ஏதாவது எழுதேன் என்கிறது மனது.எழுதாதே என்பதும் மனது...



 எழுத ஆரம்பித்தபோது எல்லோரையூம் போலத்தான் பால்பாயின்ட் பேனாவால் எழுதித் தள்ளினேன்.என் கையெழுத்து ஒரு புதையல் ரகசியக் குறியீடு போல இருப்பதால் யாருக்கும் புரிவதில்லை.பத்திரிகை அலுவலகங்களில் அனுப்பிய வேகத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள்.சில அல்ப உதவியாசிரியர்கள் மட்டும் தங்களை ஏதோ சென்ட்ரல் வேல்யூவேஷனில் பேப்பர் திருத்துவதாக நினைத்துக் கொண்டு குறுக்கே கோடு போட்டு தப்பு என்பதாக அனுப்பி வைத்து விடுவார்கள்.
 அப்புறம் சின்னதாக லாப்டாப் அளவூள்ள ஒரு இங்கிலீஷ் டைப்ரைட்ரை வாங்கி அதிலுள்ள ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பிய்த்துப் போட்டு விட்டு தமிழ் எழுத்துக்களை (அப்போது எடை போட்டு எழுத்துக்கள் வாங்கலாம்) வாங்கி வந்து ஸோல்டரிங் செய்து தமிழ் டைப்ரைட்டராக்கி அதில் கதைகள் அடித்திருக்கிறேன்.அதனை ஊர் ஊராக கிளிஜோசியக்காரன் போல சுமந்து கொண்டு சென்றதும் உண்டு.அப்புறம் தவியாய் தவித்து எனது முதல் கம்ப்யூட்டரை 1995ல் நானே உதிரி பாகங்கள் வாங்கி அசெம்பிள் செய்து பாரதி மென்பொருளை பயன்படுத்தி கதைகள் தட்டியிருக்கிறேன்.
 அப்போது பத்திரிகைக்காரர்களுக்கு தலையில் நாலாபக்கமும் கொம்புகளாக முளைத்துத் தள்ளியிருந்த காலம். ம் என்றால் போதும்.ப்ளாக் லிஸ்ட்டில் போட்டு விடுவார்கள்.எப்போதும் தரையிலிருந்து அரை இஞ்ச் மிதந்த மாதிரிதான் நடப்பார்கள்.சர்க்குலேஷன் அதிகம் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் மனிதர்களை புழு போல பார்ப்பார்கள்.நல்ல வேளை கூகுள் வந்து இவர்களது முதுகை முறித்துப் போட்டது.
 நிற்க.
 சொல்ல வந்த விஷயம் வேறு.
 ஆரம்பத்தில் கவிதைகள்தான் எழுதிக் கொட்டிக் கொண்டிருந்தேன்.நடைபாதை இட்லிக் கடையில் இட்லிகளை அவித்துக் கொட்டு போல ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பேன்.ஆல்இந்தியா ரேடியோவில் அப்போதெல்லாம் இளையபாரதம் என்றொரு நிகழ்ச்சி வரும்.திருச்சி வானொலியில் அப்போது செம வாசகர்கள் இருப்பார்கள் எனக்கு.ஸ்ரீநிவாசராகன் என்னும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்னை செதுக்கி என் எழுத்துக்களை தொடர்ந்து காற்றில் கலக்க வைப்பார்.அப்புறம் அவர் டிரான்ஸ்பரில் போய் விட கே.பி.ஸ்ரீநிவாசன் என்றொரு இன்னொரு ஆபீசர் வந்தார்.இவரிடம் நான் சண்டை போடாத நாட்கள் குறைவூ.என்னை மடக்குவதாக ஒரு முறை பேச்சு வாக்கில் கவிதை எல்லாம் வேணாம்.அதுக்கு தடுக்கி விழுந்தா நிறைய பேர் இருக்காங்க.கதை எழுதிட்;டு வாங்க என்றார்.
 கதையா?
 என்னை ஏதோ நாடு கடத்துகிறார்களா என்பது போல பார்த்தவாறு திரும்பி வந்து விட்டேன் என்றாலும் கதை எழுதிக் கொடுத்தேன்.இனி கதையே எழுதுங்கள்.கவித வேண்டாம் என்றார் கறாராக.அப்புறம் அதே ரேடியோ ஸ்டேஷனில் டிராமா எழுதலாம் என்றால் வயசு பத்தாது என்றார்கள்.முப்பது வயதிற்குள்ளாக இருந்தால் இளையபாரதம்தான் கதி.டிராமா எழுதுவதற்கெல்லாம் வழுக்கை விழுந்து தொப்பை போட்டு ரிட்டயர்டிற்கு நான்கு மாதம் இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட எழுத்தாளர்கள்தான் அங்கே அப்போது டிராமா எழுதிக் கொண்டிருந்தார்கள்.
 நானும் எழுதியே தீருவேன் என்று அடம் பிடித்து அங்கே டிராமா செக்ஷனில் இருந்த திரு.லோகசிகாமணி அவர்களிடம் லாபாயின்ட் எல்லாம் பேசி(கிரியேட்டிவ் வொர்க்கிற்கு வயது வரம்பு கூடாது.தொட்டிலில் படுத்திருக்கிற உச்சா போகிற குழந்தை டிராமா எழுதினால் கூட நீங்க போடனும் ரேடியோவில என்று) டிராமா எழுதித் தள்ளினேன்.
 அங்கே எப்போதும் ஆபீசில் நடக்கிற வெத்துக் கதையாகத்தான் நாடகம் போடுவார்கள்.இவர்கள் எழுதும் நாடகங்களில் வரும் பெண்டிர் தங்களது காதலர் அல்லது கணவரை 'என்னங்க" அல்லது "அத்தான்" என்றுதான் அழைக்கும்படி எழுதுவார்கள்.நான் என் டிராமாவில் 'டேய் லவ்வா..அடேய் புருஷ்.." என்று எழுதினால் எக்ஸ்ட்ரா டெரஸ்ட்டரியல் போல பார்ப்பார்கள்.பையன் ரொம்பக் கெட்டுப் போயிருக்கானே என்று யோசிப்பார்கள்.காதலனை டேய் லவ் மடையா என்று பொண்ணுங்க அழைக்கறது தப்பாங்க என்று தக்கிணியூன்டு கிண்ணத்தில் வனில்லா ஐஸ்க்ரீமை மைக்கல்ஸ் ஐஸ்க்ரீமில் கொண்டு வந்து வைக்கும் பெரியவரை மிரள வைத்திருக்கிறேன்.ஒரு தரம் டிராமா செக்ஷனுக்கு போய் ரேடியோ ஸ்டேஷனில் 'ஃபேடல் அட்ராக்ஷன்' மாதிரி ஒரு செம கதை வைத்திருக்கிறேன்.மைக்கள் டக்ளஸ் படம்.சிப்பியில போட்ருக்கான் பாருங்க.அதை விட க்ரூயல் ஸ்டோரி.ரேடியோ ஒரு பொண்ணு தனக்குத்தானே அபார்ஷன் பண்ணிக்கிறதை எப்படி காண்பிப்பிங்க.ஐ மீன் டயலாக்ல..."என்று அவர்களை கொதிப்படைய வைத்திருக்கிறேன்.பின்பு அதே கதையை தினமலர் கதை மலரில் "விபரீதமாய் ஒரு முத்தம்" என்று எழுதினேன்.
 இன்னொரு தரம் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போனால் கீழ்தளத்தில் மும்மூர்த்திகள் ஃபோட்டோ இருக்கும்.அங்கேயே நான் கதையை சொல்லத் தொடங்கினேன்.
 புதுசா ஒரு டிராமா சார்.
 ஃபார்ன் ஐடென்டிடி இருக்கில்ல.ராபர்ட்லுட்லம்.அதுல வர்றதை விடவூம் பிரமாதமான இன்டியனைஸ்டு ஸ்டோரி.க்ரைம்.திகில் கதைன்னதும்-
"தம்பி இன்னிக்கு ரேடியோ ஸ்டேஷன் லீவூப்பா" என்பார்கள்.ஆனா அதே போன்ற ஒரு கதையை பிரதாப்போத்தன் கமல்ஹானை வைத்து மாருகோ மாருகோ என்று எடுத்து விட்டார்..முதல்முறையாக க்ரைம் கதைதான் எழுதுவேன்.அதுவூம் ஹிட்காக்தனமாகத்தான் எழுதுவேன் என்று அடம் பிடித்து வருடத்திற்கொரு முறை ஒரு மணி நேர நாடகத்தை எழுதியிருந்திருக்கிறேன்.சென்னை துரர்தர்ஷனிலும் இதே போல என் டிராமா போடாததற்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் விக்கிரமனை அழைத்துக் கொண்டு வம்பிழுத்து எம்.எஸ்.பெருமாள் என்ற டிராமா புரொடியூசரை (அவள் ஒரு தொடர்கதைப் படத்தின் கதை இவர் எழுதியதுதுதான்) தொந்தரவெல்லாம் செய்து டிடியிலும் மர்ம க்ரைம் நாடகம் எழுதினேன்.
 அப்புறம் வாரப்பத்திரிகைள் மாதப்பத்திரிகள் என்று கதைகள் தொடர்கதைகள் நாவல்கள் என்று எழுதி ஒரு கட்டத்தில் எழுதுவது அலுப்படையச் செய்து விட்டது.
 இப்போதெல்லாம் என்னை மற்றவர்கள் நினைவூ வைத்துக் கொள்ளவேண்டுமே என்று டிவிட்டரில் ஏதாவது கவித போடுவதுண்டு.
 ஆனால் இப்போதும் நமுக்கு நமுக்கு என்று லாப்டாப்பில் கதை தட்டிக் கொண்டிருக்கப் பிடிப்பதில்லை.அதற்கு பதிலாக காட்சிகளாக சீன் பை சீன் எழுதி குறும்படமாக ஐந்து ஐந்து நிமிடங்களுக்கு படங்களாக எழுதித் தள்ளிவிடுவதற்குத்தான் விருப்பமாக இருக்கிறது.
 கதை எழுதறது என்றால் லாப்டாப்பையோ டாப்லட்டையே எடுத்துக் கொண்டு போய் தனி ஒருவனாய் எழுதி விடலாம்.
 குறும்படம் என்றால் அதற்கு காஸ்டிங் காமரா எடிட்டிங் இசை கலரிங் போஸ்ட் புரொடக்ஷன் (முக்கியமாக ஃபீமேல் ஆர்ட்டிஸ்ட் கிடைப்பது கஷ்டம்.கிடைத்தாலும் கஷ்டம்!) என்று ஒரு வண்டி நிறைய ஆட்கள் தேவையாக இருக்கிறது.
 எனினும் சரியான ஒரு டீம் அமைந்தால்- 
 மாதம் ஒரு ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரையிலான குறும்படங்களை தொடர்ந்து  கதை திரைக்கதை அமைத்து வசனமெழுதி இயக்க விருப்;பமாக இருக்கிறது.
 சற்றே லேட்டாக இந்த புதுவருஷ சபதத்தை மேற்கொள்கிறேன்.

Previous
Next Post »