ஜூமாக்கா ஜூ! --விஜயநிலா

ஜூமாக்கா ஜூ
                               --விஜயநிலா

 இது என்னுடைய ப்ரைவேட் ரூம்.இங்கே லாரா ராப்ஸனுக்கும் அனாகோர்னிகோவா தவிர யாருக்கும் அனுமதி இல்லை.இப்போது என்னுடைய இன்னொரு பக்கத்தை உங்களிடம் சொல்லலாம் என்றிருக்கிறேன்.நான் சொல்லப் போவதை நீங்கள் நம்ப வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.பிடிக்காதவர்கள் தாராளமாக விலகிக் செல்லலாம்.ஆனால் அப்படி சென்றால் குறக்களி வித்தையில் சொல்வார்களே அது போல ரத்தம் கக்கிச் சாவீர்கள்.
 எனவே பொறுமை.
 இப்போது என்னைப் பற்றி.நான் தமிழ்ச்செல்வன்.சுருக்கமாய் ல்வா! கார்த்திக் என்று ஹீரோவிற்கு பெயர் வைக்கிற சீஸன் எல்லாம் முடிந்து போய் விட்டது.வெயிட் செகன்ட்.ஹீரோ என்றா சொன்னேன்.
 நானும் 'கெட்டே பய சார் இந்த தமிழ்ச்செல்வன் டைப்'.அதாவது வில்லன்.யெஸ் இந்த கதையில் நான் வில்லன்தான்.ஆனால் வெற்றிகரமான வில்லன்.
 சுத்தமாய் ஒரு கொலை செய்திருக்கிறேன்.
 ஆமாம்.
 கொலை!
 அதுவூம் யாரை என்று நினைக்கிறீர்கள்.
 லிஸாவை!
 கேள்விப்பட்டிருப்பீர்களே..லா..லலல்லாhhh என்று அருவியின் அத்தனை தண்ணீர்த்துளியூம் அவள் உடலை ஆசை ஆசையாய் தழுவிக்கொள்ள தலை கீழாய் விழுந்தபடி...யெஸ்.அதே சோப்பு விளம்பரம்தான். அது போன்ற தருணங்களில் வைட் ஆங்கிளை உபயோகிப்பேன்.அல்லது பெரிய அப்பச்சர் நம்பரை f/11முதல் f/16வரை வைத்துக் கொண்டு நியூட்ரல் டென்ஸிட்டி ஃபில்டரை வைத்துக் கொள்வேன். 1/200 வினாடியில் படமெடுக்க வேண்டுமென்றால் 1/25ல் ஷட்டர் ஸ்பீடை வைத்துக் கொள்வேன்.இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு திமிரும் அருவியூடன் போட்டி போட்டுக் கொண்டு லிஸாவின் அழகு காமராவை திருடிக் கொண்டு விடும்.அவளை மாடலிங் உலகில் நான்தான் அறிமுகப்படுத்தினேன்.அதற்கு முன் தமிழ்ப்படங்களில் எல்லாம் காட்டுகிற மாதிரி சுடர்மணி ஜட்டி விளம்பரமும் லோக்கல் டிவி சேனல் திறப்புவிழா காந்திமதி கட்பீஸ் சென்டர் என்று படு லோக்கலாய் திரிந்து கொண்டிருந்தவள்.
 அவளை என் காமராவின் உள்ளே பிரித்து பார்த்தேன்.காமராவே அசந்து போய் வெட்கத்துன் ஷட்டரை மூடிக் கொண்டது.ஒரே புகைப்படம்தான் வந்தது.ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் அட்டைப்படமாக.
 கொத்திக் கொண்டு போய் விட்டார்கள்.
 அடுத்த டிசம்பரில் கல்யாணம் என்று சொல்லியிருந்தாள்.கல்யாணம் நீங்கள் நினைப்பது போல வேறுயாருடனும் அல்ல.என்னை காதலிப்பதாக சொல்லிக் கொண்டு என் விரல்களைப் பற்றிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.
 எங்கே லிஸா என்று நீங்கள் தேடுவது தெரிகிறது.அவளை உங்களுக்கு காண்பிப்பதாக இல்லை.காண்பிக்கவூம் முடியாது.லிஸா செத்துப் போய் விட்டாள்.
 ! நான்தான் அவளை கொலை செய்தேன்.சரி ப்ளாஷ்பேக்கிலாவது அவளை  இருட்டான நிழலான இடத்திலும் ஜாக்கிங் போவது போல பின்பக்கம் அசைய க்ளோஸ் அப்பிலும் ஷவரை திருகி விட்டு தண்ணீரையூம் சோப்பையூம் தவிர மற்ற எல்லாவற்றையூம் காண்பிக்க வேண்டியதுதானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால் காண்பிப்பதாக இல்லை.ஒரு வேளை செத்துப் போன லிஸா சுந்தர்.சி படங்களில் எல்லாம் வருகிற மாதிரி பேயாகவோ பிசாசாகவோ (இரண்டுக்கும் 6 வித்தியாசங்கள் இருக்கிறதா?) வந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்.பார்த்துக் கொல்லுங்கள்?
 நான் நன்றாகப் படம் எடுப்பேனே தவிர எனக்கு காமரா தவிர வேறேதும் தெரியாது.லிஸா புகழின் உச்சியில் ஏணிப்படியில் ஏறாமல் எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்தாள்.
 நாம்தானே இவளை முதலில் நன்றாகப் படமெடுத்தோம்.நாம்தானே இவளை புகழ்வெளிச்சத்தின் உள்ளே இறக்கி விட்டோம்.அதனால் இவளை நாமே காதலிப்பதுதானே சரி.எவனாவது ஹிந்திப்பட நடிகனோ டென்னிஸ் ஆட்டக்காரனோ வந்து ஆட்டையைக் கலைத்து விட்டால் என்னாவது.
 அதனால்-
 சற்று லேட் என்ட்ரியாக இவனை அறிமுகப்படுத்துகிறேன்.
 கணேஷ்.
 இல்லை.துப்பறிகிற கணேஷ் எல்லாம் இல்லை.லவ் பண்ண அடுத்த ஆளை வளைக்க ஐடியா கொடுப்பதில் இவன் ஐடியா மணியை எல்லாம் மிஞ்சி விடுவான்.கிட்டத்தட்ட ஒரு கோடி நிகழ்ச்சியில் வரும் 'வாத்யாரே"க்கு நிகரானவன்.
 இவன் ஒவ்வொன்றாக கொடுத்த ஐடியாக்களை வைத்துதான் லிஸாவை வளைத்தேன்.என்னை விட்டு போய் விடாதபடி லாக்கரில் வைத்துக் கொண்டேன்.அதன்பின் லிஸா என்னை லவ் பண்ணிய தினங்களை எல்லாம் எழுதினால் நீங்கள் பொறாமையில் எழுந்து போய் விடுவீர்கள்.அல்லது வெந்து கீழே விழுந்து விடுவீர்கள்.
 லிஸா எனக்கே எனக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் முதல்முறையாக லிஸாவின் கண்களில் பொய் தெரிந்தது.
 சற்று புத்திசாலித்தனமான திருட்டுத்தனம் தெரிந்தது.
 லிஸா?
 ட்ராக் மாறுகிறாளா?
 வேறு எவனையாவது எங்காவது உதடுகளால் உதடுகளை தடவிக் கொண்டிருக்கிறாளா?யாரவன்? குத்துங்க எஜமான் குத்துங்க என்று சொல்லி முடிப்பதற்குள் அவனைக் குத்தி விடலாமா என்று நினைத்தால்..
 வெயிட் மினிட்.
 சற்று தாகமெடுக்கிறது.தண்ணீர் குடித்துக் கொள்கிறேன்.
 என்ன சொல்லிக் கொண்டிருந்....தேன்.
 லிஸா துரோகம் செய்கிறாள்.
 எந்த ஒரு க்ரைம் ப்ளாட்டும் பணம் துரோகம் பழிவாங்கல் இந்த மூன்றுக்குள் முடிந்து விடும் என்று ஆன்றௌர்கள் சான்றௌர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் அல்லவா அதே போலத்தான் என் நிலையூம்.
 லிஸா எனக்கு துரோகம் செய்கிறாள்.
 அது மட்டுமல்ல.என்னை கத்தரித்து விட்டு அவனை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாள்.
 தற்செயலாகத்தான் அந்த எழுத்துக்கள் என் பார்வையில் பட்டது.அவள் தன்னுடைய டிரஸ்ஸிங் டேபிளில் இருந்த கண்ணாடியில் எல்.ஜி என்று எழுதியிருந்தாள்.
 எல்.ஜி!
 எல் என்றால் லிஸா!
 அப்படியானால் ஜி?
 இதற்கிடையே எல்ஜி என்ற பெயரை இன்னொரு நாள் அவளது மொபைலில் பார்த்தேன்.
 நான் இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவே இல்லை.என்னிடம் தனி ஆளாக மாட்டிக் கொண்டு விட்ட கணேஷ் லேசான அதிர்ச்சி கூட இல்லாமல்
"ஜூமாக்கா ஜூ"என்றான்.
"பாவி நீயா..நீதானேடா எனக்கு லிஸாவை மடிக்க ஐடியா கொடுத்தே"
"அது தொழில்.ஐடியா சும்மாவா கொடுத்தேன்.அதுக்குத்தான் சர்வீஸ் சார்ஜ் வாங்கிட்டேனே.இது லவ்.லிஸாவூம் நானும் லவ் பண்றம்"
"என்னடா சொல்ற.நீயா? லாஜிக்கே ஒட்டலையேடா"
"இதுக்குப்பேர்தான் பாக்யராஜ் தியரின்னு பேரு.சிகப்பு ரோஜாக்கள்ல ரெஸ்ட் ரூம்ல பாக்யராஜ் என்ன சொல்வார்.எத்தினி நாள்தான் நானும் தொழிலாளியா இருக்கறது.முதலாளியாகனும்னு கமல்ட்ட பேரம் பேசுவார்ல.அதேதான் பாஸூ.நீயே அவளை அடையனும்னா எப்படி.எனக்கு அவ கிடைச்சா என் ஸ்டேடட்ஸ் உயரும்.நாலு ஊர்களுக்கு விமானத்துல பறக்கலாம்.ஃபைவ் ஸ்டார் வாழ்க்கை வாழலாம்.ஜூமாக்கா ஜூ"என்றான்.
 குத்துங்க எஜமான் குத்துங்க...
 பாக்யராஜ் வசனம் ஞாபகம் வர...
 குத்தினேன்.
 கணேஷ் செத்துப் போனான்.
என்ன ஒரு காம்பினேஷன் பாருங்கள்.
கூட இருந்தே குத்தியிருக்கிறான் கணேஷ்.
எல்.ஜி.
 அடுத்தது லிஸாவை தீர்த்துக் கட்ட வேண்டும்.இதற்கு நான் அதிகம் சிரமப்படவில்லை.அந்த காலத்தில் மாசநாவல்களில் வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருப்பார்களே அதில் எதையாவது பயன்படுத்தலாம் என்றபோது என் பேஸ்புக் நண்பன் உதவினான்.அவனது ஐஸ்ஃபாக்டரியை நஷ்டம் என்று மூடிவிட்டானாம்.அந்த இடத்தை என் காமராவால் படம் எடுத்து அவூட் ரைட்டாக விற்று விடலாம் அல்லது அந்த இடத்தை அப்படியே இடித்து விட்டு பாங்க் லோன் வாங்கி அபார்ட்மன்ட் கட்டி விடலாம் என்று...
 இதெல்லாம் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது.
 நீங்கள் பார்க்கிற என்னுடைய ப்ரைவேட் ரூம் இருக்கிற இந்த ஃப்ளாட் இருக்கிற இந்த அபார்ட்மென்ட் இருக்கிற இடத்தில்தான் அந்த ஐஸ்ஃபாக்டரி இருந்தது.அபார்ட்மென்ட்டிற்கு கூட தன் ஜஸ்ஃபாக்டரியின் நினைவாக 'ஐஸ்பெர்க் ஜங்கிள்" என்று பெயரிட்டிருக்கிறான்.
 அந்த ஐஸ்ஃபாக்டரியில்தான் யாருக்கும் தெரியாமல் அவளை தண்ணீருக்குள் அமிழ்த்தி...பெரிய பாளமாக ஐஸ்கட்டியை உற்பத்தி செய்து ...ஜஸ்ட்லைக் தட் லிஸா செத்துப் போனாள்.
 எல்ஜியில் முதலில் ஜி காலி.
 அதாவது கணேஷ் செத்துப் போனான்.
 அடுத்தது எல்...அதாவது லிஸா செத்துப் போனாள்.
 அதுவூம் எப்படி உடலெல்லாம் சில்லிட..டெம்ப்ரேச்சர் குறைந்து கொண்டே வர...கடுங்குளிரில் விரைத்துப் போய் செத்துப் போனாள்.
 இனிமேல் என்ன...ராகவாலாரென்ஸ் சுந்தர் சி படங்களில் வருவது போல லிஸா ஆவியாக வரப்போகிறாளா என்ன?
 வெயிட்...
 ஏன் இப்படி குளிர்கிறது?
 என்ன ஆகிற்று எனக்கு?
 ஏன் என் உடல் நடுங்குகிறது?
 கொஞ்சம் இருங்கள்.
 எதிரே தெரியூம் ஸ்பிளிட் ஏசியைப் பார்க்கலாம்.
 வெப்பநிலை
 18லிருந்து குறைந்து கொண்டே
 17
 16
 10
  8
  6
  2
  1
  0 என்று வர....
 மைகாட் நீங்களாவது சொல்லக் கூடாதா.இப்போதுதான் ஏசியின் பிரான்ட் என்ன என்று கூர்ந்து கவனிக்கிறேன்.
 அது ஒரு LG ஏர்கன்டிஷனர்.
 அந்த எல்ஜி என்ற பெயரிலிருந்து  லிஸாவின் சிரிப்புசத்தம்..
 என் கையிலிருக்கும் ஏசியின் ரிமோட் வேலை செய்ய மறுக்க குளிர் பிடிவாதமாய் 0விலேயே அடம் பிடிக்க...
 நாளைக்கு சன் நியூஸில் பாருங்கள் மிச்ச விபரங்களை.

                                                                 -----------------------
இந்த கதை  காப்புரிமைக்காக (Copyright) பதிவூ செய்யப்பட்டிருக்கிறது.
Previous
Next Post »