வீடு

'அங்கே
ஓர் வீடு இருந்தது
வாசலில் வேப்பமரம்
காற்றைக் கட்டிபோட்டிருக்கும்
காகிதப்பூச்செடியூம் நந்தியாவட்டையூம்
தலைசீவிக் கொண்டிருக்கும்
தென்னை மரங்கள்
வீட்டிற்கு நாற்புறமும்
திமிறிக் கொண்டிருக்கும்
மாடிப்படி திருப்பத்தில்
கல்கி சாண்டில்யனுடன்
இரும்புக்கை மாயாவியூம் லாரென்ஸ் டேவிட்டும்
உட்கார்ந்திருப்பார்கள்
தாயக்கட்டத்தில் சோழிகள் குலுங்க
உள்ளே ரேடியோ சிலோன்
மெல்லப் பாடிக்கொண்டிருக்கும்
பின்னால் உள்ள கிணற்றருகே
சீயக்காய் வாசனையூம்
கொழும்புத் தேங்காய் எண்ணையூம்
இன்னமும் காற்றில் மிச்சமிருக்கும்
தொலைவில் எங்கிருந்தோ
சன்னமான ஒலியில்
சின்னஞ்சிறு பெண்போலே
என்று
சீர்காழி மிதந்து வர
அப்போதெல்லாம்
அந்த வீடும் அந்த வீட்டுப் பெண்களும்
காணக்கிடைக்காத அற்புதமென்பது
அப்போது
யாருக்கும் தெரியவில்லை
அந்த வீடு இருந்த இடமென்ற
அடையாளம்
இப்போது ஏதுமில்லை
அந்த வீட்டுப் பெண்கள் கூட
தீப்பெட்டி சைஸ் குடியிருப்புகளில்
மொபைல்ஃபோனுக்குள்
புதைந்து போய்விட்டார்கள்
எப்போதாவது
அவர்களும் அடையாளம் தெரியாமல்
பேஸ்புக்கில்
எட்டிப்பார்ப்பதோடு சரி'
-விஜயநிலா


Previous
Next Post »