நடுநிசியில் ஓர் உருவம்... -விஜயநிலா


இருட்.
அதாகப்பட்டது பாதி இருட்டு பாதி வெளிச்.அந்த புறவெளியில் அவர் கையில் ஒரு புத்தகத்துடன் நின்றிருந்தார்.அவரைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்.அதற்கு முன் ஹேப்டோமைம் பற்றி.
 ஹேப்டோமைம் என்றால் அது ஒரு தொழில் நுட்பம்.மொபைல்களில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே பார்த்திருக்கிறீர்கள் அல்லவா.அது போல இதுவூம் ஒரு டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேதான்.ஆனால் இதனை காற்றில் தொடலாம்.இந்த தொடுதிரை காற்றில்தான் இருக்கும்.
 ஜப்பான் பல்கலைக் கழகத்தில் யஸூவாகி மொன்னை என்பவர் தலைமையில் ஒரு டீம் இதனை ஆராய்ச்சி செய்து வெளியே கொண்டு வந்து விட்டார்கள்.
 இது ஹோலோகிராஃபிக் புரொஜக்ஷனின் அடிப்படையில் இயங்கிறது.என்ன ஒன்று சுந்தர் சி. மாதிரி இயக்குநர்கள் இதனை பேய்ப்படம் எடுக்கப் பயன்படுத்தி விடுவார்கள்.சற்று சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு முப்பரிமாண தொடுதிரையாக இருக்கும்.
 முதன் முதலில் 1977ல் ஸ்டார்வார்ஸ் படத்தில் ஹோலோகிராஃபிக் உருவம்  கேரக்டர்களின் எதிரே வந்து பேசுவதை அறிமுகப்படுத்தினார்கள்.அப்போது திருச்சி அருணா தியேட்டரில் படம் பார்க்க வருபவர்களுக்கு ஹோலோகிராஃபிக் என்றால் என்ன என்று அஞ்சால் அலுப்பு மருந்து ரேஞ்சுக்கு எளிய தமிழில் விளக்கஉரையை பிட் நோட்டீஸாக அடித்து டிக்கெட்டுடன் கொடுத்து உள்ளே அனுப்புவார்கள்.அப்போதெல்லாம் அருணா தியேட்டரில் 20யத் செஞ்சுரி ஃபாக்ஸ் படங்களும் பிளாசா தியேட்டரில் வார்னஸ் பிரதர்ஸ் படங்களும் தல தளபதி ரேஞ்சுக்கு ஓடும்.அப்புறம் அருணா தியேட்டர் முகம் மாறிப்போய் ஆண்டவன் கட்டளை பாகப்பிரிவினை பார்த்தால் பசி தீரும் என்று சுணங்கிப் போய் விட்டது.இப்போது அருணாவில் படம் போடுகிறார்களா என்று தெரியவில்லை.
 வெறும் பதினாறு கேமராக்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹோலோகிராஃபிக் 3டி படத்தை எடுப்பது எப்படி என்றெல்லாம் இணையத்தில் கட்டுரைகள் இருக்கின்றன.சலித்துப் படிக்க பொறுமை வேண்டும்.
 ஹேப்டோமைம் புழக்கத்தில் வந்து விட்டால் வேகாத வெய்யிலில் செய்வீர்களா செய்வீர்களா என்று ஒரு பக்கத்திலும் செய்தார்களா செய்தார்களா என்று இன்னொரு பக்கத்திலும் உரக்கக் கத்த வேண்டாம்.ஹேப்டோமைம் விடியோவை தயார் செய்து மக்கள் கூட்டத்திற்குள் அனுப்பி விட்டால் இளைய தலைவரிடம் வாக்காளர்கள் தாராளமாக காற்றில் கை குலுக்கலாம்.
 அப்புறம் சொல்லவில்லையே.
 அந்த ஒடிசல் மனிதர் கையிலுள்ள புத்தகத்துடன் நின்றிருந்தார்.ஆவியாக இருக்குமோ என்று முதலில் ஒரு அசட்டுச் சந்தேகம் தோன்றியது.அருகே போய் கேட்டு விடுவோமோ என்று நினைத்தபோது அவரே அருகே வந்தார்.
 "அதென்ன புத்தகம் என்று பார்க்கிறாயா.த கம்ப்ளீட் புக் ஆஃப் ஹோலோகிராம்ஸ்.ஜோசப் கஸ்பர் எழுதனது.இது சும்மா காத்துல ஆர்ட் வரையற மாதிரி டச் ஸ்கிரீன்லாம் எதிர்காலத்துல வந்துரும்.கம்ப்யூட்டருக்கு கூட டிவைஸ் தேவைப்படாது.காத்துலயே தட்டச்சு செய்து காத்துல இருந்தே பத்திரிகைகளுக்கு கதை அனுப்பனும்னா அனுப்பிரலாம்.படிச்சிட்டு காத்துலயே  'பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறௌம்னு" தோராயமா திருப்பி அனுப்பிருவாங்க" என்றார்.
"நீங்க அவர்தானே.நீங்க கூட ஆவியா வருவிங்களா.உங்களுக்குத்தான் ஆவி  பேய் இதெல்லாம் கதைல கூட நம்பிக்கை கிடையாதே உங்களுக்கு"
"ஹ! இது யாரோ பண்ற விஷமம்.இன்னிக்கி வேணும்னே என்னை யாரோ ஹோலோகிராஃபிக் இமேஜா புரொஜக்ஷன் பண்ணியிருக்கா.பை த வே.நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள இந்த சம்பாஷணை கூட ஏன் யாரோ ஒருத்தரோட கனவில வர்ற ஸீனா இருக்கக்கூடாது" என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அந்த உயரமான ஒடிசல் மனிதர் காற்றில் மறைந்து போனார்.
திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு வந்தேன்.
அங்கே யாருமில்லை.யாரும் என் கூட பேசின மாதிரி தெரியவில்லை.
சற்றே கிட்ட வாருங்கள்.உங்க கிட்ட மட்டும் சொல்லிர்றேன்.
அவரை நான் பார்த்தது பேசினது உண்மைதான்.
பின்குறிப்பு:இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்ததினம் என்று பேஸ்புக்கில் மகா ஜனங்கள் ஸ்டேட்டஸாகப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியூமா?

keywords:writer sujatha,holography,university of japan,air as touch screen,haptic holographic touch screen
Previous
Next Post »