்கும்னான்"
"அப்புறம்"
"அஞ்சலியோட கையைப் பார்த்தேன்.ரேகை சுத்தமா வலது உள்ளங்கையில மறைஞ்சி போயிருந்தது.நான் முதல்ல சீரியசா எடுத்துக்கலை.ஏதாவது ஸ்கின் அலர்ஜியா இருக்கும்னு நினைச்சேன்."
"என்னவோ பெரிசா தப்பா நடக்குன்னு மட்டும் புரியூது.உங்க அஞ்சலிக்கு நேர்ந்த மாதிரி வேறு யாருக்கும் இது போல ஆபத்து நேர்ந்திருக்கான்னு ஆராயனும்.வாங்க முதல்ல நான் பார்த்த ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்திரலாம்"என்று எழுந்தான் சீமன்.
 சீமன் நினைத்த மாதிரியே விஷயம் சீரியசாகத்தான் இருந்தது.டாக்டர் பிரதாப்பைப் பார்த்தபோது அவர் தியாகுவைக் கண்டதும் திடுக்கிட்டது அவரது கண்களில் தெரிந்தது.அவர் அறைக்குள் அமர்ந்திருந்த வருண் அதிர்ச்சியான முகத்துடன் இருந்தான்.
"சார் யாரு.."என்னோட பேஷன்ட்டோட அட்டன்ட்டர்.மிஸ்டர் வருண்.நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க.இவங்களை அனுப்பிட்டு கூப்பிடறேன்"என்ற டாக்டர் பிரதாப் இன்னும் அதிர்ந்து போனார்.திமுதிமுவென்று போலீஸ் ஆட்கள் உள்ளே வந்தனர்.
"டாக்டர் ஹாஸ்பிடல் முழுக்க ரவூன்டப் பண்ணிட்டம்.உண்மையை சொல்லிர்றது நல்லது."
"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.நாங்க ஒரு ரிசர்ச் பண்ணிட்டு இருக்கம்.அதுல மனித உடலை அதாவது மனிதர்களை பிரதியெடுக்க முடியூமான்னு.."
"பிரதியா.."
"ஆமா.ஜெராக்ஸ்னு சொல்வாங்கதானே.அது மாதிர"
"அதெப்படி சாத்தியம் உயிருள்ள மனுஷங்களை ஜெராக்ஸ் எடுக்கறதா"

"சாத்தியம்தான்.ஒரு தாள்ல உள்ள மேட்டரை இருபரிமாண புகைப்படமா எடுத்து அதை தாள்ல பிரதியெடுக்க டோனர்ங்கற கார்பன் பவூடரை பயன்படுத்தறம்.அதேபோல மனிதர்களை பிரதியெடுக்க கனபரிமாணத்தோட முப்பரிமாணமா புகைப்படம் எடுத்து பிரதி எடுக்கறதுக்கு கால்சியம் ஹீமோகுளோபின்னு உடல்ல உள்ள அத்தனை சத்துக்களையூம் செயற்கையா தயாரிச்சி ஒரு இயந்திரத் தொட்டியில வைச்சிருப்பம்.பொத்தானை அழுத்தினதும் ஒரு முழு மனிதஉடல் அந்த மனிதனோட மூளை அதிலுள்ள நினைவூகள் முதற்கொண்டு வெளியில பிரதியா வந்துடுது.ஒரே ஒரு பொண்ணை பிரதி எடுத்து அந்த பொண்ணை அதே அஞ்சலிங்கற பேர்ல பல இடத்துல உலவவிட்டுப் பார்த்தம்.எங்கேயே ஒரு சின்ன தப்பாகிப்போச்சு.முதல்ல ஒரு உள்ளங்கையில உள்ள ரேகை அழிய ஆரம்பிச்சது.அப்புறம் முழு உடலும் அழிஞ்சது.அஞ்சலி தவிர வருண் வினோதினின்னு ரெண்டு பிரதியூம் தயார் பண்ணினம்.பிரதி ஆட்களோட மனத்தை மெஸ்மரிசத்தால கட்டுப்படுத்தி சில இடங்கள்ல உலவ விட்டம்ஆராய்ச்சி 90 சதவீத வெற்றி.இது போல மனிதர்களை தயார் செய்து ராணுவத்துல ஆபத்தான வேலைகளுக்கு பயன்படுத்தறதுக்கான ஆராய்ச்சிதான் இது.அரசு அனுமதியோட செய்த ஆராய்ச்சிதான்.நான் என்னையூம் விட்டு வைக்கலை.உங்ககிட்ட பேசிட்டு இருக்கற நானும் டாக்டர் பிரதாப்போட பிரதிதான்."என்றபோதே வாயோரம் இரத்தம் கருஞ்சிவப்பாக வழிய அவர் உருக ஆரம்பித்தார்.(முற்றும்)
Previous
Next Post »